வண்ணத்தலை பிணந்தின்னிக் கழுகு

king vulture

பறவைகள் பல விதம் – 4

வணக்கம் சுட்டிகளே! இந்த மாதம் நாம் பார்க்கவிருக்கும் பறவை என்ன தெரியுமா? பிணந்தின்னிக் கழுகுகளிலேயே மிகவும் வண்ணமயமான தலையைக் கொண்ட கிங் வல்ச்சர் பற்றித்தான். பிணந்தின்னிக் கழுகா? என்று முகம் சுளிக்காதீர்கள், சுட்டிகளே.  

பிணந்தின்னிக் கழுகுகள் இல்லையென்றால் என்னாகும் தெரியுமா? காடுகளிலும் புறநகர்களிலும், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் இறந்து கிடக்கும் விலங்கு மற்றும் பறவைகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்படாமல் அழுகிக்கிடக்கும். அப்பகுதி முழுவதும் துர்வாடை வீசும். கிருமித்தொற்று ஏற்படும். ஆனால், துல்லியமான மோப்ப சக்தியும் கூரிய பார்வைத்திறனும் உடைய பிணந்தின்னிக் கழுகுகள் இறந்த உடல் எங்கிருந்தாலும் தேடி வந்துவிடும். அழுகிக்கிடக்கும் உடல்களைத் தின்று அந்த இடத்தைத் துப்புரவாக்கிவிடும்.

குப்பைகளை அள்ளி ஊரைச் சுத்தப்படுத்தும் சுகாதாரப் பணியாளரைப் போல காடுகளையும் காடு சார்ந்த பகுதிகளையும் சுத்தப்படுத்தும் சுகாதாரப் பறவைகள் இவை. இவற்றின் அருமை இப்போது புரிகிறதா சுட்டிகளே?

பிணந்தின்னிக் கழுகுகளுள் பல வகைகள் உள்ளன. இன்று நாம் பார்க்கவிருப்பது King Vulture பற்றி. இதன் உயிரியல் பெயர் Sarcoramphus papa.

கிங் வல்ச்சர்கள் மெக்ஸிகோ முதல் அர்ஜென்டினா வரை காணப்படுகின்றன. இவற்றின் உடல் வெள்ளை மற்றும் கருப்பு நிற இறகுகளுடன் இருக்கும். தலையும் கழுத்தும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, நீலம், ஊதா என வண்ணக்கலவையாக இருக்கும். அலகிற்கு மேலே தோளதொளப்பான மஞ்சள் நிறத் தாடை காணப்படும்.

கிங் வல்ச்சர்கள் பெரும்பாலான நேரம் வானத்தில் உயரப் பறந்தபடி இரைதேடிக் கொண்டிருந்தாலும், நிலத்தில்தான் முட்டையிடும் என்பது வியப்பு. உட்கூடு இல்லாத மரக்கட்டை, பாறையிடுக்கு போன்றவற்றுள் கூடு கட்டும். இவற்றின் கூடு மற்றப் பறவைகளின் கூடுகளைப் போல நேர்த்தியாக இருக்காது.

இவை ஒரு தடவைக்கு ஒரே ஒரு முட்டைதான் இடும். அப்பா அம்மா இரண்டுமே மாற்றி மாற்றி அடைகாக்கும். இரண்டும் சேர்ந்து குஞ்சுக்கு இரையூட்டி வளர்க்கும்.

கிங் வல்ச்சர்களுக்கு வேட்டையாடும் வழக்கம் கிடையாது. இறந்த உடல்களை மட்டுமே சாப்பிடும். மற்றப் பிணந்தின்னிக் கழுகுகளையும், வல்லூறுகளையும் விட உறுதியான நகமும் அலகும் இவற்றுக்கு இருப்பதால் இறந்த உடலின் மேல் தோலைக் கிழிக்க இவற்றால் மட்டுமே இயலும். அதனால் இறந்த உடல்களைத் தின்பதில் இவற்றுக்கே முன்னுரிமை. மற்றக் கழுகுகள், இவை தின்று முடியும்வரைக் காத்திருந்து பிறகு தின்னும். இவற்றை கிங் வல்ச்சர் என்பது பொருத்தம்தானே!

சுட்டிகளே, காடுகளில் சுகாதாரப் பணியாளர்களான பிணந்தின்னிக் கழுகுகள் பற்றியும், பிரதானமான கிங் வல்ச்சர் பற்றியும் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவை பற்றிப் பார்ப்போமா?  

Share this: