இதென்ன மான் மாதிரி இருக்கு, ஆனால் உடலில் வரி வரியாக வரிக்குதிரை போலிருக்கிறதே. என்னவாக இருக்கும் என்று வியப்பாக உள்ளதா சுட்டிகளே? சந்தேகமே வேண்டாம். இதுவும் மான்தான். உலகின் மூன்றாவது பெரிய மான் இனம் இதுதான். இதன் பெயர் போங்கோ (Bongo). இது மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் அடர்ந்த காடுகளில் வசிக்கிறது. இதன் உடலில் நெடுக்குவாக்கில் 15 வெள்ளைக்கோடுகள் காணப்படும். இந்தக் கோடுகள் உருமறைப்பு (Camouflage) க்குப் பெரிதும் உதவுகின்றன.
இதன் உயிரியல் பெயர் Tragelaphus eurycerus என்பதாகும். இதற்கு கிரேக்க மொழியில் ‘அகண்ட கொம்புள்ள கிடா மான்’ என்று அர்த்தம்.
போங்கோ என்ற பிரசித்தி பெற்ற ஆப்பிரிக்க ட்ரம்ஸ்க்கும் இந்த விலங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. போங்கோ என்றால் ஆப்பிரிக்க மொழியான கேலேவில் ‘மான்’ என்று அர்த்தம். அதுவே இதன் பொதுப்பெயராகிவிட்டது.
போங்கோ சுருள்கொம்பு மான் இனத்தைச் சேர்ந்தது. இதன் கொம்புகள் கனமாகவும் லேசாக முறுக்கிய வடிவத்திலும் இருக்கும். இந்த இனத்தில் ஆண் பெண் இரண்டுக்குமே கொம்புகள் உண்டு. மற்ற மானினங்களில் கலைமான் இனத்தில் மட்டுமே பெண் மானுக்கும் ஆண் மானைப் போலவே நீளமான கொம்புகள் உண்டு.
போங்கோ ஒரு தாவர உண்ணி. புற்கள், இலைதழைகள், கிழங்குகள், தானியங்கள், பழங்கள் என தாவரங்களிலிருந்து கிடைக்கும் எதையும் தின்னும். கூடவே தங்கள் உடலுக்குத் தேவையான உப்புச்சத்தையும் பிற தாதுக்களையும் மின்னல் தாக்கி கருகிப்போன மரங்களின் கரிக்கட்டைகளைத் தின்றும், உப்புப்பாறைகளை நக்கியும் பெறுகின்றன.
தாழ்வான மரக்கிளைகளும் புதர்களும் அடர்ந்த பகுதிகளில் நடக்கும்போது, கொம்புகள் சிக்கிக்கொள்ளாமலிருக்க, இவை தலையைப் பின்பக்கம் சாய்த்தபடி செல்லும். கொம்புகள் முதுகில் உராய்வதால் இதன் முதுகில் பல இடங்களில் காயமுண்டான வடுக்கள் காணப்படும்.
போங்கோ எப்படிக் கத்தும்? எப்படி வேண்டுமானாலும் கத்தும். ஆம். ஆடு போலக் கத்தும். மாடு போல கத்தும், பன்றி போல உறுமும், இப்படி நிறைய.
இவை கொம்புகளுக்காக பெருமளவில் வேட்டையாடப்படுகின்றன. ஆனால் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் இதன் பக்கமே போவதில்லை. பொதுவாக பழங்குடியினர் இறைச்சிக்காக மான்களை வேட்டையாடுவதுண்டு. ஆனால் போங்கோவைக் கொன்றால் பாவம் வந்து சேரும் என்று நம்புகிறார்கள். தொட்டால் கூட வலிப்பு வந்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதால் அவர்கள் இதை வேட்டையாடுவதில்லை.
போங்கோவைப் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா சுட்டிகளே? அடுத்த சுட்டி உலகத்தில் வேறொரு விநோத விலங்கு பற்றி அறிந்துகொள்ளலாமா?
(படம் – கீதா)