Anne of Green Gables என்ற ஆங்கிலச் சிறார் நாவலின் சுருக்கத்தைக் ‘கிரீன் கேபிள்ஸ் ஆனி’ என்ற தலைப்பில் சிறார் எழுத்தாளர் சுகுமாரன் தமிழாக்கம் செய்துள்ளார். வானம் பதிப்பகம், சென்னை இதனை வெளியிட்டுள்ளது.
எல்.எம்.மாண்ட்கோமெரி (Lucy Maud Montgomery) என்ற கனடா எழுத்தாளர் எழுதிய புகழ் பெற்ற சிறார் நாவலிது. இந்நாவலில் இடம்பெறும் ஆனி ஷெர்லி என்ற கதாபாத்திரத்தை வைத்து எழுத்தாளர் தொடர்ச்சியாக மேலும் பல நாவல்கள் எழுதியுள்ளார். இந்நாவல் திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளது. உலகளவில் 36 மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஆனி 11 வயது நிரம்பிய சிறுமி. பேற்றோரைச் சிறு வயதில் இழந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறாள். கிரீன் கேபிள்ஸ் என்ற பண்ணை வீட்டில் மாத்யூ என்பவரும், அவர் தங்கை மரிலாவும் வசிக்கின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடுத்தர வயதுடைய இருவரும் பண்ணைக்கு உதவி செய்ய ஒரு பையனை ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து தத்தெடுக்க முடிவு செய்கின்றனர். ஆனால் அந்த இல்லத்திலிருந்து தவறுதலாகப் பையனுக்குப் பதிலாக ஆனி என்ற பெண்ணை அனுப்பிவிடுகின்றனர்.
மரிலாவுக்குப் பெண் குழந்தையை வீட்டில் வைத்து வளர்க்க விருப்பமில்லை என்பதால் திருப்பியனுப்ப முடிவு செய்கின்றார். தன்னை அனுப்ப வேண்டாமென ஆனி அழுது கெஞ்சுகின்றாள். சிறுவயது முதலே அன்பும் அரவணைப்புமின்றி ஏங்கிக் கிடந்தமையால், தன்னை அந்த வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டுகின்றாள். மாத்யூவுக்கு ஆனியின் சுட்டித்தனமும் சுவாரசியமான பேச்சும் மிகவும் பிடித்திருக்கிறது. குட்டிப்பெண்ணைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று தங்கையிடம் சொல்கிறார்.
மரிலாவுக்கு முதலில் அவ்வளவாக இஷ்டமில்லை. பின்பு கொஞ்சங் கொஞ்சமாக ஆனி மரிலாவின் மனதைக் கவர்கின்றாள். அவளது கற்பனை கலந்த சுவாரசியமான பேச்சும், நடவடிக்கைகளும் பண்ணை வீட்டைக் கலகலப்பாக்குகின்றன. அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கின்றார்கள். படிப்பில் அவள் சிறந்து விளங்குகின்றாள். காலப்போக்கில் அந்த வீட்டில் ஒருத்தியாக ஆனி ஆகிவிடுவதை இந்நாவல் விவரிக்கின்றது. 11 வயது முதல் 16 வயது வரையிலான ஆனியின் கதையை இப்புத்தகம் சொல்கின்றது. 1908இல் எழுதப்பட்ட இந்நாவல் நூறு ஆண்டுகளைக் கடந்து இன்றும் உலகளவில் விரும்பி வாசிக்கப்படும் செவ்வியல் நாவலாக உள்ளது.
வகை – சிறார் நாவல்- மொழிபெயர்ப்பு | கிரீன் கேபிள்ஸ் ஆனி |
ஆங்கிலம்– தமிழாக்கம்- | எல்.எம்.மாண்ட்கோமெரி சுகுமாரன் & யஷ்வந்த் |
வெளியீடு:- | வானம் பதிப்பகம், சென்னை-89 +91 91765 49991 |
விலை | ரூ 50/- |