அழுகின்ற மரம்

weeping willow

மரம் மண்ணின் வரம் – 11

வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயரைப் பார்த்தவுடன் ‘என்னது மரம் அழுமா?’ என்று ஆச்சர்யமாக இருக்கும். உண்மையில் மரம் அழாது. பிறகேன் இந்த மரத்துக்கு ‘அழுகின்ற வில்லோ மரம்’ என்ற பொருளில் ‘weeping willow’ எனப் பெயரிடப்பட்டுள்ளது?

Salix babylonica என்ற அறிவியல் பெயரை உடைய இந்த வீப்பிங் வில்லோ மரத்தின் கிளைகளும் இலைகளும் மற்ற வில்லோ மரங்களைப் போல மேல்நோக்கி வளராமல் கொடி போல துவண்டு தரையை நோக்கி வளரும். தொலைவிலிருந்து பார்க்கும்போது இம்மரம் மிகவும் சோகமாகவும் வாட்டமாகவும் இருப்பது போலக் காணப்படும். அது மட்டும் அல்லாமல் மழைக்காலத்தில் மரக்கிளைகளின் ஒவ்வொரு நுனியிலிருந்தும் நீர் வடிவதைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த மரமும் அழுவதைப் போலத் தோன்றும். அதனாலேயே இதற்கு இப்பெயரிடப்பட்டுவிட்டது. இதன் தாயகம் சீனா.

என்னதான் அழுகின்ற மரம் என்று பெயரெடுத்திருந்தாலும் பச்சைத்திரை போட்டது போன்று காற்றில் அதன் கிளைகள் அசைந்தாடும் அழகு மற்றும் வசீகரம் காரணமாக உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி வீடுகளிலும் பூங்காக்களிலும், பெரு வளாகங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. மேலும் அந்தந்தப் பகுதி மக்களின் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கைகளோடும் கலந்துவிட்டது.

கிழக்காசிய மக்களின் மரபார்ந்த நம்பிக்கைகளில் வீப்பிங் வில்லோ மரம் துயரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. சீனாவின் கல்லறைத் தோட்டங்களில் வீப்பிங் வில்லோ மரங்களைத் தவறாமல் காணலாம். சீன மக்களின் நாட்டுப்புறக் கதைகளிலும் தொன்மக் கலைகளிலும் வீப்பிங் வில்லோவுக்கு பிரத்தியேக இடம் உண்டு. அமெரிக்க நாடுகள் சிலவற்றிலும் வீப்பிங் வில்லோ மரங்கள் குறித்த நம்பிக்கைகள் உண்டு. அவை மரணமில்லாப் பெருவாழ்வு, மறுபிறவி போன்றவற்றோடு தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன.

இலக்கியத்தைப் பொறுத்தவரை, ஷேக்ஸ்பியரின் கவிதை முதல் ஹாரிபாட்டர் கதை வரை வில்லோ மரங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரஞ்சுப் பேரரசர் நெப்போலியனுக்கும் வில்லோ மரத்துக்கும் கூட தொடர்பு உண்டு. பிரிட்டிஷ் அரசால் செயின்ட் ஹெலனா தீவுக்கு அவர் நாடுகடத்தப்பட்டிருந்தபோது அவர் தனது கடைசிகாலத்தில் மன அமைதிக்காக அங்கிருந்த வீப்பிங் வில்லோ மரத்தடியில் அமர்ந்திருப்பது வழக்கம் என்றும், தான் இறந்த பிறகு தன்னை அந்த மரத்தடியிலேயே புதைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படியே அவரது இறப்புக்குப் பிறகு அவரது உடல் அங்கு புதைக்கப்பட்டு கல்லறை எழுப்பப்பட்டது. அம்மரம் ‘நெப்போலியனின் வில்லோ மரம்’ என்றே குறிப்பிடப்படுகிறது. இன்றும் அந்த வீப்பிங் வில்லோ மரம் நெப்போலியனின் நினைவுச்சின்னமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டுவருகிறது. அம்மரத்தின் கிளைகள் நெப்போலியனின் பற்றாளர்களால் உலக நாடுகள் பலவற்றிற்கும் கொண்டுசெல்லப்பட்டு அவர் நினைவாக ஊன்றி வளர்க்கப்படுகின்றன.

வில்லோ மரம் பிற மரங்களைப் போல அதிக காலம் வாழாது. 20 முதல் அதிகபட்சமாக 50 ஆண்டுகள் வரை வாழும். ஆனால் இதன் கிளைகளிலிருந்து புதிய மரங்களை உருவாக்குவது மிக எளிது. வீப்பிங் வில்லோ மரத்தின் சிறு கிளையை வெட்டி நட்டுவைத்தாலும் சீக்கிரமாகவே வேர்பிடித்து மரமாக வளர்ந்துவிடும்.

வில்லோ மரத்தின் மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவம் salicytic acid என்னும் அமிலத்தன்மை கொண்டது. இது ஆஸ்பிரின் மருந்துக்கு நிகரானது.

முற்காலத்தில் தலைவலி, காய்ச்சல், பல்வலி போன்றவற்றுக்கான மருந்தாகவும் வில்லோ மரப்பட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போதும் கூட சில கலாச்சாரங்களில் இதன் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் கசாயம் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

சுட்டிகளே, அழகிய வீப்பிங் வில்லோ மரம் பற்றி அறிந்துகொண்டீர்களா? இனி எங்காவது படத்திலோ நேரிலோ இம்மரத்தைக் கண்டால் எளிதில் அடையாளம் கண்டுகொள்வீர்கள் அல்லவா?

(படங்கள் – கீதா மதி)

Share this: