தலையங்கம் – ஜூலை 2025

Kidelephant_pic

சுட்டிகளுக்கும் பெற்றோருக்கும் அன்பு வணக்கம்.

நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக ஒத்திகை பார்க்கிறார்கள்.  திடீரென்று ஓர் அதிசயம் நிகழ்கின்றது.  ஓவியாவுக்கு ஒற்றை சிறகு முளைக்கிறது!  மற்றவர்களின் கண்கள் வழியாக அவர்கள் கனவுக்குள் போய், இரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் கிடைக்கின்றது.  அந்த அதிசயத்தையே கலைநிகழ்ச்சியாக நடத்தி, கலெக்டரை அசத்த நினைக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் நினைத்தது போல் செய்ய  முடியாமல் முக்கியமான பொருள் திருட்டுப் போகின்றது.  அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் சில புதிர்களை விடுவித்தாக வேண்டும். அவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றதா? எனத் தெரிந்து கொள்ள, இந்நாவலை வாசியுங்கள்.

அவர்களுடைய தேடலின் வழியாக, தமிழகத்தின் முக்கியமான அரசியல் பிரச்சினையையும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் பியூன் தாத்தா கதிரேசன் மூலம்  தெரிந்து கொள்கிறார்கள்.  செயற்கை உரங்களைக் கொட்டி நிலத்தை நஞ்சாக்கியதன் விளைவாக உழவரின் நண்பனான மண்புழு இல்லாமல் போய்விட்டது; குடிதண்ணீர் நிறம் மாறிக் குடிப்பதற்கு லாயக்கில்லாமல் போனதற்கு யார் காரணம்?  நிலத்தடி நீர் வெகு ஆழத்துக்கு ஏன் போனது? கார்பரேட் கம்பெனிகள் இயற்கையைச் சுரண்டுவதற்கு எதிராக மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதையெல்லாம், இந்த பேண்டசி நாவல் வழியாக வாசிக்கும் சிறுவர்களுக்கு ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

இது ஏற்கெனவே 2019 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்துக்கான ஆனந்த விகடன் பரிசை வென்றுள்ளது. காலநிலை மாற்றம் உலகமுழுக்கத் திடீர் வெள்ளம், மழை, சூறாவளி என இயற்கைப் பேரிடர்களை உருவாக்கும் இக்காலத்தில் இயற்கை குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஃபேண்டசி நாவலிது.

சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் ஆரம்பமாகவேண்டும்.  குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி அவர்களது படைப்புத் திறனை வெளிக்கொணரவும், சிறந்த ஆளுமைத் திறனை வளர்க்கவும் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அவசியம்.

உங்கள் ஊருக்கு அருகாமையில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்குக் குடும்பத்தோடு சென்று வாருங்கள். குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதோடு, அவர்கள் வயதுக்கேற்ற சிறந்த புத்தகங்களை நீங்களே தேர்வு செய்தும் வாங்கிக் கொடுப்பது அவசியம்.

எங்கள் ‘சுட்டி உலகம்’ வலைத்தளத்தில் குழந்தைகளின் வயதுவாரியான புத்தக அறிமுகம் உள்ளது. உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற, ரசனைக்கேற்ற புத்தகங்களைத் தேர்வு செய்ய எங்கள் புத்தக அறிமுகம் உதவும். எங்கள் காணொளிகளில் சின்னக் குழந்தைகளுக்கான பாடல்கள் உள்ளன. குழந்தைகள் புதுச் சொற்களைத் தெரிந்து கொள்ளவும், சொற்களைத் தெளிவாக உச்சரிக்கவும் இந்தப் பாடல்கள் உதவும்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.  

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *