32 பக்கம் கொண்ட இந்தச் சிறுவர்க்கான கதைத் தொகுப்பில், மொத்தம் ஏழு நாடோடிக் கதைகள் உள்ளன. சிறார் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் இவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
‘லூசி வரைந்த பூதம்’ என்ற முதல் கதையில், லூசி வரைந்த பூதம் ஓவியம் திடீரென உயிர் பெற்று எழுந்துவிடுகின்றது. இருவரும் வெகுநேரம் விளையாடுகின்றார்கள். பூதத்துக்குத் தூக்கமே வரவில்லை. முடிவில் லூசி ஒரு புத்தகம் வாசிக்கத் துவங்கியவுடன், கதையைக் கேட்டுக் கொண்டே பூதம் தூங்கத் துவங்குகின்றது. குழந்தைகள் தூங்குவதற்கு முன், பெற்றோர் கதைப்புத்தகம் வாசித்துக் காட்டும் மேல்நாட்டுப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கதையிது.
புத்தகங்களை மிகவும் நேசித்த நாய், புத்தகக்கடை ஒன்றைத் துவங்குகிறது. யாரும் வாங்க வரவில்லை என்றவுடன், நேரத்தைப் போக்க வாசிக்கத் துவங்குகிறது. வாசிப்பின்பம் கிடைத்து, அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்கிறது. இன்னொரு கதையில் நாய் ஒரு சிறிய பறவையின் உதவியால், வாசிக்கக் கற்றுக் கொள்கிறது.
‘நூலகத்தில் ஓர் எலி’ என்ற இந்நூலின் தலைப்புக் கதையிலும், சாம் என்கிற எலி, நூலகத்தில் வசித்துக் கொண்டு இரவு முழுதும் வாசிக்கின்றது. வாசிப்பதோடு எழுதவும் துவங்குகிறது. அது எழுதிய நூல்கள் வாசகரிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. வாசிக்க வாசிக்க எழுத்துத் திறமை வசப்படும் என்ற உண்மையைச் சொல்லும் கதையிது.
இதில் உள்ள பெரும்பாலான கதைகள், புத்தகத்தின் அருமையையும், வாசிப்பின் அவசியத்தையும், எடுத்துக்காட்டுவதாக அமைந்திருப்பது சிறப்பு.
வகை | மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள் |
மொழியாக்கம் | சுகுமாரன் |
வெளியீடு | வானம் பதிப்பகம், சென்னை-89 செல் 91765 49991 |
விலை | ரூ 30/- |