‘வல்லினச்சிறகுகள்’ மின்னிதழில் கீதா மதிவாணனின் நேர்காணல்

Geetha_Vallina_pic

அயலக மண்ணில் அருந்தமிழ் படைப்பாளி திருமதி.கீதா மதிவாணன், ஆஸ்திரேலியா

நேர்காணல்: வித்யா மனோகர், இந்தியா

“சாதிக்க முடியும் அவளால் – கிழச்

சாத்திரம் பேசிட வேண்டாம்”

என்ற மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயாவின் வரிகள் இப்போது என் நினைவில் வந்துபோகின்றன.

அயலகத்திற்குக் குடிபெயர்ந்து இல்லத்தரசி எனும் பொறுப்பில் இருந்துகொண்டே பன்முகத் திறம்மிக்கவராய் மிளிரும் திருமதி. கீதா மதிவாணன் அவர்களை நேர்காணல் செய்வதில் வல்லினச் சிறகுகள் பெருமிதம் கொள்கிறது.

வணக்கம் கீதா, உங்கள் இளமைப்பருவம், குடும்பம் பற்றிய செய்திகளோடு, நம் உரையாடலைத் தொடங்கலாமா?

நல்லது வித்யா, நான் பிறந்து வளர்ந்தது, திருச்சியைச் சேர்ந்த பொன்மலையில். படித்தது பாலிடெக்னிக். (DECE – Diploma in Electronics and Communication Engg).  என் கணவர் பெயர் மதிவாணன். திருமணத்துக்குப் பிறகு சென்னையில் 16 ஆண்டுகள் வசித்தோம். வாழ்க்கைச் சூழல் காரணமாக 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தோம்.

கணவர் மெக்கானிகல் என்ஜினியராக இருக்கிறார். ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் Virology and Immunology  குறித்த ஆய்வுப் படிப்பில் PhD. முடித்துவிட்டு அதே ஆய்வுக்கூடத்தில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மருமகன் கணினி மென்பொருளாளராக இருக்கிறார். மகன் கல்லூரியில் (BICT) படித்துக் கொண்டிருக்கிறார். நான் வீட்டிலிருந்தபடி வீட்டுப் பணிகளோடு, எழுத்துப் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.  

எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது பற்றி…

பள்ளிக் காலத்திலிருந்தே எழுத்தில் ஈடுபாடு உண்டு. சின்னச் சின்னதாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்துப் பின்னாட்களில் கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கிறேன். எதுவும் பிரசுரம் ஆகவில்லை என்றபோதும் அவ்வப்போது தோன்றுவதைக் கதையோ, கவிதையோ ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைப்பேன். திருமணம், குடும்பம், குழந்தைகள் வளர்ப்பு, அவர்களுடைய படிப்பு, டியூஷன் என்று சென்னையில் இருந்தவரை மும்முரமாக இருந்தேன்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு  ஏற்பட்ட தனிமை, வெறுமை, புதிய சூழல் உண்டாக்கிய பயம், கலாச்சார அதிர்ச்சி, சொந்த மண்ணையும் உறவுகளையும் பிரிந்துவந்த துயரம், பொருளாதாரப் பிரச்சனை, நிச்சயமில்லாத எதிர்காலம் என அன்றிருந்த என் குழப்பமான மனநிலைக்கு எழுத்து மிகப்பெரிய வடிகாலாய் அமைந்தது.

அப்போது கணினி பற்றிப் பெரிய அளவில் பரிச்சயம் இல்லை. என் புலம்பல்களையும், ஏக்கங்களையும் கவிதைகளாக்கி, கடிதங்களுடன் இணைத்து என் கணவரின் தமக்கையான கலையரசி அக்காவுக்கு அனுப்புவேன். என் உடன்பிறவா சகோதரியும் என் நலன் விரும்பியுமான அவர் என்னை ஆற்றுப்படுத்தியதோடு, பதிவுகள், தமிழ்மன்றம் போன்ற இணையதளங்களை எனக்கு அறிமுகப்படுத்தி, என் கவிதைகளை அவற்றுக்கு அனுப்பச் சொன்னார்.

கணினியில் தமிழ் எழுத்துகளைத் தட்டச்ச முடியும் என்பதையே அதுவரை அறியாமல் இருந்த எனக்கு, மெல்ல மெல்லக் கணினியும் கவிதையும் கைவசமானது. இணைய தளங்களில் பிரசுரமான என் படைப்புகளும், அவற்றுக்கான விமர்சனங்களும், பாராட்டுகளும் புது உத்வேகத்தைக் கொடுத்தன. எழுத்தின்பால் முழு மூச்சாக என்னை ஒப்படைத்தது, அப்போதிலிருந்துதான்.

ஆரம்பக் கட்டத்தில் லேசாகத் தடுமாறிக்கொண்டிருந்த மனம், கொஞ்சம் கொஞ்சமாகச் சூழ்நிலை எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளப் பழகியது. நிகழ்காலத்தில் மனம் நிலை கொண்டது. நான் வாழும் நாடு பற்றியும் அதன் தனித்துவம் மற்றும் சிறப்புகள் பற்றியும், அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினேன். நூலகங்களுக்குச் சென்றேன். புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக ஆஸ்திரேலியா குறித்த தகவல்களைத் தேடித்தேடி அறிந்தேன்.

அறுபதாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழும் பூர்வகுடி மக்கள், அவர்களுடைய வாழ்க்கைமுறை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள், இம்மண்ணின் தனித்துவமான வயிற்றில் பையுடைய பாலூட்டி வகை உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள், இயற்கை வளம், நில அமைப்பு, பன்னாட்டுக் கலாச்சார வாழ்க்கைமுறை, அரசியலமைப்பு, இலக்கியம், கல்விமுறை எனப் பலவற்றையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது இந்த அளவுக்குப் பரவலான இணையப் புழக்கம் எவருக்கும் வாய்க்கவில்லை என்பதால், ஊரிலிருக்கும் உறவினர்களோடு பேசும்போது, ஆஸ்திரேலியாவைப் பற்றியும், இங்கிருக்கும் வாழ்க்கைமுறையைப் பற்றியும், அறிந்து கொள்ள பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள். முக்கியமாக என் அம்மா. அவர்களுக்கு நான் அறிந்தவற்றை, நான் பார்த்து ரசித்தவற்றை,  வியந்தவற்றை எல்லாம் விளக்குவேன். அப்போதுதான், நான் ஏன் இவற்றை எல்லாம் பதிவுகளாக எழுதக்கூடாது, ஆர்வமுள்ளவர்கள் வாசித்துப் பயன்பெறலாமே என்ற எண்ணம் தோன்றியது. கீதமஞ்சரி (http://geethamanjari.blogspot.com/) என்ற வலைப்பூவைத் தொடங்கி, அதில் எழுத ஆரம்பித்தேன்.

என்னுடைய படைப்புகள் சில மஞ்சரி, தினமலர், பூவுலகு, காக்கைச் சிறகினிலே, எதிரொலி போன்ற அச்சு இதழ்களிலும், பதிவுகள், நிலாச்சாரல், நடு, வல்லமை, அதீதம், காற்றுவெளி, இருவாட்சி, வாசகசாலை, கனலி போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி என் எழுத்தார்வத்துக்கு மேலும் ஊக்கம் சேர்த்தன. 

வலைப்பூ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் கீதா.

பல இனிய அனுபவங்கள் உள்ளன வித்யா. 2011-ஆம் ஆண்டு மார்ச் முதல் கீதமஞ்சரியில் எழுதி வருகிறேன்.  நண்பர்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும் அதில் படைப்புகளை இட்டுவருகிறேன்.

ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள்’ பற்றிய தொடருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியக் குடியேற்றத்துக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கு மற்றும் பறவைகளால் ஆஸ்திரேலியாவின் தனித்துவ விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படுவதைப் பற்றி அறிந்தபோது, ‘ஒண்டவந்த பிடாரிகள்’ என்ற தொடரை எழுதினேன்.

‘ஆஸ்திரேலியப் பள்ளிகள் சிறு அறிமுகம்’ என்ற தொடரின் மூலம், என் பிள்ளைகளின் பள்ளி அனுபவங்களையும், அவை சார்ந்த என் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டேன்.

‘ஆஸ்திரேலியாவில் தற்பால் திருமணச்சட்டம்’ இயற்றப்பட்டபோது, எதிர்ப்புகளும் முரண்கருத்துகளும் எழுந்த நிலையில், அதைக் குறித்த என் பார்வையையும், ஆதரவையும் விளக்கத் தொடராக எழுதினேன். ‘சென்னைத் தமிழும் ஆஸ்திரேலிய ஆங்கிலமும்’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறு ஒப்பீட்டுத் தொடர் பெரும் வரவேற்பு பெற்றது.

கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, இலக்கியம், இயற்கை, மொழிபெயர்ப்பு இவற்றோடு புகைப்படங்கள், தோட்ட அனுபவம் இவற்றையும் கீதமஞ்சரியில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறேன்.

என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே!

என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே!

இதுவே என் வலைப்பூவின் தாரக மந்திரம். அதன்படி என் தாய்மொழியாம் தமிழுக்கு என்னால் இயன்ற சேவையைச் செய்கிறேன். அத்துடன் என்னை வாழவைக்கும் இந்த நாட்டுக்கும் என்னால் இயன்ற நன்மையைச் செய்கிறேன் என்ற மனநிறைவோடு என் எழுத்துப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சில சமயம் எனக்கு எழுத்துச் சோர்வு ஏற்படுவதுண்டு. எதையும் எழுதவோ வாசிக்கவோ பிடிக்காது. அப்போதெல்லாம் என் மாமா (கணவரின் தந்தை) திரு.சொ.ஞானசம்பந்தன் ஐயாவை நினைத்துக் கொள்வேன்.

சில மாதங்களுக்கு முன் மறைந்த அவர், தமது இறுதிக்காலம் (95 வயது) வரை மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருந்ததோடு, தொடர்ச்சியாக வாசிப்பிலும் எழுத்துப் பணியிலும் ஈடுபட்டிருந்தார். அந்த வயதிலும் அவர் அவ்வளவு சுறுசுறுப்புடன் எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருந்தபோது, நாம் இந்த வயதிலேயே இப்படிச் சோம்பலாய் இருக்கிறோமே என்று தோன்றும். உடனே உத்வேகத்துடன் எதையாவது எழுத ஆரம்பித்துவிடுவேன். 

மிக்க மகிழ்ச்சி கீதா, உங்கள் புத்தக வெளியீடுகள் பற்றி அறிய ஆவலாக உள்ளோம்.

“என்றாவது ஒரு நாள்” – ஆஸ்திரேலியாவின் சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் ஹென்றி லாசன் எழுதிய காடுறை கதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு.

“அம்மாச்சியும் மகிழம்பூக்களும்” – கடந்த பத்தாண்டுகளில் நான் அவ்வப்போது எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.

சமீபத்தில் “ஆஸ்திரேலியாவின் அதிசயப் பறவைகள்” தொகுப்பு 1 & 2 அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளன.

பிரதிலிபி, புஸ்தகா தளங்கள் வாயிலாக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என பல படைப்புகள் மின்னூல்களாக வெளியாகியுள்ளன.  

கல்வி முறை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததன் அடிப்படை என்ன?

ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பு, என் மகளும் மகனும் சென்னையில் சில வருடங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், சில வருடங்கள் CBSE பள்ளியிலும் பயின்றிருந்தார்கள். ஆஸ்திரேலியா வந்த பிறகு கணவரின் வேலைவாய்ப்பு காரணமாக குவீன்ஸ்லாந்து, விக்டோரியா, நியூ சௌத் வேல்ஸ் என்று மாநிலம் விட்டு மாநிலம் மாறவேண்டிய நிர்ப்பந்தம்.

அரசுப் பள்ளிகளாக இருந்தாலும் கூட, பயிற்றுமுறை, பள்ளி நிர்வாக முறை, ஆசிரியர்களின் அணுகுமுறை இவற்றோடு பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய வயதின் கால வரம்பு கூட மாநிலத்துக்கு மாநிலம் மாறியது. அதனால் வேறு மாநிலம் மாறும்போது பிள்ளைகளை, அவர்கள் ஏற்கனவே படித்த வகுப்பிலேயே மீண்டும் சேர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மனம் வைத்து குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அடுத்த வகுப்புகளுக்கு அனுமதி அளித்தனர்.  

ஆஸ்திரேலியக் கல்விமுறையில் என்னைக் கவர்ந்த சில அம்சங்களை எழுதவேண்டும் என்று வெகுநாளாக எண்ணிக் கொண்டிருந்தேன். இரண்டு நாடுகள், நான்கு மாநிலங்கள், ஐந்து கல்வி முறைகள், ஆறு பள்ளிகள் என என் பிள்ளைகளின் 12-வது வரையிலான பள்ளிப்படிப்பு நிறைய மாறுபட்ட அனுபவங்களைப் பெற்றுத் தந்திருந்தது. அவற்றை எல்லாம் அனைவரோடும் பகிர விரும்பினேன். அப்போதுதான் ‘நண்பன்’ திரைப்படம் வெளியானது. அதில் பேசப்பட்ட மதிப்பெண் விஷயத்தை முன்வைத்து ‘ஆஸ்திரேலியப் பள்ளிகள் – சிறு அறிமுகம்’ என்ற தொடரை ஆரம்பித்து எழுதினேன். மதிப்பெண் வழங்கும் முறைமை, மாறுபட்ட மத நம்பிக்கைகளுக்கு கொடுக்கப்படும் மதிப்பு, தொழில் கல்வி அறிமுகம், வாழ்க்கைக் கல்வி, பாலியல் கல்வி எனப் பல தலைப்புகளிலும் பதிவு செய்துள்ளேன்.  

இணைந்து பணியாற்றும் படைப்புக் குழுமங்கள் பற்றி…

தற்போது சிறார் வலைக்களஞ்சியமான ‘சுட்டி உலகம்’ (https://chuttiulagam.com/)  இணைய தளத்தில், ஆசிரியர் குழுவில் உள்ளேன். வயது வாரியாகக் குழந்தைகளுக்கான அச்சுப் புத்தகங்கள், மின்னூல்கள், திரைப்படங்கள் மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றின் பரிந்துரைகள், குழந்தைகளுக்காக எழுதும் படைப்பாளிகளின் அறிமுகங்கள் இவற்றோடு குழந்தை வளர்ப்பு சார்ந்த பல சிறப்புப் பதிவுகளையும், பெற்றோர்களின் விரல்நுனியில் கொண்டு சேர்க்கும் இணையக் களஞ்சியமாக சுட்டி உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பிரிவான சுட்டி உலகம் youtube சேனலில் (https://www.youtube.com/channel/UCIiseIzmNi1pnU_94R86TIA) காணொளிகளைத் தயாரித்து வழங்கும் பொறுப்பில் இருக்கிறேன். அதில் வாரம் ஒரு சிறுவர் பாடலும், மாதம் ஒரு சிறுவர் கதையும் வெளியிடப்பட்டு வருகின்றன.  

வானொலி நிலையத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி…

ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ATBC) வானொலியில் 2015-ஆம் ஆண்டு, ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற திரையிசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். தமிழர் வாழ்வு சார்ந்த இசை, இசைக்கருவிகள், இலக்கியம், ஆடற்கலைகள், விளையாட்டுகள், தொழில்கள், உறவுகள், உணர்வுகள், பூக்கள், உணவுமுறை, திரையுலகு சார்ந்த பெருமக்கள் எனப் பல தலைப்புகளில், ஒரு மணி நேர நிகழ்ச்சியை, அவற்றுடன் தொடர்புடைய திரைப்பாடல்களோடு 55 வாரங்கள் தொகுத்து வழங்கினேன். நேரக் குறைபாடு காரணமாக அதைத் தொடரவியலாமல் போயிற்று.

அதன் பிறகு 2018 முதல் 2020 வரை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் SBS தமிழ் வானொலியில் ஆஸ்திரேலியாவின் அடையாளங்கள் மற்றும் சிறப்புகள் பற்றிய மாதாந்திர நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். தற்போது எழுதுவதில் மும்முரமாக இருப்பதால், வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை.    

மொழிபெயர்ப்புப் பணி அனுபவங்கள் பற்றிக் கூறுங்களேன்.

ஆஸ்திரேலியச் சிறுகதை எழுத்தாளர் ஹென்றி லாசனின் Bush stories எனப்படும் காடுறைக் கதைகளை வாசித்தபோது, அவற்றில் இடம்பெற்ற வித்தியாசமான கதைக்களமும், அன்றைய விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைமுறையும் புதிய அனுபவத்தைத் தந்தன. கூடவே ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது போல், அவற்றைத் தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகப்படுத்தும் ஆவல் எழுந்தது.

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”

என்று  பாடிய பாரதியும் உசுப்பேற்றிவிட, அதுவரை மொழிபெயர்ப்பின் பக்கமே போயிருக்காத, தமிழ்வழிக் கல்வி மாணவியான நான், துணிந்து அவரது கதைகளை மொழிபெயர்ப்பு செய்தேன்.

ஆஸ்திரேலியக் காடுறைக் கதைகளை மொழிபெயர்ப்பதென்பது, சாதாரண ஆங்கிலக் கதைகளை மொழிபெயர்ப்பது போல், அத்தனை சுலபமாக இல்லை. இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆஸ்திரேலிய மக்களின் வாழ்க்கை மற்றும் மொழி பற்றிய புரிதல் தேவைப்பட்டது. முற்றிலும் மாறுபட்ட சூழல், சுற்றுப்புறம், புதிரான மனிதர்கள், புதிய வாழ்க்கை முறை, அதுவரை அறிந்திராத உயிரினங்கள் எனப் பல புதிய வார்த்தைகளை உருவாக்கும் அவசியத்தை, அன்றைய குடியேறிகளுக்கு உண்டாக்கியிருந்தன.

வாசிக்க வாசிக்க சாதாரண ஆங்கிலத்துக்கும், ஆஸ்திரேலிய ஆங்கிலத்துக்குமான வேறுபாடு விளங்கியது. பற்பல புதிய வார்த்தைகளின் பரிச்சயம் கிடைத்தது. பல வார்த்தைகள் அவற்றுக்கான பொருளை விடுத்து வேறொன்றைக் குறிப்பது புரிந்தது. சாதாரண அகராதியை விடுத்து ஆஸ்திரேலிய ஆங்கில அகராதியையும் ஆஸ்திரேலிய கொச்சை வழக்குக்கான அகராதியையும் வாசித்துதான் முழுமையான அறிவைப் பெற முடிந்தது.

இதுவரை ஹென்றி லாசனின் சிறுகதைகள் முப்பது, பிற ஆஸ்திரேலிய அமெரிக்க, ஜப்பானிய சிறுகதைகள் சுமார் முப்பது மற்றும் சில கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளேன். இந்தியிலிருந்து ஒரு கதையும், சில கவிதைகளும் மொழிபெயர்த்திருக்கிறேன். 

பரிசுகள், விருதுகள் பற்றி…

வலைப்பதிவு வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் பல பரிசுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. அமைப்பு சார்ந்தவை எனில் 2020 பிப்ரவரி மாதம் பிரதிலிபி தளம் ‘பேசாக் கதைகளைப் பேசுவோம்’ என்ற தலைப்பில் இந்திய அளவில் நடத்திய LGBTQ போட்டியில் மாநிலமொழி வரிசையில் தமிழில் நான் எழுதிய “அம்மையப்பன்” கதை வெற்றி பெற்று பரிசு வென்றது. ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (ATBC) வானொலியில், இக்கதை வாசிக்கப்பட்டதும், அதை ஒட்டிய கலந்துரையாடல் நடைபெற்றதும் கூடுதல் அங்கீகாரங்கள்.  

காக்கைச் சிறகினிலே’ இதழ்க் குழுமம் அறிவித்த ‘கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப்பரிசு 2017’-ன் புலம்பெயர் இணைய வலைப்பதிவர் போட்டியில் மூன்றாமிடமும் பரிசும் கிடைத்தன.

‘வலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம்’ நடத்திய மின்தமிழ் இலக்கியப் போட்டியில் ‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வு’ குறித்த கட்டுரைப் போட்டியில் “கான் ஊடுருவும் கயமை” என்ற என் கட்டுரைக்கு இரண்டாமிடமும் விருதுக்கேடயமும் கிடைத்தன.

2014-ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்’ சார்பில் ‘வல்லமை’ இணைய இதழில் நடைபெற்ற “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரைக்கு மூன்றாமிடம் கிடைத்தது.

தற்சமயம் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அடுத்து என்ன எழுத திட்டம்?

ஆஸ்திரேலியாவின் அற்புதப் பறவைகள் தொகுப்புகளைத் தொடர்ந்து  அதிசய உயிரினங்கள் பற்றிய தொகுப்புகள் வெளியாக உள்ளன. முதல் தொகுப்பு தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியாகும்.

இதில் ஆஸ்திரேலியாவின் தனித்துவ உயிரினங்களான கங்காரு, கோலா, வாம்பேட், வல்லபி, க்வோக்கா, க்வோல், டிப்ளர், டன்னார்ட், பில்பி எனப் பல்வேறு மார்சுபியல் விலங்குகள் பற்றிய அறிமுகமும், அவற்றைக் குறித்த பல சுவாரசியமான தகவல்களும் இடம்பெறுகின்றன. அதிசய உயிரினங்கள் வரிசையில் குறைந்தது, பத்து தொகுப்பாவது கொண்டுவர விருப்பம்.

நான் புகைப்படம் எடுக்கும் பூக்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து “பூக்கள் அறிவோம்” என்ற தொடர் எழுதிவருகிறேன். இதுவரை 200 பூக்கள் பற்றி எழுதியுள்ளேன். அதைத் தொடரவேண்டும். 1000 என்ற இலக்கைத் தொட ஆசை.

“உலகப் பழமொழிகள்” வரிசையில் பல நாடுகளைச் சேர்ந்த சுவாரசியமான பழமொழிகளைத் தொகுத்து, தமிழாக்கி உரிய படங்களோடு பதிவிட்டுள்ளேன். இதுவரை 500 பழமொழிகளைத் தொகுத்துள்ளேன். அதையும் தொடர எண்ணியிருக்கிறேன்.  

“கும்பகர்ணன் காதலி” என்ற தலைப்பில், சிறு கவிதைத் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன். கும்பகர்ணன் பெரும்பாலும் அவனுடைய உறக்கத்துக்காகவும், பெருந்தீனிக்காகவும் மட்டுமே நினைவுகூரப்படுபவன். அவனிடம் ஏராளமான நற்பண்புகள் இருந்திருக்கின்றன. அவனுக்கும் மனைவி மக்கள் இருந்திருக்கின்றனர். அவனுக்கு ஒரு காதலி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் விளையாட்டாய் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 கவிதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் கூடுதலாக எழுதி, தொகுப்பாக்கும் எண்ணம் இருக்கிறது.

தற்போது கலையரசி அக்காவின் வழிகாட்டுதலாலும், உந்துதாலும் சிறார் இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டாகியிருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்கள் எழுதியுள்ளேன். அவற்றுள் பல சுட்டி உலகம் சேனலில் காணொளிகளாக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான கதைகள் எழுதும் முயற்சியிலும் தற்போது இறங்கியுள்ளேன்.

பெண்களுக்குச் சொல்ல விரும்புவது…

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்திலும், சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கேட்டுப்பெறாமல் கிடைக்கிறதா? பெண் என்னும் காரணத்துக்காகவே பணியிடங்களிலும் பதவி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் ஒடுக்கப்படும் நிலைமை குறைந்திருக்கிறதா?

 கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் பெண்கள், திருமண பந்தத்துக்குள் நுழைந்தபிறகு காணாமல் போகும் நிலை மாறியிருக்கிறதா? குடும்பப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பின் முன், தங்களுடைய பணி, பதவி மற்றும் வாழ்க்கை இலட்சியங்களைப்பற்றி ஒரு பெண் சிந்திப்பதே தவறென்னும் சமூகத்தின் அழுத்தமான பார்வையில் சிறிதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் கீழாகச் சித்தரிக்கப்படும் பெண்கள் மீதான கண்ணோட்டம் மாறுபட்டிருக்கிறதா? அவ்வளவு ஏன்? சராசரி குடும்பங்களிலேயே பொருளாதார ரீதியாகக் கணவனைச் சார்ந்து வாழும் நிலையிலுள்ள பெண்களின் நிலை மேம்பட்டிருக்கிறதா? அவர்களுடைய கருத்துகளும் ஆலோசனைகளும் குடும்ப அங்கத்தினர்களால் அங்கீகரிக்கப்படுகின்றனவா?

பொருளாதாரச் சுதந்திரம் உள்ள பெண்களும், தாங்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தாங்களே தீர்மானிப்பதிலும், சுயதேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் தற்சார்புடையவர்களாய் இருக்கிறார்களா? மொத்தத்தில் பெண் என்பது வரமா? சாபமா? முட்டிக்கிளைத்து வருகின்றன கேள்விகள்.. விடைகள்தாம் கண்களுக்கு மறைவாய்.. காணாத் தொலைவில்!

பொறுமை, தியாக உணர்வு, குடும்ப நல்லிணக்கம், உறவு பேணுந்திறன் போன்ற குணங்கள் பெண்ணுக்குத் தேவைதாம். ஆனால் அவற்றையே வேலிகளாகப் போட்டுக்கொண்டு, சிறிய வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கை முடிந்துவிடப் பெண்கள் இடங்கொடுக்கக்கூடாது.

சின்னச்சின்ன ரசனைகளுக்கும், தேவைகளுக்கும் அவளுடைய வாழ்வில் இடமிருக்கவேண்டும். தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் பிறரது தலையீட்டைத் தவிர்த்தல் வேண்டும்.

“அமிழ்ந்து  பேரிருளாம் அறியாமையில்

அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்”

என்கிறார் பாரதி.

ஆண் குழந்தைகளுக்கு வளர்பருவத்திலிருந்தே பெண்ணை மதிக்கவும் பெண்ணின் உடல் மற்றும் உளம் சார்ந்த பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும் கற்றுக்கொடுத்து வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், பெண் குழந்தைகளுக்கும் தங்கள் உடல் மற்றும் உளம் மீதான மதிப்பையும் தங்களுடைய உரிமைகளையும் புரிந்துகொள்ளக் கற்றுக்கொடுப்பது.

ஆண் பெண் பேதவொழிப்பு நம் வீடுகளின் அடுக்களையிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். நல்ல புரிதலுடன் அது தொடருமானால், பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொதுவெளி, சமுதாயம், நாடு என்று பரவலாகப் பாலின பேதம் மறைந்து ஆணும் பெண்ணும் நட்புறவுடன் கைகோத்து, வருந்தலைமுறை நலமாய் வாழ நல்லதொரு பாதை உதயமாகும். இதையும் பெண்களே முன்னெடுக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம்.

மிக்க மகிழ்ச்சி கீதா. அருமையான பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு எங்கள் குழுவின் சார்பில் நன்றியும் நல்லன்பும்.

(வல்லினச் சிறகுகள் நவம்பர் 2021-ல் வெளியானது.)

Share this: