தலையங்கம்-அக்டோபர் 2025

Kidswings_pic

எல்லோருக்கும் வணக்கம்.

அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய நாள். காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற கோட்ஸே என்ற தீவிரவாதியைப்  போராளியாகக் கொண்டாடும் ஆபத்தான காலக்கட்டத்தில் வாழ்கிறோம். குஜராத் மாநிலத்தில் பிறந்து, தென் ஆப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றி, அஹிம்சை வழியில் போராடி ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி பற்றி இளைய தலைமுறையினர் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கை வரலாற்றை அவசியம் வாசிக்க வேண்டும்.

மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் விதமாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் சிறந்து விளங்கிச் சாதனை செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில், நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த இந்த விருதை நிறுவியவர் அறிவியல் அறிஞர் ஆல்ஃபிரெட் நோபல். ஒவ்வோராண்டும் ஸ்டாக்ஹோமில் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவு நாள் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படும்.

2025ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மேரி ப்ரான்கோவ் (Mary E.Brunkow), ஃப்ரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), என்ற அமெரிக்கர் இருவருக்கும் ஷிமோன் சககுஷி (Shimon Sakaguchi) என்ற ஜப்பானியருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் டிவோர்ட் (Michel H. Devoret), ஜான் மார்டின்ஸ் (John M. Martinis) ஆகிய மூவருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் இயற்பியல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் விதமாக எழுதியமைக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த சுசுமு கிடகாவா (Susumu Kitagawa), ஆஸ்திரேலிய விஞ்ஞானி ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson), அமெரிக்க விஞ்ஞானி ஓமர் எம். யாகி (Omar M. Yaghi) ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மாணவர்கள் இந்த அறிவியல் அறிஞர்கள் குறித்தும், இவர்கள் செய்த ஆராய்ச்சிகளின் மூலமாக மனிதகுலத்துக்கு இவர்கள் செய்த சேவைகள் குறித்தும் நாளிதழ்களிலும், புத்தகங்களிலும் வரும் செய்திகளை அவசியம் வாசிக்க வேண்டும். பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பே, இவர்களது  சாதனைகளுக்கு அடிப்படை என்ற புரிதல் கிடைக்கும்.

குழந்தைகள் சிறுவயதிலேயே பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். பெற்றோர் உங்கள் ஊருக்கு அருகாமையில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்கு அவசியம் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் பிறந்த நாளில் சிறந்த புத்தகங்களை வாங்கிப் பரிசாகக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *