விக்குன்யா

vicuna

விநோத விலங்குகள் – 19

வணக்கம் சுட்டிகளே, இம்மாத விநோத விலங்கின் பெயர் என்ன தெரியுமா? விக்குன்யா. விக்குன்யாவின் ரோமம் தான் உலகிலேயே அதிக விலைமதிப்புள்ள கம்பளி ரோமமாகும். விக்குன்யா ரோமக் கம்பளி ஆடைகள் மிகவும் மென்மையாகவும் வெதுவெதுப்பாகவும் இருக்கும். ஒரு மேலாடையின் குறைந்தபட்ச விலையே பதினேழு இலட்சம் ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  

தென்னமெரிக்க விலங்கான விக்குன்யாவுக்கு பெரு நாட்டின் தேசிய விலங்கு என்ற சிறப்பும் உண்டு. பெரு நாட்டின் அரச முத்திரையிலும், தேசியக்கொடியிலும் விக்குன்யா இடம்பெற்றுள்ளது.

Camelidae எனப்படும் ஒட்டகக் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு இனத்துள் விக்குன்யாதான் மிகவும் சிறியது. இது 75 – 85 செ.மீ. உயரமும் 1.5 மீ. நீளமும் இருக்கும். எடை 40-65 கிலோ வரை இருக்கும். விக்குன்யாவின் உயிரியல் பெயர் Vicugna vicugna என்பதாகும்.   விக்குன்யாவுக்கு நல்ல பார்வைத்திறனும் செவித்திறனும் உண்டு. ஆனால் மோப்ப சக்தி குறைவு.

விக்குன்யாக்கள் ஆண்டிஸ் மலைப்பிரதேசத்தில் வசிக்கின்றன. பகல் வேளைகளில் மலையடிவாரத்திலுள்ள புல்வெளிகளில் மந்தை மந்தையாக மேயும். ஒவ்வொரு மந்தையிலும் பலம் வாய்ந்த ஒரு பெரிய ஆண் விக்குன்யாவும் பத்துப் பதினைந்து பெண் விக்குன்யாக்களும் குட்டிகளும் இளம் விக்குன்யாக்களும் இருக்கும். இரவு வேளைகளில் மந்தைகள் மலையேறிச் சென்று அங்கே ஓய்வெடுக்கும். மலைப்பகுதியில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் உறைநிலைக்குக் கீழும் இருக்கும். உறையவைக்கும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள விக்குன்யாக்களின் ரோமம்தான் உதவுகிறது.

செம்மறி, அல்பாகா, லாமா போன்ற விலங்குகள் ரோமத்திற்காகவே வளர்க்கப்படுவதால் அவற்றின் பரிணாம இயல்புப்படி ரோம வளர்ச்சி வெகு விரைவாக இருக்கும். எனவே ஆண்டுதோறும் ரோமக்கத்தரிப்பு செய்ய இயலும். ஆனால் காடுகளில் வசிக்கும் விக்குன்யாக்களின் ரோமம் மெதுவாகவே வளரும். சரியான தரத்தை அடைய சுமார் மூன்று வருடங்கள் தேவைப்படும். எனவே மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவைதான் விக்குன்யாவுக்கு ரோமம் கத்தரிக்க இயலும். எளிதில் கிடைக்காததும் கூடுதல் விலை மதிப்புக்கு மற்றொரு காரணம்.

தென்னமெரிக்காவின் பழம்பெரும் நாகரிகமான இன்காவைச் சேர்ந்த அரசரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உயர்மட்ட மக்களுமே விக்குன்யா ரோமக் கம்பளி அங்கிகளை அணியும் உரிமையையும் சிறப்பையும் பெற்றிருந்தனர். பொதுமக்கள் அணிந்தால் மரண தண்டனைக்கு ஆளாயினர். ஆனால் தென்னமெரிக்கா மீதான ஸ்பானியப் படையெடுப்புக்குப் பிறகு விக்குன்யா ரோம ஆடைகள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பிரபலமாயின.

விலைமதிப்புள்ள ரோமத்துக்காக விக்குன்யாக்கள் சட்டவிரோதமாக பெருமளவு கொல்லப்பட்டன. தொடர்ந்து கொல்லப்பட்டு வந்தன. அதைத் தடுக்க பெரு அரசு, 1970-ஆம் ஆண்டு முதல் ஒரு யுத்தியை மேற்கொண்டது. குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒரு முறை விக்குன்யாக்கள் மேய்ச்சல் வெளியிலிருந்து மடக்கப்பட்டு ஒரே இடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. அங்கே அவற்றின் ரோமம் சட்டரீதியாகக் கத்தரிக்கப்படுகிறது. அதன்பிறகு விக்குன்யாக்கள் மீண்டும் அவற்றின் வசிப்பிடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அதனால் ரோமத்துக்காக விக்குன்யாக்கள் கொல்லப்படுவது தடுக்கப்படுகிறது. 1960-களில் சுமார் ஆறாயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்தவை இன்று நான்கரை லட்சத்துக்கும் மேல் பெருகியுள்ளன. விக்குன்யாக்கள் சுமார் சுமார் இருபது வருடங்கள் உயிர்வாழும்.

ஆபத்து நேரத்தில் விக்குன்யா என்ன செய்யும் தெரியுமா? வீல் என்று பெருங்குரலெடுத்துக் கத்தியோ அல்லது விசில் சத்தம் எழுப்பியோ மற்ற விக்குன்யாக்களை எச்சரிக்கும். எதிரி அருகில் வந்துவிட்டால் எதிரியின் முகத்தில் வேகமாய் எச்சிலைத் துப்பும். எதிரி நிலைதடுமாறுவது உறுதி. ஒட்டகம், அல்பாகா, லாமா, குவனாக்கோ போன்ற கேமலிடே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற விலங்குகளிடமும் இந்த எச்சில் துப்பும் வழக்கம் உள்ளது. எனவே அவற்றின் அருகில் எப்போதாவது செல்ல நேர்ந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் சுட்டிகளே.

இப்போது விக்குன்யா பற்றி அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கினைப் பற்றிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(படங்கள் உதவி – Pixabay)

Share this: