ஆள்காட்டிக் குருவி  (Lapwing)

Lapwing_pic

ஆள்காட்டிக் குருவி மனிதர்களையோ, விலங்குகளையோ கண்டால், சத்தமாகக் குரல் எழுப்பி, மற்ற பறவைகளுக்கும், உயிரினங்களுக்கும் அபாய எச்சரிக்கை செய்யுமாம். இப்படி ஆளைக் காட்டிக் கொடுப்பதால், இதற்கு இப்பெயர். அண்டங் காக்காவை விடச் சற்றுப் பெரிய உருவம். சிவப்பு மூக்கு ஆள்காட்டி, மஞ்சள் மூக்கு ஆட்காட்டி என, இதில் இரு வகை உண்டு.

இதன் கழுத்தும், மார்பும் கறுப்பு. உடலின் மேல் பாகம் பழுப்பு; வயிறு வெள்ளை; நீண்ட ஒல்லியான மஞ்சள் கால்கள்; கண்களுக்கு மேல், சிவந்த தசைத் துணுக்குகள் துருத்திக் கொண்டு இருக்கும். இந்தத் தசைத் துணுக்கு, சிவப்பு நிறம் என்றால், சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red wattled Lapwing); மஞ்சள் என்றால், மஞ்சள் மூக்கு ஆட்காட்டி (Yellow wattled Lapwing). இதன் கண்ணுக்குப் பின் பக்கத்தில் இருந்து, வெள்ளை நிறம் துவங்கி, வயிற்றின் வெள்ளையோடு போய் சேரும்.

இதன் முக்கிய உணவு, பூச்சிகளும், நத்தைகளும். இக்குருவி தரையில் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும். இதன் முட்டைகள் கறுப்புப் புள்ளிகளுடன் மண் நிறத்தில், சூழலையொத்து இருப்பதால், அடையாளம் காண்பது கடினம்.

“கணத்தல் என்ற சொல், விட்டு விட்டு ஒலித்தலைக் குறிக்கும். ஆட்காட்டிக் குருவி “இட்டி இட்டி” என்று ஒலிப்பதாக, மலையாளத்தில் கூறுவர். அதனால் இதை, ‘இட்டி இட்டிக் குருவி’ என்று வடமலையாளத்தில் அழைப்பர்.

ஆள்காட்டியைப் பற்றி அரிய பழமொழிகள், தமிழ்நாட்டில் வழங்குகின்றன. ‘ஆட்காட்டி தெரியாமல், திருடப் போகிறவன் கெட்டிக்காரனா? அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனா?’ என்றொரு பழமொழி வழங்குகின்றது. ஆட்காட்டி அருகில் இருப்பது தெரியாமல் திருடப்போகிறவன், மாட்டிக் கொள்வான் என்பதே பொருளாகும்.”  (பி.எல்.சாமி)

ஆள்காட்டிக்குருவியைப் பற்றிய நாட்டுப் பாடல்:-

இந்தப் பாடலில் ‘ஆவாரம்பூ ஆக்காட்டி’ என்பதால், மஞ்சள் மூக்கு ஆட்காட்டி என்கிறார் ஆசிரியர். மஞ்சள் நிறமுடைய ஆவாரம்பூவைப் போல, மஞ்சள் மூக்கு ஆள்காட்டிக்குக் கண்ணைச் சுற்றிலும் மஞ்சள் நிறத்தோல் இருக்கும் என்று ஆசிரியர் சொல்லியிருப்பது, உணர்ந்து இன்புறத்தக்கது.

என்ன சுட்டிகளே! ஆள்காட்டிக் குருவி பற்றித் தெரிந்து கொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவை பற்றித் தெரிந்து கொள்வோம்.

(Pc -Thanks – Wikipedia)

Share this: