எல்லோருக்கும் அன்பு வணக்கம். குழந்தைகள் அனைவருக்கும் அட்வான்ஸ் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! குழந்தைகளை அளவற்ற அன்புடன் நேசித்த நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுவது, நாம் அனைவரும் அறிந்த விஷயமே. குழந்தைகள் அவரை “நேரு மாமா” என்று அழைத்து மகிழ்ந்தனர்.
“இன்றைய குழந்தைகளே, நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறவர்கள்; நாம் அவர்களை எந்த முறையில் வளர்க்கிறோமோ, அந்த வளர்ப்பு முறையே நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்றார் நேரு.
“குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம்; நாளைய குடிமக்கள்; அவர்கள் தோட்டத்திலுள்ள மலர் அரும்புகள் போன்றவர்கள்; எனவே அவர்களைக் கவனமாகவும், அன்பாகவும் பராமரித்து வளர்க்க வேண்டும்” என்றும் நேரு மாமா சொன்னார்.
நவம்பர் 7 குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா (1922-1989) பிறந்த நாள்! இவர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைக் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார். இவரது காலம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் பொற்காலமாகத் திகழ்ந்தது. குழந்தைகளுக்கு எழுதும் எழுத்தாளர்களை ஒன்றிணைத்துக் குழந்தை எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவரும் இவரே.
”ஏடு துாக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்!”
என்பது இவரது பிரபலமான வரிகள்!
“குழந்தைகளின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. அவர்களுக்குச் சேவை செய்வதே எனது குறிக்கோள்” என்று அறிவித்த அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் ஆண்டுதோறும் குழந்தை இலக்கியத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
‘சுட்டி உலக’த்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் புத்தக அறிமுகங்கள் வயது வாரியாக உள்ளன. உங்கள் வயதுக்கேற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் ‘சுட்டி உலகம்’ வழிகாட்டும். எங்கள் காணொளியில் குழந்தைப்பாடல்கள் வெளியாகின்றன.
குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை அறிமுகம் செய்யுங்கள். அவர்களின் பன்முகத்திறமை வெளிப்பட வாசிப்புப் பழக்கம் அவசியம். அவர்களிடம் மறைந்திருக்கும் படைப்புத் திறனை வாசிப்புப் பழக்கம் வெளியே கொண்டு வரும். உங்கள் ஊரில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்குத் தவறாமல் அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.
“புத்தகம் வாங்குவதற்கான செலவு செலவல்ல; அது அறிவுக்கான முதலீடு”
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.