வாண்டரிங் ஆல்பட்ராஸ்

wandering-albatross

பறவைகள் பல விதம் – 11

சுட்டிகளே, இந்த மாதப் பறவை எது என்று அறிய ஆவலோடு இருக்கிறீர்களா? வாண்டரிங் ஆல்பட்ராஸ் பறவைதான் அது.

ஒரு நாளின் பெரும்பான்மை நேரத்தை பறத்தலிலேயே கழிப்பதால் ‘சுற்றித்திரியும் ஆல்பட்ராஸ்’ என்ற பொருளில் ‘Wandering Albatross’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் Diomedea exulans.  தமிழில் இதை ‘அண்டரண்டப் பறவை’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

உலகிலேயே மிக அதிகமான சிறகுவிரி நீளம் உடைய பறவை இதுதான்.

சிறகுவிரி நீளம் என்றால் என்ன தெரியுமா? ஒரு பறவை இரண்டு இறக்கைகளையும் விரித்திருக்கும்போது ஒரு இறக்கை நுனியிலிருந்து மறு இறக்கை நுனி வரை உள்ள அளவே சிறகுவிரி நீளம். 12 கிலோ எடையுள்ள வாண்டரிங் ஆல்பட்ராஸ் இறக்கைகளை விரித்தால் சுமார் 3.2 மீட்டர் நீளம் இருக்கும். சராசரி மனிதர்களின் உயரத்தை விடவும் இது மிக அதிகம்.

1965-ஆம் ஆண்டு அண்டார்டிக் பகுதியைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கப்பலில் ஆய்வுக்கெனப் பிடிக்கப்பட்ட ஒரு வாண்டரிங் ஆல்பட்ராஸ் அதன் சிறகுவிரி நீளம் காரணமாக ‘கின்னஸ்’ சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் சிறகுவிரி நீளம் எவ்வளவு தெரியுமா? 3.63 மீட்டர்!

வாண்டரிங் ஆல்பட்ராஸ் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பறக்கும். ஒரு நாளில் மட்டும் அது பறந்து கடக்கும் தூரம் சுமார் 900 கி.மீ. ஒரு வருடத்தில் தோராயமாக 1,20,000 கி.மீ.  தூரம் பறக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன் ஆயுட்காலம் சுமார் 50 – 70 வருடங்கள் எனில் தன் வாழ்நாளில் எவ்வளவு தூரத்தை அது பறந்து கடக்கும்? நினைக்கையிலேயே மலைப்பாக உள்ளது அல்லவா?

ஆல்பட்ராஸ் பறவைகள் இனப்பெருக்கக்காலத்தில் குறிப்பிட்ட சில தீவுகளில் கூடும். ஒரு காலனி போல் பல பறவைகள் ஒரே இடத்தில் பக்கம் பக்கமாகக் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும். அச்சமயத்தில் அவை இருக்குமிடம் பெரும் சத்தமாகவும் ஆரவாரமாகவும் இருக்கும். ஆனால் கடலுக்கு மேல் பறக்கும்போது கொஞ்சம் கூட சத்தமெழுப்பாது.   

வாண்டரிங் ஆல்பட்ராஸ் பறவைகள் ஒரு தடவை ஜோடி சேர்ந்தால் பிறகு பிரியாது. இவை இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை ஒரே ஒரு முட்டை இடும். 11 வாரங்கள் அடைகாத்தபின் முட்டை பொரிந்து குஞ்சு வெளிவரும். குஞ்சுக்கு இரை ஊட்டுவது பெற்றோர் பறவைகளுக்கு மிகவும் சவாலான வேலை. குஞ்சுகளைத் தீவில் விட்டுவிட்டு பெற்றோர் பறவைகள் மட்டும் கடலுக்குச் சென்று மீன், கணவாய் போன்றவற்றைப் பிடித்து வயிறு நிறையத் தின்றுவிட்டு வரும். பிறகு கூட்டுக்கு வந்து இரையைக் கக்கி குஞ்சுக்கு ஊட்டும். ஆல்பட்ராஸ் பறவைகள் ஒரு தடவை கடலுக்குச் சென்று இரையெடுத்துத் திரும்புவதற்கு 50 நாட்களாகும். இதுபோல் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு தாயும் தந்தையும் குஞ்சுக்கு இரையூட்டி வளர்க்கும். நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்டு ஆல்பட்ராஸ் குஞ்சுகள் கொழுகொழுவென்று வளரும். பெரும்பாலான குஞ்சுகள் பெற்றோரை விடவும் அதிக எடையுடன் காணப்படும்.

ஆல்பட்ராஸ் பறவைகள் கடலுக்கு மேலே பறக்கும்போது உடலின் தசைகளை இயக்காமல் சிறகுகளை விரித்த நிலையில் வைத்துக்கொண்டு காற்றின் உதவியால் மிதப்பது போலப் பறக்கின்றன. தொடர்ச்சியாக பல நாட்களுக்கு சிறகுகளை அசைக்காமல் அவற்றால் பறக்க முடியும் என்பது மிகவும் வியப்பான தகவல்.

முற்காலத்தில் நியூசிலாந்தின் பூர்வகுடிகளான மாவோரிகள் இப்பறவகளை உணவுக்காக வேட்டையாடினர் என்றும் இவற்றின் எலும்புகளைக் கொண்டு இசைக்குழல், தூண்டில் கொக்கி, ஊசி போன்றவற்றைத் தயாரித்துப் பயன்படுத்தினர் என்றும் தெரிகிறது.

தற்காலத்தில் அளவுக்கு அதிகமான மீன்பிடிப்பாலும், கழிவுநீர் மற்றும் குப்பைகள் கடலில் கலப்பதாலும் வாண்டரிங் ஆல்பட்ராஸ் பறவைகளுக்குப் போதிய உணவில்லாமல் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதனால் அவை அழிவாய்ப்புள்ள இனமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சுட்டிகளே, இந்த மாதம் வாண்டரிங் ஆல்பட்ராஸ் என்னும் அற்புதப் பறவை பற்றி அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(படம் உதவி – Pixabay)

Share this: