வணக்கம் சுட்டிகளே!
நாம் வாழும் இந்த பூமியில் நம்முடனேயே வாழும் உயிரினங்களைப் பற்றி நாம் கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டாமா? தோற்றம், இயல்பு, திறமை, செயல், நுண்ணறிவு போன்றவற்றால், நம்மை வியக்க வைக்கும் விநோத விலங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆசையா? சுட்டி உலகத்தைத் தொடர்ந்து வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
விநோத விலங்குகள் வரிசையில் முதலில் பார்க்கப்போகும் விலங்கு கேப்பிபாரா (Capybara). இப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதே இல்லையே என்கிறீர்களா? இது தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கொறிணி.
கொறிணியா? அப்படியென்றால்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அணில், எலி போன்று உணவினை முன்பற்களால் கொறித்துத்தின்னும் உயிரினங்களுக்கு கொறிணி (rodent) என்று பெயர். உலகிலேயே மிகப்பெரிய கொறிணி கேப்பிபாராதான். இரண்டு அடி உயரமும் 66 கிலோ வரை எடையும் கொண்டிருக்கும். 8 முதல் 10 வருடங்கள் வரை உயிர்வாழும்.
Hydrochoerus hydrochaeris என்பதுதான், இதனுடைய உயிரியல் பெயர். Hydrochoerus என்றால், கிரேக்க மொழியில் ‘நீர்ப்பன்றி’ என்று அர்த்தம். இது நிலம், நீர் இரண்டிலும் வாழக்கூடியது. இவற்றின் சவ்வுப் பாதங்களும் தட்டையான வாலும் நீந்துவதற்கு உதவுகின்றன. இவற்றால் ஐந்து நிமிடம் வரை நீரில் மூழ்கியிருக்க முடியும். மூக்கை வெளியில் நீட்டிக்கொண்டு தண்ணீருக்கு உள்ளேயே தூங்கவும் முடியும்.
கேப்பிபாராக்கள் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் சுமார் நூறு வரையிலும் கூட இருக்கும். அது மட்டுமல்ல, கூட்டத்தில் இருக்கும் குட்டிகள் எந்த அம்மாவிடம் வேண்டுமானாலும் பால் குடித்துக்கொள்ளும். இது என் அம்மா, அது உன் அம்மா என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. கேப்பிபாரா வருடத்துக்கு ஒரு முறை 4 முதல் 8 குட்டிகள் வரை போடும்.

இது புற்கள், நீர்த்தாவரங்கள், மரப்பட்டைகள், பழங்கள் போன்றவற்றைத் தின்று வாழ்கிறது. கொறிணி என்பதால் முன்பற்கள் நான்கும் வாழ்நாள் முழுவதும் தேயத் தேய வளர்ந்துகொண்டே இருக்கும்.
இவை நீர்நிலைகளில் வாழ்வதால் பச்சை அனகோண்டா பாம்புகளுக்கு எளிதில் இரையாகிவிடுகின்றன. மேலும் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன.
கேப்பிபாராவால் ஈர்க்கப்பட்ட ஜப்பானியர் அவற்றை வைத்து உருவாக்கிய ‘மிஸ்டர் கேப்பிபாரா’ என்ற கார்ட்டூன் தொடர், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தத் தொடராகிவிட்டதாம்.
என்ன சுட்டிகளே, கேப்பிபாரா இப்போது உங்களுக்கும் பிடித்த விலங்காகிவிட்டது இல்லையா? அடுத்த மாதம் சுட்டி உலகத்தில் வேறொரு விநோத விலங்கு பற்றிப் பார்க்கலாமா?
நன்றி (Pc Pixabay).