மாயாவின் பொம்மை

Mayavin_Pommai_pic

இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 10 கதைகள் உள்ளன.  முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘ஒரு சொட்டுத் தண்ணீர்’, சிறுவர்களுக்கு நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் கதை. 

குளிப்பதற்கு அதிக நீரைச் செலவழிக்கும் பணக்காரப் பெண் நிகிதா, ஒரு ரயில் வண்டியில் பயணம் செய்கிறாள். வழியில் தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் படும் துன்பங்களையும், வேதனைகளையும், அவள் நேரில் காண நேரிடுகின்றது. 

நீர் சொட்டும் குழாயை மூடிவிட்டுச் செல்லும் ஒரு பெண் குழந்தையின் செய்கை, நிகிதாவின் கண்களைத் திறக்கின்றது.  இக்கதையின் மூலம் உயிர் காக்கும் நீரைச் சேமிப்பது அவசியம் என்பதை நிகிதா மட்டுமின்றி, வாசிக்கும் சிறுவர்களும் தெரிந்து கொள்வர் என்பது உறுதி!   

‘காகத்தின் பாடம்’ என்ற கதையில், எச்சில் கையால் கூட காக்கையை ஓட்டாத வடிகட்டின கஞ்சனுக்குக் காக்கைகள் நல்ல பாடம் கற்பிக்கின்றன. மற்றவர்களுக்குப் பகிர்ந்துண்டு வாழ வேண்டும் என்ற நல்ல கருத்தைக் குழந்தைகள் மனதில் விதைக்கும் கதையிது.  

‘கும்பிடுறேன்சாமி’ என்பது சிறுவர்க்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்குமான கதை. பள்ளியில் நண்பர்களுக்கு மத்தியில் குழந்தைகள் சந்திக்கப்போகும் கிண்டல்களையும், கேலியையும் கருத்தில் கொள்ளாமல், பெயர் வைக்கும் பெற்றோர், அவசியம் இக்கதையை வாசிக்க வேண்டும்.  முடிவு மிகவும் ரசிக்க கூடியதாக இருந்தது.

சுமதி பாப்பா எறும்பாக மாறி, குட்டி எறும்புடன் அதன் வீட்டுக்குச் செல்லும் கதையையும், ‘சுற்றுலா போன சுண்டைக்காய்’ கதையையும்  காட்டுப்பன்றி சூசாவின் சாகசக் கதையையும், குழந்தைகள் வெகுவாக ரசிப்பார்கள். 

இந்நூலின் தலைப்புக் கதையான ‘மாயாவின் பொம்மை’ கதையில் ஒரு மாயம் நிகழ்கின்றது.  இரவில் மாயாவின் அருகில் படுக்க வைத்திருந்த பொம்மையை எங்குமே காணோம்.  பொம்மை மாயமாக எங்கு மறைந்து போனது? ஒரு நாள் திடீரென்று யாரோ அழும் சத்தம், மாயாவுக்குக் கேட்கிறது. யார் அழுதார்கள்? ஏன் அழுதார்கள்? என்றெல்லாம் தெரிந்து கொள்ள இக்கதைப் புத்தகத்தை வாங்கிச் சிறுவர்க்கு வாசிக்கக் கொடுங்கள்.

கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய சுவாரசியமான சிறார் கதைகள்!

வகைசிறார் கதைகள்
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம்,சென்னை-89 (+91 91765 49991)
விலை₹ 60/-

Share this: