“குழந்தையின் அகவளர்ச்சி, மலைநதியின் பாதையைப் போல், பறவைகளின் வழித்தடத்தைப் போல் தன்னிச்சையானது; புதுமலர் போன்ற அவர்களின் மொழியை, வண்ணங்களைப் பதிவு செய்வதோடு, இச்சமூகத்தை அவர்கள் உள்வாங்கி வருவதையும், பதிவு செய்து எல்லோருக்கும் பகிரும் முயற்சி தான், குட்டி ஆகாயம் சிறார் இதழ்” என்று இதழ் துவங்கியதின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதழ் வெளியிடுவதோடு மட்டுமின்றி, சிறார் பதிப்பகத்தின் மூலம், சிறார் புத்தகங்களை வெளியிடுதல், குழந்தைகள் குறித்த உரையாடல்களை நிகழ்த்துதல், காடறிதல், பயணங்கள், சிறார்ப் பயிற்சி பட்டறைகள் எனத் தொடர்ச்சியாகக் குழந்தைகளின் நலனுக்காகப் பங்காற்றி வருகின்றது குட்டி ஆகாயம்.
இதழின் எட்டாவது இதழில், குழந்தைகளிடம் ஒரு பள்ளி எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி கேட்டு, அதற்கு அவர்கள் கொடுத்துள்ள பதில்களை, அப்படியே பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு குழந்தை சொல்லியிருக்கும் பதில் இது:-
“மேகத்தின் மீது பள்ளியிருந்தால், எனக்குப் பிடிக்கும். சலிப்பாக இருக்கும்போது, மேகங்களை வைத்து, நிறைய பொம்மைகள் செய்யலாம்”
ஒன்பதாவது இதழ், குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. வண்டுகள் பற்றி திரு ஏ.சண்முகானந்தம் எழுதிய கட்டுரை, பறவை பார்த்தலுக்கு உதவும் பறவைகள் அறிமுகக் கையேடு குறித்த நூலறிமுகம் எனச் சிறப்பாக உள்ளது. திரு யூமா வாசுகி மொழி பெயர்த்த, ‘சூரியனைத் திருடிய முதலை’ என்ற கதையும், இதில் இடம்பெற்றுள்ளது.
பத்தாம் இதழை வடிவமைத்த ஆசிரியர் குழுவில், அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மூவரும் சிறுவர்கள். குழந்தைகள் சொன்ன கதைகளும், கதைகளுக்குக் குழந்தைகளே வரைந்த ஓவியங்களும், இந்த இதழை அலங்கரிக்கின்றன. மூன்று வயது குழந்தை சொன்ன கதையும், இதில் இடம்பெற்றிருப்பது வியப்பு!
பதினொன்றாம் இதழ், பயண சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. ஜப்பானின் ஓவியக் கலைஞர் ஹயாவோ மியாசாகியைப் பற்றிய கட்டுரை சிறப்பு. பத்தாம் வகுப்பு மாணவி ரித்திகா எழுதிய பயணக்கட்டுரைக்கு, அவரே ஓவியமும் தீட்டியுள்ளார். ‘குட்டிப்பயணி; என்ற மொழிபெயர்ப்புக் கதையும், இதில் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஓவியம் வரைந்தவர் ஆறாம் வகுப்பு சந்தீப். சிறார் நூல் அறிமுகப் பகுதியில், இரண்டு நூல்களைப் பரிந்துரை செய்துள்ளார்கள்.
மொத்தத்தில் குழந்தைகளின் படைப்புகளையும்,, குழந்தைக்கான படைப்புகளையும் கொண்டு, வெளிவரும் சிறார் இதழ், குழந்தைகளின் சிந்தனை வளம் பெற, அவசியம் வாங்கித் தந்து, வாசிக்கச் செய்யுங்கள்.
வகை | சிறார் காலாண்டு இதழ் |
வடிவம் | அச்சு |
வெளியீடு | குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம், சுந்தராபுரம், கோயம்புத்தூர். (+91-9843472092 & +91-9605417123) |
விலை | தனி இதழ்: ரூ 50/- 10 இதழ் சந்தா: ரூ 500/- ( 2 ஆண்டுகளுக்கு, இதழ் அனுப்பப்படும்) |