எல்லோருக்கும் அன்பு வணக்கம்.
அனைவருக்கும் அட்வான்ஸ் இந்திய சுதந்திரத் தின வாழ்த்துகள்! இந்தியா சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15/08/2024 அன்று நாம் 78வது சுதந்திர நாளைக் கொண்டாட இருக்கின்றோம்! இந்நாளில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்து போராடியவர்களை, நன்றியுடன் நினைவு கூர்வோம்!
“காந்தியைப் போன்ற ரத்தமும், சதையும் கொண்ட ஒரு மனிதர், இந்தப் பூமியில் வாழ்ந்தார் என்பதை வருங்காலத் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்” என்று அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட நம் தேசப்பிதா பற்றியும், நவீன இந்தியாவின் சிற்பி நேரு பற்றியும், சிறுவர்கள் பல புத்தகங்கள் வாசித்துத் தெரிந்து கொள்வது அவசியம்.
2024ஆம் ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இன்றைய தேதி வரை ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் பெற்றுள்ள நம் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்!
இந்த ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா நம் இதயங்களைக் கவர்ந்த விளையாட்டு வீரராகத் திகழ்கின்றார். ஈட்டி எறிதல் போட்டியில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். யாருமே எதிர்பாராதவகையில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் ஈட்டி எறிந்து உலகச் சாதனை படைத்ததோடு, தங்கமும் வென்றார்.
அர்ஷத் நதீம் மிகவும் ஏழை. ஏழெட்டு ஆண்டுகளாக தாம் பயன்படுத்திய ஈட்டி சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகிவிட்டதென்றும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன், யாராவது புது ஈட்டி வாங்கித் தந்து உதவுமாறும், நதீம் 2024 மார்ச் மாதம் பாகிஸ்தான் தேசிய ஃபெடரேசனுக்கும், பொது மக்களுக்கும் சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதைப் பார்த்த நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் ஒலிம்பிக்கில் தம் போட்டியாளர் என்று நினைக்காமல், “புது ஈட்டி வாங்க அர்ஷத் கஷ்டப்படுவதை அறிந்து, அதிர்ச்சியாக இருக்கிறது; அவர் ஈட்டி எறிதலில் மிகத் திறமையான வீரர். அவருக்குப் பாகிஸ்தான் அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உதவவேண்டும்; ஈட்டி தயாரிப்பவர்கள் அவரை ஸ்பான்சர் செய்து உதவ வேண்டும்” என்று முதல் ஆளாகத் தம் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இருவரும் போட்டி முடிந்து பதக்கங்களைப் பெற்ற பின், நண்பர்களாக இணைந்து நின்று அவரவர் கொடிகளைப் போர்த்தியவாறு கைகுலுக்கும் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கின்றது. உண்மையான விளையாட்டு உணர்வு (Sportsmanship)என்பது வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதது; நாடு, மதம், இனம். மொழி போன்ற எல்லைகளைக் கடந்தது; மனிதநேயமிக்கது என்பதை இவர்களின் நட்பு, உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றிருந்தாலும், அர்ஷத் மீதான இவரது மனிதநேயம், நட்பு காரணமாக இந்தியாவின் தங்க மகனாகக் கொண்டாடப்படுவது நிச்சயம்.
‘சுட்டி உலகம்’ பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பை ஊக்குவிக்கத் துவக்கப்பட்டது. கதைகள் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, அவர்கள் படைப்புத் திறனை வெளிக்கொண்டு வரும் என்பதால், அவர்கள் கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும். எனவே பெற்றோர் குழந்தைகளின் வயதுக்கேற்ற கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். சுட்டி உலகத்தில் வயதுக்கேற்ற புத்தக அறிமுகங்கள் உள்ளன. குழந்தைகளின் வயது, ரசனைக்கேற்ற புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்க இந்த அறிமுகம் உதவும்.
கோவையிலும், புதுக்கோட்டையிலும் புத்தகத் திருவிழா நடந்து முடிந்து தற்போது ஈரோட்டில் நடக்கிறது. வாய்ப்புள்ள பெற்றோர் குழந்தைகளைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளின் போது புத்தகப் பரிசு கொடுக்கும் வழக்கத்தை ஆரம்பியுங்கள்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.