லண்டனில் வசிக்கும் இந்நூலின் தொகுப்பாசிரியரான பிரபு ராஜேந்திரன் சிறார் இலக்கியம் சார்ந்தும், குழந்தைகள் சார்ந்தும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழின் ஆசிரியரும், கதைசொல்லியுமான இவர், ‘ஓங்கில் கூட்டம்’ என்ற அமைப்பின் வழியே இளையோர்க்கான குறுநூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கமும் இணைந்து இந்நூலை வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு முக்கியமான 15 சிறார் எழுத்தாளர்கள் கூடி, ஓர் அமைப்பாகச் செயல்படுவதன் அவசியம் குறித்து உரையாடினார்கள். செப்டம்பர் 2020இல் இணையம் வழியே ‘சிறார் கலை இலக்கியச் சந்திப்பு’ என்ற தலைப்பில் தொடர்ந்து கருத்தரங்குகள் நடைபெற்றன. அதன் பயனாக 20/06/2021இல் சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உருவானது. சிறார் கலை, இலக்கியத்தின் தற்காலப் போக்கை ஆவணப்படுத்தும் நோக்கத்தில் அந்தக் கருத்தரங்கில் சிறார் எழுத்தாளுமைகள் பலரால் ஆற்றப்பட்ட உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் குறித்து ஆய்வில் ஈடுபடுவோர்க்கும் இந்நூல் மிகவும் பயன்படும்.
இத்தொகுப்பில் 20 கட்டுரைகள் உள்ளன. ‘கவிமணி முதல் ரமணி வரை’ என்ற முதல் கட்டுரையில் ஆர்.வி.பதி 1901ஆம் ஆண்டு முதல் தற்காலம் வரையிலான சிறார் இலக்கிய வரலாற்றை விவரித்துள்ளார். 1942 முதல் 1955 வரை புதுக்கோட்டையில் வெளிவந்த சிறார் இதழ்களின் பெயர்கள் பற்றி இக்கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளலாம்.
‘சிறார் இலக்கியம் கடந்து வந்த பாதை’ என்று எழுத்தாளர் சுகுமாரன் எழுதியுள்ள கட்டுரையில், அழ.வள்ளியப்பா காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்குப் பங்களித்த எழுத்தாளர்கள் பெயர்களோடு ஆர்.பொன்னம்மாள், சரளா ராஜகோபாலன், ராஜேஸ்வரி கோதண்டம், விமலாரமணி, ஜெயந்தி நாகராசன், ஜோதிர்லதா கிரிஜா போன்ற பெண் எழுத்தாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிவது சிறப்பு.
‘காலத்தின் கண்ணாடி’ என்ற இரண்டு கட்டுரைகளில் எழுத்தாளர்கள் கமலாலயனும், விஷ்ணுபுரம் சரவணனும் சமகாலத்தில் சிறார் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நூல்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளனர்.
குழந்தைப்பாடல் வகைகள் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் எழுத்தாளர் பாவண்ணனின் கட்டுரையிலிருந்தும், குழந்தைப் பாடல் முன்னோடிகள் குறித்துக் கவிஞர் செல்லகணபதி கட்டுரையிலிருந்தும் தெரிந்து கொள்ளமுடிகிறது. சிறார் இலக்கியத்தில் சூழலியல் குறித்து எழுத்தாளர் ஆதிவள்ளியப்பன் எழுதிய கட்டுரையில் தமிழில் வெளிவந்துள்ள பல சூழலியல் நூல்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ சிறார் இலக்கியத்தில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களின் விரிவான பட்டியலைக் கொடுத்துள்ளார்.
‘பல்லாங்குழி’ அமைப்பின் நிறுவனரும் குழந்தைநலச் செயற்பாட்டாளருமான இனியன், அவர் நடத்தும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டங்களின் போது விளையாட்டைக் கருவியாகப் பயன்படுத்திக் குழந்தைகளை ஒருங்கிணைப்பது பற்றிய தம் அனுபவங்களைக் ‘குழந்தைகள் உலகம்: விளையாட்டும் கலைகளும்’ என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார். சிறார் நாடகங்கள் குறித்து ஆசிரியர் கலகல வகுப்பறை சிவாவும், விஜயகுமாரும் எழுதியுள்ளனர்.
சிறப்புக் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் கதை மாந்தர்களாகக் கொண்ட சிறார் படைப்புகள் குறித்துச் ‘சிறப்புக் குழந்தை இலக்கியம்’ என்ற தலைப்பில் சாலை செல்வம் எழுதியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்ற சிறார் இலக்கியப் படைப்புகள் குறித்து யெஸ்.பாலபாரதி எழுதியுள்ள கட்டுரை விளக்குகிறது.
‘மாற்றுக்கல்வியும் சிறார் படைப்பிலக்கியமும்’ என்ற கட்டுரையில் “உரையாடலும் பங்கேற்றலும் தான் மாற்றுக்கல்வி” என்று குறிப்பிடும் பேராசிரியர் ச.மாடசாமி, தம் அறிவொளி கால அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். ‘தமிழ்க்குழந்தைகளுக்கு அறிவியலை எழுதுதல்’ என்ற தலைப்பில் முகவுரை எழுதியுள்ள ஹரீஷ், “குழந்தைகளிடத்தில் அறிவியல் சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்துவது, அவர்களுக்கான அறிவியலை எழுதுவதில் முக்கிய அம்சம்” என்கிறார். இதே தலைப்பில் எழுதியுள்ள எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் தமிழ் அறிவியல் எழுத்து வரலாறு குறித்தும், அந்தப் படைப்புகள் வெளியான இதழ்கள் குறித்தும் ஆரம்ப காலந்தொட்டு விவரித்திருக்கிறார்.
‘குழந்தைகளின் படைப்புலகம்’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் பஞ்சுமிட்டாய் பிரபு, குழந்தை இலக்கியத்தைக் “குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப் பற்றிப் பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம்’ என மூன்றாக வகைப்படுத்துகிறார். 2020-21இல் வெளிவந்த குழந்தைகளின் படைப்புகளின் பெயர்களையும் இக்கட்டுரை மூலம் நாம் தெரிந்து கொள்ளமுடிகின்றது.
‘நவீனச் சிறார் இலக்கியம் நோக்கமும் அதன் பாதையும்’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் உதயசங்கர் சிறார் இலக்கியம் கடந்து வந்த பாதை, இடையில் ஏற்பட்ட வீழ்ச்சி, தற்காலத்தில் எழுதும் சிறார் எழுத்தாளர்களின் பெயர்கள், தற்காலச் சிறார் இலக்கியத்தின் போக்கு ஆகியவை குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.
இது நவீனச் சிறார் இலக்கியம் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் தெரிந்து கொள்ள உதவும் முக்கியமான புத்தகம். ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் சிறார் இலக்கிய முன்னோடிகளின் ஒளிப்படத்தையும், அவர்கள் பற்றிய குறிப்பையும் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாகக் கொடுத்திருப்பது சிறப்பு.
வகை:- தொகுப்பு நூல் | கட்டுரைகள் |
தொகுப்பாசிரியர் – | ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
விலை | ரூ280/-. |