இச்சிறுவர் படம் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஆங்கில சிறார் எழுத்தாளர் ரோல் தால் (Roald Dahl) இதே பெயரில் எழுதிய நாவலின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
வில்லி வோங்கா நடத்தும் சாக்லேட் பாக்டரி பல மர்மங்கள் நிறைந்த மாய உலகம். ஒரு காலத்தில் அதில் தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். வெளியில் வைத்தாலும் உருகாத சாக்லேட் உட்பட, குழந்தைகளைக் கவரும் விதத்தில், விதவிதமான அதிசய சாக்லேட்டுகளை வில்லி வோங்கா தயாரிக்கிறார். அதனால் அவருடைய வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது.
ஆனால் போட்டி நிறுவனங்கள் அவருடைய தொழிற்சாலைக்குள் தங்கள் உளவாளிகளை அனுப்பி, அந்தச் சாக்லேட் தயாரிக்கும் செய்முறை ரகசியங்களைத் திருடித் தயாரிக்கின்றார்கள், அதனால் வில்லி வோங்காவின் வியாபாரம் சரியத் தொடங்குகிறது.
திடீரென்று ஒரு நாள், வில்லி வோங்கா தம் தொழிற்சாலையை மூடப் போவதாகச் சொல்லி, அங்கு வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றார். அப்படி அனுப்பப்படும் தொழிலாளர்களுள், சார்லி என்ற சிறுவனின் தாத்தா ஜோவும் ஒருவர். தன் தாத்தா மூலமாக இத்தொழிற்சாலை பற்றிய பல விபரங்களைச் சார்லி தெரிந்து கொள்கிறான்.
வில்லி வோங்காவின் மூடப்பட்ட தொழிற்சாலையின் கதவுகள் மீண்டும் திறக்கப்படவே இல்லை. தொழிலாளர்கள் யாரும் உள்ளே போவதோ, வெளியேறுவதோ இல்லை. ஆனால் உள்ளே இருந்த புகைபோக்கியின் வழியாக, புகை வெளியேறுகிறது. கடைகளுக்கு விதவிதமான வோங்கா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வருகின்றன. மனிதர்கள் யாரும் உள்ளே போகாமல் சாக்லேட் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்ற மர்மம் நீடிக்கின்றது.
சார்லியின் குடும்பம், மிகவும் வறுமையான நிலையில் இருக்கிறது. அப்பாவை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார்கள். வீட்டில் முட்டைக்கோஸ் சூப் தவிர, சாப்பாட்டுக்கு எதுவுமில்லை. இரண்டு தாத்தா, இரண்டு பாட்டி அப்பா, அம்மா எனக் குடும்பமும் பெரிது.
ஒரு நாள் திடீரென்று ஊரின் பல இடங்களில் ஒரு நோட்டீசு ஒட்டப்படுகின்றது. பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று, வில்லி வோங்கா ஐந்து சிறுவர்களைத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கிறார்; அதற்காக சாக்லேட் பாரில், ஐந்து தங்கக் கூப்பன்கள் வைக்கப்பட்டுள்ளன; அவற்றைக் கண்டெடுக்கும் சிறுவர்கள், உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.; ஐவரில் சிறப்புப் பரிசு ஒருவருக்குக் கிடைக்கும் என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.
உடனே தங்கக் கூப்பன்களைத் தேடியெடுக்க, உலகெங்கும் சிறுவர்களும், பெற்றோர்களும் வில்லி வோங்காவின் சாக்லேட்டுகளை வாங்கிக் குவிக்கிறார்கள். எந்நேரமும் சாக்லேட்டாகவே தின்று தீர்க்கும் குண்டுப்பையன் அக்ஸ்டஸுக்கு முதல் கூப்பன் கிடைக்கிறது. ஊடகங்கள் அவன் வீட்டுக்குப் படையெடுத்து, தங்கக் கூப்பன் அவனுக்குக் கிடைத்த விபரத்தைப் பேட்டி எடுத்து வெளியிடுகின்றார்கள்.
சார்லிக்கு ஆண்டுக்கு ஒரு முறை, அவன் பிறந்த நாளில் மட்டுமே சாக்லேட் கிடைக்கும். அவன் பிறந்த நாளுக்கு அவன் அம்மா வோங்காவின் சாக்லெட் வாங்கித் தருகிறார். அதனுள் தங்கக்கூப்பன் இருக்க வேண்டுமே என்று குடும்பமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. ஆனால் அவர்கள் ஆசைப்பட்டபடி, அதில் கூப்பன் இல்லை.
தாத்தா ஜோ இரகசியமாகத் தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைக் கொடுத்து, இன்னொரு பாரை வாங்கச் சொல்கிறார். ஆனால் அதிலும் கூப்பன் இல்லை.
அடுத்தடுத்து மூன்று பணக்கார குழந்தைகளுக்குக் கூப்பன் கிடைத்து அவர்களுடைய பேட்டி தொலைக்காட்சியில் வெளியாகின்றது. கடைசிக் கூப்பன் யாருக்குக் கிடைக்கப் போகின்றது என்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
தெருவில் கண்டெடுக்கும் பணத்தைச் சார்லி எடுத்துப் போய், ஒரு சாக்லேட் வாங்கிப் பிரிக்கும் போது, அதில் கூப்பன் இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாகக் கத்திக் கொண்டே வீட்டுக்கு ஓடுகிறான் சார்லி.
குறிப்பிட்ட தினத்தில் அவனும், அவன் தாத்தா ஜோவும் வில்லி வோங்காவின் தொழிற்சாலையைப் பார்க்கக் கிளம்புகிறார்கள். வில்லி வோங்கா ஐந்து சிறுவர்களையும் வரவேற்று, உள்ளே அழைத்துச் செல்கிறார். .
உள்ளே சாக்லேட் குழம்பு ஆறாக ஓடுகின்றது; ஒரு பெரிய சாக்லேட் பூங்கா இருக்கின்றது. அதில் இருக்கும் புல்லைக் கூடச் சாப்பிடலாம் என்கிறார் வோங்கா. சாக்லேட் அருவியாகக் கொட்டுகின்றது. ராட்சதக் குழாய்கள் அந்த ஆற்றிலிருந்து குழம்பை உறிஞ்சி, மேலேசாக்லேட்டாக மாற்றும் அறைக்கு எடுத்துச் செல்கின்றன.
சொல்லச் சொல்லக் கேட்காமல், ஆற்றில் இருந்து சாக்லேட்டை அள்ளிக் குடிக்கும் அகஸ்டஸ், கால் தவறி ஆற்றில் விழுந்து தத்தளிக்கிறான், இது போல் சார்லியுடன் சென்ற நான்கு குழந்தைகளும் வோங்கா சொன்னதுக்கு மாறாக நடந்து விபத்துக்குள்ளாகிறார்கள். நல்ல வேளையாக உயிருக்கு ஆபத்தின்றி மீட்கப்படுகின்றார்கள்.
கடைசியாக அவர் வைத்த சோதனையில், சார்லியே வெல்கிறான். ஒரு நல்ல சிறுவனைத் தம் தொழிற்சாலைக்கு வாரிசாகத் தேர்ந்தெடுக்கவே, இப்போட்டிக்கு ஏற்பாடு செய்ததாகச் சொல்கிறார் வில்லி வோங்கா.
தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊம்பா லூம்பா குள்ள மனிதர்கள், பறக்கும் கண்ணாடி லிப்ட், கொட்டைகளைத் தரம் பிரிக்கும் அணில்கள், ஒளி அலைகள் போல், சாக்லேட்டைத் துகள்களாக்கித் தொலைக்காட்சி வழியே அனுப்பும் புதிய தொழில் நுட்பம், சாக்லேட் ஆற்றில் படகுப்பயணம் என விதவிதமான அதிசயக் காட்சிகள், குழந்தைகளை வெகுவாகக் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதால், அவர்களைப் பெரிதும் மகிழ்விக்கும் திரைப்படம்.
குழந்தைகள் கேட்பதையெல்லாம், உடனே வாங்கிக் கொடுப்பது கூடாது; தொலைக்காட்சியின் கெடுதல்கள், எந்நேரமும் சூயிங்கம் மெல்வது கெட்ட பழக்கம், அளவுக்கு மீறி சாக்லேட் தின்னக் கூடாது போன்ற செய்திகளையும், மெல்லிய நகைச்சுவை இழையோட இப்படம் தருவதால், அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
நெட்பிளிக்ஸில் இது காணக் கிடைக்கின்றது.
(அக்டோபர் 2021 பொம்மி சிறுவர் இதழில் எழுதியது)