தலையங்கம் – ஜூலை 2023

Students_read_pic

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம்.

2023 ஆம் ஆண்டுக்கான ‘சாகித்திய பால புரஸ்கார் விருது’ எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய, ‘ஆதனின் பொம்மை’ என்ற நூலுக்குக் கிடைத்துள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குச் சுட்டி உலகம் சார்பாக, வாழ்த்துச் சொல்வதில் மகிழ்கின்றோம்!

ஆண்டுதோறும் சிறுவர் இலக்கியத்தில் வெளியான சிறந்த நூலுக்கு, இந்த விருதைக் கொடுக்கின்றார்கள். ‘ஆதனின் பொம்மை’ கீழடியைக் களமாக எழுதப்பட்டுள்ள இளையோர் நாவல். இதை வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலைப் பற்றிய விரிவான கட்டுரை, ஏற்கெனவே சுட்டி உலகத்தில் வெளியாகியுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகத்துடன் ஒத்துப் போவதையும், ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. எனவே தமிழர்களின் தொன்மையையும், வரலாற்று வேர்களையும், நம் இளையோர்க்கு அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ள இந்நாவலுக்கு, விருது கிடைத்தது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. நம் சிறுவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவலிது. பெற்றோர் அவசியம் இந்நூலை வாங்கித் தங்கள் பிளைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும்.

இந்நூலை வாசிக்கும் மாணவர் ஒருவருக்கு கீழடி வரலாற்றில் ஆர்வம் ஏற்பட்டு, அதைக் குறித்த தேடலில் இறங்கலாம்; நாளையே அவர் வரலாற்று அறிஞராகவோ, அகழாய்வு நிபுணராகவோ வரலாற்றில் தடம் பதிக்கலாம். யார் கண்டது? இப்படி மாணவருக்குள் மறைந்திருக்கும் பன்முகத்திறமை வெளிப்பட வேண்டுமென்றால், பாடப்புத்தகம் தாண்டிய பல்வேறு புத்தகங்களை அவர்கள் வாசிப்பது அவசியம்.   

முக்கியமாக நம் குழந்தைகள் மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையான நம் தாய்மொழித் தமிழில் வாசிப்பதிலும், எழுதுவதிலும் தேர்ச்சிப் பெற வேண்டும். தமிழுடன் கூடவே மற்ற மொழிகளைக் கற்பதில் தடையேதுமில்லை. ஆனால் தமிழைப் புறக்கணித்து, அதற்குப் பதிலாகத் தம் குழந்தைகளுக்கு அந்நிய மொழிகளைக் கற்பிக்கும் பெற்றோர் சிந்திக்க வேண்டும்.

தாய்மொழியே சிந்தனைகளின் திறவுகோல்;குழந்தைகளின் இயல்பான மூளை வளர்ச்சிக்கும், படைப்பாற்றலுக்கும் தாய்மொழி மிகவும் அவசியம் எனப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சுட்டி உலகத்தில் தற்காலத்தில் வெளியாகியுள்ள நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு சிறுவர் நூல்களை, வயதுக்கேற்ப அறிமுகம் செய்துள்ளோம். சிறுவர்களின் வயதுக்கேற்ற நூல்களை வாங்கி வாசித்துத் தேடலையும், வாசிப்பையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாசிப்பும் ஒரு பழக்கமே. சிறுவயதில் வாசித்துப் பழகிவிட்டால், முதுமை வரை அது நம் கூடவே வரும். முதுமையில் பொழுது போகவில்லை என்ற புலம்பலுக்கு, இடமேயிராது.

‘சுட்டி உலகம்’ காணொளியில் சிறந்த குழந்தைப் பாடல்களும், கதைகளும் அனிமேஷனுடன் வெளியாகின்றன. சின்னக் குழந்தைகளுக்குப் பாடல்களைப் போட்டுக் காட்டி, உச்சரிப்பை மேம்படுத்துங்கள். தமிழ்ச் சொல்லிக் கொடுக்கும் காணொளிகளையும், அண்மையில் வெளியிட்டுள்ளோம். குழந்தைகள் தமிழ் அரிச்சுவடியை ஆழமாகக் கற்க, இக்காணொளிகள் உதவும்.

வாசிப்பைச் சுவாசிப்போம்!

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: