இளவரசர் வீரதேவன் – பா.பு.சரவண பாண்டியன்- (12 வயது)

Ilavarasar_Veeradevan_pic

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர் கதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)

சுந்தரபுரி தேசத்தைப் பேரரசர் சுந்தரவர்மன் ஆட்சி புரிஞ்சிட்டு வந்தார். அவரோட ஆட்சிக்குக் கீழே இருக்குற சிற்றரசர்கள் அவருக்குக் கப்பம் கட்டிட்டு வந்தாங்க. அவரோட அரசவைல அறிவான, வீரமான அமைச்சர்கள் இருந்தாங்க. 

ஒருநாள் சுந்தரவர்மன் அமைச்சர்களைப் பார்த்து, “அமைச்சர்களே!  எனக்கோ வயதாகிக் கொண்டே செல்கிறது. என்னால் முன்பு போல் வீரமாக போர் செய்ய இயலவில்லை. எனவே இந்தப் பேரரசுக்கு அடுத்த அரசராக நம் இளவரசரை அமர வைக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்”ன்னு சொன்னார். 

 அதுக்கு அறிவாளன்னு பேர் கொண்ட ஒரு அமைச்சர், “தாராளமாக அமர வைக்கலாம் அரசே! ஆனால் உங்கள் பரம்பரையில் வந்த அனைவருமே ஒரு வீரதீர செயல் செய்துதான் சிம்மாசனத்தில் அரசராக அமர்ந்தனர். அந்த வகையில் இளவரசரும் ஒரு வீரதீர செயல் செய்ய வேண்டும் அரசே!”ன்னு சொன்னார். 

சுந்தரவர்மனோ, “அது சரிதான் அமைச்சரே!  ஆனால் இளவரசர் என்ன செய்து வீரனாக வேண்டும்?  அதைச் சொல்லுங்கள்”என்றார். 

 “அதற்குத் தான் அரசே! எனக்கு ஒருநாள் அவகாசம் தேவை அரசே!  நாளை காலை உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன் அரசே!”என்றார் அறிவாளன். 

“சரி அமைச்சரே! உங்களுக்கு ஒருநாள் அவகாசம் தருகிறேன். நாளைக் காலை எனக்கு யோசனையை சொல்லுங்கள். அவை கலையட்டும்”ன்னு சொன்னார் சுந்தரவர்மன். 

அப்புறம் எல்லா அமைச்சர்களும் தங்கள் வீட்டுக்கு போனாங்க. அமைச்சர் அறிவாளன் என்ன செய்ய சொல்லலாம்ன்னு யோசிச்சார். 

 அவருக்கு ஒரு நல்ல யோசனை வந்தது.. அப்புறம் அவரும் நிம்மதியாத் தூங்கினார். அடுத்த நாள் காலை. சுந்தரவர்மனோட அரசவை கூடியிருந்தது. 

சுந்தரவர்மன் அமைச்சரைப் பார்த்து, “என்ன அமைச்சரே! என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து விட்டீரா? ”ன்னு கேட்டார். 

அதுக்கு அமைச்சர் அறிவாளன், “ஆம் அரசே! உங்களது எதிரி நாடான மந்திரபுரியை ஆட்சி செய்பவர் ஜெயவர்மன். அவரது தேசத்தில் ஒரு மாய வனம் உள்ளது. அதற்குள் சென்றவர்களால் வெளியேற இயலவில்லை. அதற்குள் சுந்தரபுரியைச் சேர்ந்த மக்களும் உள்ளனர். அதனால் அரசே! நாம் வேண்டுமானால் நம் இளவரசரை அங்கு அனுப்பி அனைத்து மக்களையும் விடுவித்து வரச் சொல்லலாம்”என்றார். 

 அதற்குப் பேரரசரோ, “என்ன சொல்கிறீர்கள் நீங்கள், ஒரு வேளை இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால்? ”ன்னு கேட்டார். 

“அச்சம் வேண்டாம் அரசே! நாம் சில வீரர்களை இளவரசருடன் அனுப்பி வைப்போம்”

 “அது சரிதான்! ஆனால் மாயத்தைச் செயலிழக்க வைத்து விட்டு மக்களை எப்படி வெளிக்கொண்டு வருவது?”

 “அரசரே!  மாயத்தைச் செயலிழக்க வைக்கும் சாவி அங்கேதான் உள்ளது. மேலும் அந்தச் சாவியை ஒரு அதிபுத்திசாலியால் மட்டும்தான் கண்டறிய முடியும். எனவே நான் ஒரு போட்டி வைத்து அதன்மூலம் அந்த அதிபுத்திசாலியைக் கண்டறிந்து அவரை இளவரசருடன் அனுப்பி வைப்போம்”என்றார் அமைச்சர் அறிவாளன். 

 “என்ன போட்டி அமைச்சரே?”

“இன்னும் இரண்டு நாட்களில் போட்டி என்று மக்களுக்குத் தண்டோரா மட்டும் போடச் சொல்லுங்கள். போட்டி என்னவென்று களத்தில் நேரடியாகச் சொல்கிறேன் அரசே!”

“எந்த இடத்தில் போட்டி அமைச்சரே?”

“நம் அரண்மனையில் தான் அரசே!”

“சரி அமைச்சரே! யாரங்கே! மக்களுக்கு அமைச்சர் சொன்னதைத் தண்டோரா போடுங்கள்!”என்றார் சுந்தரவர்மன். 

“உத்தரவு மன்னா! ”என்றார் காவலாளி. 

அப்புறம் காவலாளி நாட்டுக்குள்ள தண்டோரா போட ஆரம்பிச்சார். அவர் என்ன சொன்னார்னா, 

 “பெரியோர்களே, தாய்மார்களே! இன்னும் இரண்டு நாட்களில் அதிபுத்திசாலியைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நமது அரண்மனையில் நடைபெறுகிறது. இப்போட்டியை அமைச்சர் அறிவாளன் நடத்துகிறார். என்ன போட்டி என்று போட்டி நாளில் தெரிவிக்கப்படும்! ”என்றார். 

இதைக் கேட்ட எல்லா மக்களும் எதுக்காக இப்படி பண்றாங்கன்னு யோசிச்சாங்க. இரண்டு நாட்கள் கழித்துப் போட்டி நாளும் வந்தது. நிறைய பேர் அரசவைக்குப் போட்டியில கலந்துக்குறதுக்காக வந்திருந்தாங்க. 

அமைச்சர் அறிவாளன், “அனைவருக்கும் வணக்கம். நான் கேட்கும் வினாக்களுக்கு யார் சரியான பதிலைச் சொல்கிறார்களோ, அவரே சுந்தரபுரியின் அதிபுத்திசாலி ஆவார்”ன்னு சொன்னார். 

இதைக்கேட்ட மக்கள் கைத்தட்டுனாங்க. அப்புறம் அமைச்சர் நிறைய கேள்விகள் கேட்டார். அதுக்கு  மகேந்திரன்னு பேர் கொண்ட ஒரு பையன் சரியான பதில்கள் சொன்னான். 

 அமைச்சர் அறிவாளன், “இந்த நாட்டோட அதிபுத்திசாலி மகேந்திரன்”ன்னு சொன்னார். 

 அப்புறம் மகேந்திரனோட பெற்றோரைக் கூப்பிட்டு இளவரசர் மந்திரபுரியில் உள்ள மாய வனத்திற்கு செல்லும் விஷயத்தைச் சொல்லி, “இதற்கு அதிபுத்திசாலியான உங்கள் மகனை இளவரசருடன் அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும். அவனது பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்”என்றார் அமைச்சர் அறிவாளன். 

இதுக்கு அவனோட அம்மா, “சரி ஐயா!  நிச்சயமாக நாங்கள் மகேந்திரனை அனுப்பி வைக்கிறோம்”ன்னு சொன்னாங்க.

 அமைச்சர், “நல்லது அம்மா, நாளைக் காலை உங்கள் மகன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனால் நாளைக் காலை அரண்மனைக்கு வந்துவிடுங்கள். இங்கிருந்து அவர்கள் பயணம் தொடங்கும். சரி சென்று வாருங்கள்”என்றார். 

 அடுத்த நாள் காலை. அரண்மனையில் மகேந்திரனும் அவனோட பெற்றோரும் இருந்தாங்க. அப்போ சுந்தரவர்மன் தனது ராணி மற்றும் இளவரசர் வீரதேவனோட வந்தாரு. உடனே மகேந்திரனும் அவனோட பெற்றோரும் அமைச்சரும் மன்னருக்கு வணக்கம் சொன்னாங்க. 

அப்போ வீரதேவன், “தந்தையே அந்தச் சிறுவனும் வந்தாகிவிட்டது. நாங்கள் பயணத்தைத் தொடங்கட்டுமா?” என்றார்.

 அரசரும் அமைச்சரும், “சென்று வாருங்கள், ஜெயம் உண்டாகட்டும்” என்றனர். 

 இருவரும் பயணத்தைத் தொடங்குனாங்க. இரண்டு பேரும் நிறைய விஷயங்கள் பேசிக்கிட்டே போனாங்க. மந்திரபுரி நாட்டோட எல்லை வந்ததும், வீரதேவன் மகேந்திரனை ஒரு பெரிய மரத்துக்கிட்ட கூட்டிட்டு போனார். 

“என்ன இளவரசே! இங்கே கூட்டி வருகிறீர்கள்?”

“மகேந்திரா! நாம் இந்த உடையில் சென்றால் எல்லைக் காவலாளிகள் நம்மீது சந்தேகப்படுவார்கள். நாம் இங்கு உடை மாற்றவே வந்திருக்கிறோம். நான் எனது உடையை மாற்றி வணிகர் போல் வேடம் அணிந்து கொள்கிறேன். நீயும் நான் தரும் உடைக்கு மாறிக்கொள்! சரியா?” என்றார் இளவரசர். 

“அட! ஆமாம் இளவரசே! நான் அதை மறந்தே விட்டேன் பாருங்கள்!” என்றான் மகேந்திரன். 

அப்புறம் இரண்டு பேரும் தங்கள் உடையை மாத்திக்கிட்டாங்க. அப்போ இளவரசர். 

 “இங்கே பார்! காவலாளிகள் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டால் மாய வனத்தை பார்ப்பதற்காக வந்திருக்கிறோம் என்று சொல்லிவிடு” என்றார். மகேந்திரனும் சரி என்பதற்கு தலையாட்டினான். 

 அதே போல எல்லைக்குப் போனதும் காவலாளிகள் அதே கேள்வியை கேட்டாங்க. அதுக்கு மகேந்திரனும் வீரதேவன் சொன்னதையே சொன்னான். அவங்களும் நாட்டுக்குள்ள விட்டாங்க. அப்புறம் கொஞ்ச நேர நடையில மாய வனத்துக்கு வந்தாங்க. 

 இவங்க வர்றத பார்த்ததும் அங்கிருந்த ஒரு பெரியவர், “யாரப்பா நீங்கள்?  எதற்காக நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்?”ன்னு கேட்டார். 

அதுக்கு வீரதேவன், “பெரியவரே! என் பெயர் வேலன், இவன் பெயர் மகேந்திரன். நாங்கள் இந்த மாய வனத்தை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்துள்ளோம்” என்றார். இளவரசர் எதுக்காக தன்னோட பேரை மாத்தி சொல்றதோட பொருள் மகேந்திரனுக்கு நல்லாவே புரிஞ்சுது. 

 பெரியவர், “வந்து பார்க்கலாம், ஆனால் இங்கிருந்து செல்ல முடியுமாப்பா?  இங்கே வந்தவர்களால் வெளியே செல்ல முடியாதப்பா. எங்களால் என்ன முயற்சி செய்தும் வெளியே செல்ல முடியவில்லை!”ன்னு சோகமா சொன்னார். 

வீரதேவன், எதுவும் தெரியாதது போல, “என்ன பெரியவரே!  இப்படி சொல்கிறீர்கள்? இது தெரிந்திருந்தால் நாங்கள் இங்கு வந்திருக்க மாட்டோமே?” என்றார். 

  “அவ்வளவுதானப்பா! இனிமேல் உங்களால் இங்கிருந்து செல்ல முடியாது. சரி வாருங்கள் சாப்பிடலாம்!”னு சொன்ன பெரியவர் அவங்களை அங்கிருந்த மத்தவங்களுக்கு அறிமுகப்படுத்தி வச்சு சாப்பாடு குடுத்தார். இரவு நேரம் வந்தது. 

எல்லாரும் தூங்குனதும் வீரதேவனும் மகேந்திரனும் மாய வனத்தை சுத்திப் பார்த்தாங்க. அங்க மாய வனத்தோட எல்லையில ஒரு மரத்துக்கு நடுவுல சாவியோட அச்சு அளவுக்கு குழி இருந்துச்சு. 

 அதப்பார்த்த மகேந்திரன், “இளவரசே‌ இதுதான் மாயத்தை செயலிழக்க வைக்கும் சாவியை வைக்கும் இடம் என்று நினைக்கிறேன். அப்படியானால் சாவி இங்கேதான் இருக்கிறது”ன்னு சொன்ன மகேந்திரன், சுத்திமுத்தி பார்த்தான்.

அங்க கொஞ்ச தூரத்துல ஒரு சேறு குளம் இருந்துச்சு. அதப்பார்த்த மகேந்திரன், “இளவரசே உங்களிடம் காந்தம் போல் ஏதாவது பொருள் இருக்கிறதா?”ன்னு கேட்டான். 

 “இந்தாரும், இந்த கோலின் முனையில் காந்தம் பொருத்தப்பட்டிருக்கிறது, ஆமாம் இப்போது எதற்கு இதை கேட்கிறாய்?”

 “பொறுத்திருந்து பாருங்கள்”ன்னு சொன்ன மகேந்திரன், இளவரசருடன் அந்த சேற்றுக்குளத்திற்கு சென்றான். பிறகு அந்த கோலின் முனையை சேற்றிடம் கொண்டு சென்றான். உடனே அந்த முனையில் ஒரு சாவி வந்து ஒட்டிக்கொண்டது.    

 “இளவரசே! சாவி கிடைத்து விட்டது. நீங்கள் அனைவரையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி அவர்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வனத்தின் எல்லைக்கு கூட்டி வந்துவிடுங்கள். அதற்குள் நான் இந்த மாயத்திரையை விலக்கி வைத்து விடுகிறேன்”ன்னு மகேந்திரன் சொன்னதும், 

வீரதேவன் வேகமாக அவங்ககிட்ட சென்று தூக்கத்திலிருந்து எழுப்பி சாவி கிடைத்த விஷயத்தை சொல்லி, அவங்க உடமைகளை எடுத்துகிட்டு வனத்தோட எல்லைக்கு வந்தார். 

 மகேந்திரன், “இங்கே பாருங்கள்!  மாயத்திரையை விலக்கி விட்டேன். எல்லாரும் சத்தம் போடாமல் நடந்து வாருங்கள்!” என்றான். 

 அப்புறம் மாய வனத்தோட எல்லை தாண்டுனதும் இரண்டு காவலாளிகள் இவர்கள் வெளியே வருவதைப் பார்த்து இவங்களை தாக்குறதுக்காக பாய்ந்து வந்தாங்க. உடனே வீரதேவன் அவங்களை நோக்கி வேகமாக ஓடி உதைச்சார். 

வீரதேவன், “வேகமாக வாருங்கள்”ன்னு சொல்லிட்டு வேகமாக போனார். கூடவே மகேந்திரனும் மக்களும் மந்திரபுரி எல்லைக்கு வேகமாக போனாங்க. அதுக்குள்ள அந்த காவலாளிகள் ஜெயவர்மனோட அரண்மனைக்கு குதிரைல வேகமா போனாங்க. அரசர் ஜெயவர்மன் கிட்ட மாய வனத்துல நடந்ததைச் சொன்னாங்க. 

 உடனே ஜெயவர்மன் கோபத்தோடு, “என்ன சொல்கிறீர்கள்! தளபதியே!  வீரர்களுடன் மந்திரபுரி எல்லைக்கு விரைவாக சென்று அவர்களைப் பிடியும். நான் வேகமாக வருகிறேன்” என்றதும் தளபதி வீரர்களுடன் மந்திரபுரி எல்லைக்கு குதிரையில் பாய்ந்து சென்றார். ஜெயவர்மனும் ஒரு தேரில் ஏறி வேகமாகச் சென்றார். 

 வீரதேவனும் மகேந்திரனும் மக்களும் மந்திரபுரி எல்லைக்கு வருவதுக்கு முன்னாடியே அங்கே ஜெயவர்மன் அவரது தளபதி, வீரர்கள் அங்கிருந்தாங்க. 

 ஜெயவர்மன், “யார் நீ? நீ எப்படி மாயத்திரையை விலக்கினாய்? எதற்காக இப்படிச் செய்கிறாய்? இவர்களை எங்கே கூட்டி செல்கிறாய்?”ன்னு கேள்விமேல் கேள்வி கேட்டார். 

 அதுக்கு வீரதேவனோ, “இங்கே பார், உன் கேள்விக்கெல்லாம் ஒரே பதில்தான். உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”என்றார். 

  “என்ன! அவசியம் இல்லையா? வீரர்களே! அவனைப் பிடித்து அரண்மனைக்கு இழுத்து வாரும்”

“உத்தரவு மன்னா” என்ற வீரர்கள் பிடிக்குறதுக்காகப் போனார்கள். வீரதேவன் ஏற்கனவே ஒரு குறுவாள் வெச்சிருந்தார். உடனே அந்த குறுவாளை எடுத்து இரண்டு பேரைக் குத்தினார். அப்புறம் வர்றவங்களை எல்லாம் குறுவாளால வீழ்த்த ஆரம்பிச்சார். இதப்பார்த்து மகேந்திரனை தவிர எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க. ஒரு சாதாரண இளைஞன் எப்படி இப்படி சண்டை போடுறான்னு ஜெயவர்மனும் ஆச்சரியப்பட்டார். 

ஜெயவர்மன், “எங்களை விட்டுவிடு. நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். நீ யார் என்று மட்டும் சொல்லிவிடு!” என்றார்.

 உடனே வீரதேவன் தன்னுடைய வேடத்தைக் கலைத்து, “இப்போது தெரிகிறதா நான் யாரென்று?” என்றார்.

“என்ன!  வீரதேவனா?”ன்னு ஜெயவர்மன் அதிர்ச்சியடைஞ்சார். மக்களும் அதிர்ச்சியடைஞ்சாங்க. “வீரதேவனே! நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?”

 மகேந்திரன் எதற்காகப் பேரரசர் அனுப்பி வைத்தார்ன்னு சொன்னான். அப்புறம் ஜெயவர்மன் மக்களையும் மகேந்திரனையும் வீரதேவனையும் வழியனுப்பி வெச்சார்.          

இவங்க வர்றத தெரிஞ்சுகிட்ட அரசர் அவர்களுக்கு எல்லைக்குள் நுழைந்ததும் நல்ல வரவேற்பு கொடுத்தார். அப்புறம் அரண்மனைக்கு போனதும் வீரதேவன் நடந்ததை சொல்லி மகேந்திரனை ரொம்ப புகழ்ந்தார். அமைச்சரும் ரொம்ப புகழ்ந்தார். 

 பேரரசர், “சபாஷ் மகேந்திரா!  நீ அதிபுத்திசாலி என்பதை நிரூபித்துவிட்டாய்” என்றார். 

 “நன்றி அரசே, நன்றி அமைச்சரே, நன்றி இளவரசே”

  அப்புறம் சுந்தரவர்மன் ஜோதிடரைக் கூப்பிட்டு பட்டாபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள் குறிச்சார். அப்புறம் அதுக்கான ஏற்பாடுகள் செஞ்சார்.      

 ஒரு வாரம் கழிந்தது. இளவரசர் வீரதேவனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தது. அப்புறம் சுந்தரவர்மன் மகுடத்தையும் செங்கோலையும் வீரதேவன் கிட்ட கொடுத்தார். அப்புறம் வீரதேவன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தார். 

 இப்போ சுந்தரபுரி அரசுக்கு வீரதேவன் அரசர் ஆனார். அப்புறம் அரசர் வீரதேவன் அமைச்சர்கள் தளபதி வீரர்கள் உதவியோடு பல போர்களில் ஜெயித்து பேரரசர் வீரதேவனாக ஆனார். சுந்தரபுரி மக்களின் சந்தோஷத்தையும் உறுதி செஞ்சார். 

(நடுவர்களின் கருத்து:-

கதையைத் துவங்கியது முதல், தொய்வின்றி முடிவு வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றமைக்குப் பாராட்டுகள்.  எளிய நடையில் இருப்பதும் சிறப்பு. 

ஆனால் பாதி எழுத்து நடையிலும், பாதி பேச்சுத் தமிழிலும் இருப்பது ஒரு குறை. மேற்கோள் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் உரையாடல், பேச்சு நடையில் இருக்க வேண்டும்.  கதை சொல்வது எழுத்து நடையில் இருக்க வேண்டும்.  ஆனால் இரண்டுமே மாறியிருக்கின்றது.  அதாவது உரையாடல் தூய தமிழ் நடையிலும், கதை சொல்வது பேச்சு நடையிலும் உள்ளது.

மன்னராட்சி ஒழிந்து பலகாலமாகின்றது.  இன்னமும் சாகசம் என்றால் இளவரசர், மன்னர் என்று பழைய கருக்களை யோசிக்காமல் இக்காலத்துக்கேற்ற சாகசக் கருக்களைத் தேர்ந்து எடுத்துக் கதை எழுதுவது நல்லது).   

அன்பு சரவண பாண்டியன்,

இரண்டாம் பரிசு பெற்றிருப்பதற்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்! மேலும் பல கதைப் புத்தகங்களை வாசித்தால் எழுத்துத் திறமையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.  தொடர்ச்சியாக எழுதி வருங்காலத்தில் சிறந்த தமிழ் எழுத்தாளராகத் திகழ எங்கள் அன்பு வாழ்த்துகள்!

அன்புடன்

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

6 thoughts on “இளவரசர் வீரதேவன் – பா.பு.சரவண பாண்டியன்- (12 வயது)

  1. குறைகளை, நிறைகளாக்கி கதை எழுதிட துணை நிற்பேன்..

    நன்றியும்,மகிழ்ச்சியும்.

    1. நிச்சயம் செய்யலாம், அதற்காகத் தான் சுட்டிக் காட்டுகிறோம். சிறந்த கற்பனை வளம் உள்ளது. சிறு சிறு குறைகளைத் தவிர்த்தால் வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராக மிளிரும் வாய்ப்பு அதிகம். சரவண பாண்டியனுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

      1. தொடரட்டும் உங்களதர பணி,நாங்களும் ஆர்வமாய் பின் தொடர்கிறோம் மிக்க நன்றி..🙏

  2. கற்பனைவளம் நன்றாகவே உள்ளது. எழுத்துத் திறனும் உள்ளது. கதையைக் கோர்வையாகச் சொல்வதில் வல்லமை பெற்றிருக்கிறார்.

    உரையாடல் பகுதியில் பேச்சுத் தமிழும் விவரிப்பு பகுதியில் தூய தமிழும் இருந்திருக்க வேண்டும். என்றாலும், இவர் ஒரு கிராமத்துக் கதை சொல்லி போல தன் கதையை வடிவமைத்து இருக்கிறாரோ என்று உணர முடிகிறது. ஏனென்றால், நான் அந்தக் காலத்துக் கதை சொல்லிகளின் கதையை கேட்டிருந்ததால் அப்படி நினைக்கத் தோன்றுகிறது.

    நிறையப் புத்தகங்கள் இன்னும் படிக்க வேண்டும். படிக்கப் படிக்க அவருக்கு எழுத்தாற்றலும் கற்பனைத் திறனும் மேலோங்கி வளரும். வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராக சரவண பாண்டியன் மிளிர என் வாழ்த்துகள்!

    ரத்தினமூர்த்தி
    திருப்பூர்

    1. வணக்கம். தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. இன்னும் அதிக புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று தாங்கள் சொல்லியிருப்பதை நாங்களும் ஆமோதிக்கிறோம். மேலும் வாசித்து எழுதத் துவங்கினால் இந்தச் சிறு குறைகள் தாமாக நீங்கிவிடும். மீண்டும் நன்றி.

    2. மிக்க நன்றியும்,மகிழ்ச்சியும்..உங்களது கருத்தினை சரவணாவிடம் காட்டினால் மகிழ்ந்து போவான்..❤🙏

Comments are closed.