சிறார் இலக்கிய முன்னோடிகள் – 1

MCRajah_book

மயிலை சின்னதம்பி ராஜா (M.C.RAJAH)  (1885 – 1945)

அண்ணல் அம்பேத்கருக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அயராது போராடிய தலைவர் ராவ் பகதூர் எம்.சி.ராஜா என்றழைக்கப்பட்ட மயிலை சின்னதம்பி ராஜா ஆவார்.  இவர் தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்கும்,  சிறந்த பங்களிப்பை நல்கியிருக்கிறார்.  ஏனோ இவரைக் கொண்டாடத் தவறி விட்டோம்!

இவருடைய சிறார் இலக்கிய பங்களிப்பைப் பற்றிப் பார்க்குமுன், இவரைப் பற்றிய சிறு அறிமுகம்:-

இவர் பட்டப்படிப்பை முடித்துப் பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார்.  இளம்வயதிலேயே அரசியலில் நுழைந்த இவர் நீதிக்கட்சியின் சார்பாக நின்று, சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.  1919 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை மாகாணச் சட்டசபையின்  மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

அக்காலத்தில் தீண்டத்தகாத மக்களின் தலைவராகச் சட்டசபையில் அடியெடுத்து வைத்த முதல் தலைவர் ராஜா தாம்.  நீதிக்கட்சிச் சார்பில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில் பங்கேற்ற தீண்டப்படாத சமூகத்தின் முதல் தலைவரும் இவர் தாம்.  ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சங்கம் துவங்கப்பட்ட போது, அதன் செயலாளராகவும் இவர் இருந்தார்.

இவர் தீண்டாமை ஒழிப்பு, தாய்மொழிக் கல்வி உரிமை, சிறுபான்மையோர் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்.  ஆதி திராவிடர் என்ற சொல்லை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் இவரே.

 ‘கல்வி (என்பது) உரிமை எனும் கல்வியாக இருத்தல் வேண்டும்… ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்குக்கூட கட்டாயக் கல்வி தேவையா, அதுவும் குறிப்பிட்ட இனத்து ஆண், பெண்களுக்குத் தேவையா என்று விவாதிப்பது, இன்றைய நிலைக்கு ஒவ்வாத வாதமாகும்.

தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகளுக்குக் கட்டாயக் கல்வித் திட்டம் தேவை. அவர்களுக்கு மதிய உணவும் வயிறார வழங்க வேண்டும். அத்தோடு அப்பிள்ளைகளின் சிறு கூலியால் வயிறு வளர்த்த பெற்றோருக்கு, ஒருவித நிதி உதவியும் அரசாங்கம் செய்ய வேண்டும்!’ என்று ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ (The Oppressed Hindus) என்ற புத்தகத்தில் எம்.சி.ராஜா எழுதியிருக்கிறார். 

ஏழைக் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல பசி தடைக்கல்லாக இருப்பதால், அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று எம்.சி.ராஜா 1922-ல் சட்டப் பேரவை கவுன்சிலில் வலியுறுத்தினார். 

இவரின் வழிகாட்டுதலின்படி, ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட தொழிலாளர் பள்ளியில் தான் நீதிக்கட்சி அரசால் 1920-ல் மதிய உணவுத் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.. 

பிறகு, நிதிச் சுமையைக் காரணம் காட்டி, பிரிட்டிஷ் அரசு இந்தத் திட்டத்தை நிறுத்திவிட, பின்னர் 1960-களில் காமராஜர் தமிழகம் முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். .

எம்.சி.ராஜா தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்,  கல்வியாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகம் பெற்றிருந்தார்.  சென்னை ராயப்பேட்டை வெஸ்லியன் பள்ளியின் கண்காணிப்பாளராகவும், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பேராசிரியராகவும் இருந்திருக்கிறார்.  ராயப்பேட்டை வெஸ்லியன் பள்ளியில் இவரும், திரு.வி.க.வும் சேர்ந்து படித்திருக்கிறார்கள். 

ஆர்.ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து, ‘கிண்டர்கார்டன் ரூம் –மழலையர் பாடல்கள்’   (KINDERGARTEN ROOM)  (Nursery Rhymes and Jingles, Kindergarten Games, Action, Marching, Kollattam and Kummi Songs and Riddles) என்ற நூலை எழுதி 1930 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். 

இதிலுள்ள பெரும்பாலான பாடல்களைப் பாடி வளராத தமிழ்க் குழந்தைகளே இல்லையெனும் அளவுக்கு, இவை மிகப் பிரபலமானவை.  இவர் எழுதினார் என்பது தெரியாமல், வழிவழியாக வந்த நாட்டுப்புறப் பாடல்கள் என்றே எல்லோரும் நம்பியிருந்தனர். 

இந்த ‘கிண்டர்கார்டன் ரூம் – மழலையர் பாடல்கள்’ நூல் சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டதற்குப் பிறகே, இவர் தாம் இப்பாடல்களின் ஆசிரியர் என்ற உண்மை தெரிய வந்தது.   .

இவர் எழுதிய “கை வீசம்மா கைவீசு”, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” ‘நிலா நிலா ஓடி வா’ என்பவை, மழலை பருவத்திலேயே குழந்தைகளுக்கு நம் தாய்மார்களால் வழிவழியாகச் சொல்லிக் கொடுக்கும் பிரபலமான பாடல்கள்  .இவை நம் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்டவை..      

கைகளையும், உடலையும் ஆட்டி எளிய உடற்பயிற்சி செய்யத் தூண்டும் இப்பாடல்கள், குழந்தைகளுக்குப் புரியக் கூடிய வகையில் எளிய நடையில் அமைந்தவை.  இதிலுள்ள இசைநயமும் குழந்தைகளைக் கவரக் கூடியவை.   

முதலாவது நமக்குப் பரிச்சயமான ‘கைவீசம்மா கை வீசு’ பாடல் “கைகளை வீசுதல்” என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.. 

“அப்பம்  வாங்கலாம்  கை வீசு

அமர்ந்து  தின்னலாம்  கைவீசு

கம்மல்  வாங்கலாம்  கைவீசு

காதில்  அணியலாம்  கைவீசு

பள்ளிக்குப்  போகலாம்  கைவீசு

படித்து   வரலாம்  கைவீசு”

என்பன போன்ற நமக்குத் தெரியாத சில வரிகளும் இதில் உள்ளன.

இரண்டாவது நமக்கு மனப்பாடமாகத் தெரிந்த, ‘நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா’ என்ற நான்கு வரிப்பாடலின் தலைப்பு “நிலாவை அழைத்தல்”.

“நிலாச்சோறு சமைத்தல்” என்ற நான்காவது பாடலிலிருந்து, சில வரிகள் மட்டும்:-

“அரிசி  குற்று  முன்னெ

அரித்துக்  கழுவு  பின்னெ

உலையில் அரிசி  போடு

உடனே  மேலே  மூடு…..”

ஐந்தாவது “நிலாவோடு வார்த்தை ஆடிக் காண்பித்தல்”

நிலா  நிலா  எங்க  போறாய்?

மலையாளக்  குளத்துக்கு  மண்ணெடுக்கப்  போகிறேன்.

மண்  என்னத்திற்கு?

சொப்பு  பண்ண.

சொப்பு  என்னத்திற்கு?……

……………….

பிள்ளை  என்னத்திற்கு?

ஓலைப் பாயிலே  ஓடி  விளையாட

ஈச்சம்  பாயிலே  இருந்து  விளையாட

பிரப்பம்  பாயிலே  புரண்டு  விளையாட

கோரைப்  பாயிலே குதித்து  விளையாட

தாழம்  பாயிலே தவழ்ந்து  விளையாட”

எத்தனை விதமான பாய்கள், அப்போது புழக்கத்தில் இருந்திருக்கின்றன? என்றறிய வியப்பு!

6 வது பாடலும், நமக்கு நன்கு தெரிந்த “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ பாடல்.

“ஏழாம்காய் ஆட்டம்”, “நான்கு மூலைகளிலும் நின்று விளையாடல்”, “புட்டம் தட்டி விளையாடுதல்”, “தோட்ட விளையாடல்”, “தலை பிடித்தாட்டல்” போன்ற விளையாட்டுகளின் போது பாடப்படும் விளையாட்டுப் பாடல்களும் இதில் உள்ளன.

15 வது பாடல் – சிற்றுண்டி உண்ணல்

“மண்ணடியில் விற்கும் லட்டு

வாங்கி மடியில் கட்டு

எடுத்துக் கொஞ்சம் பிட்டு

எனக்கு முன்னே இட்டு

உண்டு விடு ஏப்பம்

ஓடு கொஞ்சம் பார்ப்போம்”

குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் பிரபலமான லட்டு பாடல், இந்தப் பாடலின் தாக்கத்தில் உருவானதோ?

19 ஆம் பாடல் “உள்ளங்கையில் நெல்லு குற்றிக் காட்டும் பாடல்”

“அகத்திக் கீரை பிண்ணாக்கு

அதிலே கொஞ்சம் நெய்வாரு

பிஞ்சி கத்திரிக் காய்பொரியல்

பின்னும் கொஞ்சம்  நெய்வாரு”

20 ஆம் பாடலின் தலைப்பு “பராக்கு காட்டல்”

இது நமக்குத் தெரிந்த ‘காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா, குருவி கொண்டக்குப் பூ கொண்டு வா’ என்ற 4 வரி பாடல் தான்;    

“அப்பா! முன்னே வாருங்கள்!

அழாதே சொல்லுங்கள்” என்று இரண்டு வரிகள் சேர்ந்து முடிகிறது.

“முத்தே! பவழமே! முக்கனியே! சர்க்கரையே! என்ற தாலாட்டுப் பாடலின் சில பல்லவிகளும், அரச மரத்துக்கிளி, புன்னை மரத்துக்கிளி(24)  என்ற பாடலும், நம் திரையிசையில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

குழந்தைகளுக்குப் பிடித்த கொக்கு,கிளிப் பாடல்களுடன், கோலாட்ட கும்மி பாடல்களும் இதில் உள்ளன.

26 ஆம் பாடலான ‘பனைமரப் பாட்டு’ மிகவும் சிறப்பு.  தன் பெருமைகளைப் பனைமரமே கூறுவது போல் அமைந்த, அதிலிருந்து சில வரிகள் மட்டும்:-

“படுக்கப் பாய் நானாவேன்

பாய் முடையத் தோப்பாவேன்

வெட்ட நல்ல விறகாவேன்

வீடு கட்ட வாரையாவேன்

கட்ட நல்ல கயிறாவேன்

கன்று கட்ட தும்பாவேன்….”

நூலின் இறுதியில் வரும் பாடல்கள், எந்த மெட்டில் பாடப்பட வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளதால், இவருக்கு இசையிலும் நல்ல ஞானம் இருந்திருக்க வேண்டும். என்று தெரிகிறது. 

(எ.கா) தவளை ஆட்டம் (32)  – வாலகுங்குரு என்ற மெட்டு

மோதிர மாட்டம் (33) – பட்டுவாகூந்தன என்ற மெட்டு

ஜாடி மேலே குரங்கு (முந்திரிப்பழம்) சொம்பு நிறைய கெம்பு (மாதுளம்பழம்) காட்டிலே ஒரு துளி ரத்தம் (குன்றிமணி) போன்று குழந்தைகள் ரசித்து மகிழ 12 விடுகதைகளும் இதில் உள்ளன.

குழந்தையின் கல்வி என்பது இயற்கையைப் புரிந்து கொள்ளவும், இயற்கையை நேசித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் தமது சுற்றத்தின் மீது அன்பு கொள்ளவுமான ஒரு பரந்த பார்வையைக் குழந்தைக்குக் கற்றுத் தரும் என்பதே இந்நூலின் சிறப்பு. 

எனவே பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, குழந்தைகளுக்கு வீட்டில் சொல்லித் தரவும் ஏற்ற நூல் இது என்று 05/01/2013 அன்று இந்நூலின் மறுபதிப்பு வெளியான போது, இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கெளதம சன்னா என்பவர் எழுதியுள்ளார்.

‘ராஜா அவர்கள் பல பள்ளிப் புத்தகங்களின் ஆசிரியர் ஆவார்.  நம்மைப் பிடித்த கெட்ட வேளையால், அவர் எழுதிய கவிதைகள் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், அவர் ஒரு கவிதா உள்ளம் படைத்தவர் என்பதை அவர் வரலாற்றிலிருந்து அறிகிறோம்” என்று அறிஞர் அன்பு பொன்னோவியம் 1962 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த ‘அறவுரை’ எனும் மாத இதழில் எழுதியுள்ளதாக இந்நூலின் அணிந்துரையில், கெளதம சன்னா குறிப்பிட்டுள்ளார். 

இவர் எழுதிய ‘நீதி மார்கக் கதைகளும் பாடல்களும்’’ புத்தகத்தை, ‘சிறுவர்களும், சிறுமிகளும் வாங்கி வாசிப்பாரேல் எளிதிற் தமிழ் நடையை உணர்வார்கள் என்பது திண்ணம்’ என்று 1907 ஆகஸ்ட் 27 அன்று வெளியான ‘ஒரு பைசா தமிழன்’ இதழில் பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிட்டிருக்கிறார்.  இப்புத்தகம் உட்பட இவர் எழுதிய பெரும்பான்மையான நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது..

இந்த ‘கிண்டர்கார்டன் ரூம்-மழலையர் பாடல்கள்’ என்ற நூலை முனைவர் சுபாஷிணி தலைமை வகிக்கும் சர்வதேச தன்னார்வ நிறுவனமான  தமிழ் மரபுக்கட்டளை என்ற அமைப்பு 2017 ஆம் ஆண்டு மின்னூலாக வெளியிட்டுள்ளது.  மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை மின்பதிப்பாக்கித் தமிழ் வளத்தை நிரந்தரமாகப் பாதுகாக்கும் அரிய முயற்சியில் இந்தத் தமிழ் மரபுக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

20/08/2017 அன்று இந்த மின்னூலை வெளியிட்டுத் தமிழ் மரபுக்கட்டளை  எழுதியிருப்பதாவது:-

“இந்தப் புத்தகம் 1930ம் ஆண்டு முதல் பதிப்பு கண்டது. அப்போது அதன் விலை 8 அணா.  அதற்குப் பிறகு பள்ளி நூல்களிலும் பள்ளிப் பாடப்புத்தக நூல்களிலும், இந்த நூலில் உள்ள பல பாடல்கள்,  மக்களின் வாய்மொழிப் பாடல்களாகவும், பண்பாடாகவும் மாறி விட்டது. 

தமிழகம் மட்டுமன்றி தமிழர்கள் உலகின் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றார்களோ, அங்கெல்லாம் இப்பாடல்களைக் கொண்டு சென்றதால், உலகம் முழுவதும் சிறுவர்கள் பயின்று பாடும் பாடல்களாக இன்றும் இவை உள்ளன.

அந்த வகையில், மிக நீண்ட காலம் மறு பதிப்பு செய்யப்படாத இப்புத்தகம், தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல் வெளியீடாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இந்த நூலைப் பாதுகாத்து வைத்த சென்னையில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்திற்கு எமது நன்றி”

இம்மின்னூலை வாசிக்க இணைப்பு:- http://www.tamilheritage.org/old/text/ebook/THF_KindergardenRoombyMCRajaJG.pdf

Share this: