மரம் மண்ணின் வரம் – 15
வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயரைப் பார்த்துக் குழப்பமாக உள்ளதா? எந்த மரமாவது தலைகீழாக வளருமா என்று யோசிக்கிறீர்களா? குழப்பம் வேண்டாம். மற்றெல்லா மரங்களைப் போல இதுவும் நேராக வளரும் மரம்தான். நெடுநெடுவென்று தூண் போல வளர்ந்திருக்கும் இம்மரத்தின் உச்சியில் மட்டும் கிளைகள் பிரிந்து இலைகள் வளர்ந்திருக்கும். இலையுதிர் காலத்தில் இலைகள் அற்று வெறும் கிளைகள் மட்டும் வேர்களைப் போலக் காட்சியளிக்கும். தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரு மரத்தைப் பிடுங்கி தலைகீழாக நட்டு வைத்ததைப் போன்று தோற்றம் தரும். அதனால்தான் தலைகீழ் மரம் (upside down tree) என்று குறிப்பிடப்படுகிறது.
தமிழில் இதை ஆனைப்புலி மரம் என்று அழைக்கிறார்கள்.
Baobab tree என்பதுதான் இதன் பொதுவான பெயர். ஆடன்சோனியா என்ற பேரினத்தைச் சேர்ந்த எட்டு இனங்களுள் ஒன்று ஆப்பிரிக்காவையும், ஒன்று ஆஸ்திரேலியாவையும் மற்ற ஆறும் மடகாஸ்கரையும் தாயகமாகக் கொண்டுள்ளன.
பேயபாப் மரங்கள் பாலையில் வளர்வதால், மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை தண்டுகளில் சேமித்து வைத்துக்கொள்கின்றன. நீர் நிரம்பிய மரத்தின் தண்டுகள் பெருமளவு உப்பிக் காணப்படும். அதனால் வறட்சிக்காலத்தில் இவற்றால் தண்ணீர் இன்றி தாக்குப்பிடிக்க முடியும்.
ஒரு பேயபாப் மரம் சேகரித்து வைக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவு தெரியுமா? சுமார் 4,500 லிட்டர்!
மத்திய ஆப்பிரிக்காவில் கோடைக்காலத்தில் கடுமையான வறட்சி நிலவும். தண்ணீர் துளி கூட கிடைக்காது. அப்போது, யானைகளும் குரங்குகளும் பேயபாப் மரங்களின் பட்டைகளை உரித்து, கரும்பை மெல்வது போல மென்று அவற்றின் சாற்றைக் குடிக்கும். பட்டைகளை உரிப்பதால் மரம் இறந்துவிடாது. புதிய பட்டைகளை உருவாக்கி உயிர்வாழும்.
பேயபாப் மரங்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்பது மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் தகவல்.
இரவு நேரத்தில் இவற்றின் பூக்களில் வௌவால்கள் தேன் அருந்த வரும். அவற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. பேயபாப் மரத்தின் காய்கள், இனத்தைப் பொறுத்து உருண்டையாகவும் நீளமாகவும் மட்டைத்தேங்காய் வடிவிலும் இருக்கும். உள்ளே புளிப்பான சதைப்பற்றுடன் கருப்பு நிறத்தில் கொட்டைகள் காணப்படும். இம்மரத்தின் பழம், விதை, இலை யாவும் பழங்குடி மக்களால் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மிகவும் வயது முதிர்ந்த பேயபாப் மரங்களின் உள்ளே கூடாக இருக்கும். பொந்து போன்ற அதற்குள் ஒரு குடும்பமே குடியிருக்க முடியும். ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பழமையான மரத்தின் உள்ளே ஒரே நேரத்தில் நாற்பது பேரை நிற்கவைக்க முடியுமாம்.
ஆஸ்திரேலியாவில் ஆரம்பகால ஐரோப்பியக் குடியேற்றத்தின் போது, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டெர்பி என்ற இடத்துக்கு, காவலர்கள் கைதிகளை அழைத்துச் செல்லும்போது இரவு நேரத்தில் பாதுகாப்பாக இருக்க, அங்கிருந்த ஒரு பேயபாப் மரத்தின் பொந்துக்குள் அவர்களைச் சிறை வைத்தனராம். 1500 வருடப் பழமையான அம்மரம் இன்றும் ‘சிறை மரம்’ என்ற பெயரில் பார்வையாளர்களைக் கவர்கிறது.

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள 20.5 மீட்டர் உயரமும் 32.89 மீட்டர் சுற்றளவும் உள்ள, 800 வருடப் பழமையான ‘சாகோல் பேயபாப்’ என்னும் மரம்தான் உலகின் மிகப்பெரிய பேயபாப் மரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்த மரத்தை இரண்டு கைகளாலும் சுற்றி வளைக்கவேண்டும் எனில் சுமார் 20 பேர் தேவைப்படும். அப்படியென்றால் இது எவ்வளவு பிரமாண்டமான மரம் என்று உங்களுக்குப் புரிகிறது அல்லவா?
சுட்டிகளே, உலகின் அதிசய மரங்களுள் ஒன்றான பேயபாப் மரம் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு மரத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.
(படங்கள் உதவி – Pixabay)