விநோத விலங்குகள் – 2 – பீவர்

Beaver_pic

வணக்கம் சுட்டிகளே!

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? விநோத விலங்குகள் வரிசையில், உலகின் மிகப்பெரிய கொறிணியான கேப்பிபாரா பற்றி, முந்தைய சுட்டி உலகத்தில் பார்த்தோம். உலகின் இரண்டாவது பெரிய கொறிணி(Rodent)யான பீவர் (Beaver) பற்றித் தான், இப்போது பார்க்க இருக்கிறோம்.

பீவர்கள் குடும்பமாக வாழும். ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் என்று பத்துப் பன்னிரண்டு இருக்கும். ஒவ்வொரு குடும்பமும் தனக்கென்று குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழும். பீ்வர்கள் இரவாடிகள். இருட்டிய பிறகுதான் வெளியில் வரும். விடிவதற்குள் வீட்டுக்குச் சென்று விடும். பகல் முழுவதும் அங்கேயே தூங்கி ஓய்வெடுக்கும்.

என்ன, பீவருக்கு வீடு இருக்கிறதா என்று கேட்பீர்கள். ஆமாம். இருக்கிறது. பீவரின் வீடு தண்ணீருக்கு நடுவில் இருக்கும். அதற்கு லாட்ஜ் என்று பெயர். வீட்டின் உட்பகுதி சுமார் இரண்டரை மீட்டர் அகலமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். தண்ணீர் கசியாத அளவுக்கு நேர்த்தியாக வீடு கட்டும் பீவரின் திறமை பார்த்துப் பொறியியல் வல்லுநர்களே வியந்து போகிறார்கள். 

பீவர் தன் வீட்டை எப்படிக் கட்டும் தெரியுமா? ஆற்றின் நடுவில் அணைகளைக் கட்டித் தண்ணீரின் ஓட்டத்தைத் தடுத்து, நடுவில் வீட்டைக் கட்டும். அணை எப்படிக் கட்டும்? அதுவும் பீவரின் தனித்திறமை தான். பீவரால் தண்ணீருக்குள் பத்து நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி இருக்க முடியும்.

நன்றி படம்(Pixabay)

பீவர்கள் அவை வாழும் ஆற்றுப்பகுதியில் கரையோரத்தில் இருக்கும் மரங்களை வெட்டி எடுத்து வந்து பிரமாதமாக அணை கட்டும். மரத்தை வெட்ட, கோடரி இருக்காதே, பிறகு எப்படி மரம் வெட்டும்? அதற்குத் தான் கூர்மையான உறுதியான முன்பற்கள் இருக்கின்றனவே. எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும், மரத்தின் அடிப்பகுதியைச் சுற்றி முன்பற்களால் கொறித்துக் கொறித்து விழ வைத்துவிடும். பெரிய பெரிய மரக்கட்டைகள்,  மரக்கிளைகள், குச்சிகள்,  பாசி, மண், கற்கள், பாறைகள் இவற்றைக் கொண்டு அணைகளைக் கட்டி ஆற்றின் ஓட்டத்தையே மாற்றிவிடும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? 

நன்றி படம்(Pixabay)

பீவரின் வீட்டுக்குப் போகவேண்டும் என்றால், தண்ணீருக்குள் முங்கித் தான் போகவேண்டும். எதிரிகளிடமிருந்து தற்காக்கவும், உறைபனிக் காலத்தில் உறைந்துவிடாமல் பாதுகாப்பாக இருக்கவும், இப்படி ஒரு ஏற்பாடு. பனிக்காலம் வருவதற்கு முன்பு மரங்களையும் கிளைகளையும் கொறித்துத் துண்டுகளாக்கிப் போதிய உணவைக் கொண்டு வந்து வீட்டுக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும். அதனால் பனிக்காலத்தில் ஆற்று நீர் உறைந்துபோனாலும் பீவர்களுக்கு கவலை இல்லை. வேளா வேளைக்குச் சாப்பிட்டு, தூங்கி வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கமுடியும்.   

பீவரின் உணவு என்ன தெரியுமா? தண்ணீரில் வாழ்வதால் மீன் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. பீவர் ஒரு தாவர உண்ணி. இலைகள், நீர்த்தாவரங்கள், மரப்பட்டைகள், மரச்செதில்கள், பூ மொட்டுகள், கிழங்குகள் போன்றவற்றைத் தின்று வாழும்.

பீவரின் வால் தட்டையாக துடுப்பு போல இருக்கும். அதுதான் நீந்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. ஆபத்து நேரத்தில் தன் வாலை தண்ணீரில் படபடவென்று ஓங்கி அடித்துச் சத்தம் எழுப்பித் தன் குடும்பத்தை எச்சரிக்கும்.

சுறுசுறுப்புக்கு உதாரணம் சொல்லச் சொன்னால், தேனீ, எறும்பு என்று சொல்வோம். ஆனால் பீவரை அறிந்தவர்கள் அதைத்தான் சொல்வார்கள். Busy as beaver என்ற மரபுத்தொடர் கூட உள்ளது. அந்த அளவுக்கு எப்போதும் அணை கட்டுவதிலும், வீடு கட்டுவதிலும் அணையைப் பலப்படுத்துவதிலும் பிசியாகவே இருக்கும்.

பீவர் பற்றித் தெரிந்துகொண்டீர்களா சுட்டிகளே? அடுத்த சுட்டி உலகத்தில் வேறொரு விநோத விலங்கு பற்றிப் பார்ப்போமா?

நன்றி படங்கள்(Pixabay).

Share this: