டுராக்கோ

Turaco

பறவைகள் பல விதம் – 9

வணக்கம் சுட்டிகளே! படத்தில் இருக்கும் பறவையைப் பார்த்தவுடன் உண்மையிலேயே இது பறவையா அல்லது ஓவியமா என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கும். சந்தேகமே வேண்டாம். இது உண்மையான பறவைதான்.

ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகளிலும் காடுகளிலும் காணப்படும் Turaco என்ற பறவைதான் இது. டுராக்கோவின் இறகிலிருக்கும் பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் டுராகோவர்டின், டுராசின் ஆகிய வேதியியல் நிறமிகளால் ஆனவை. இவை டுராக்கோ பறவைகளிடத்தில் மட்டுமே காணப்படுகின்றன என்பது சிறப்பு. அதாவது இவற்றின் இறகுகளிலிருந்து சாயத்தைப் பிரித்தெடுக்க முடியும். எவ்வளவு வியப்பான தகவல்? அதற்காக பறவையைப் பிடித்து சாயம் தயாரிக்கப் பயன்படுத்துவார்களா என்று யோசிக்காதீங்க. அப்படியெல்லாம் செய்ய முடியாது. செய்யவும் கூடாது.

டுராக்கோ Musophagidae என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 33 டுராக்கோ இனங்கள் உள்ளன. டுராக்கோ பறவைகள் பெரும்பாலும் பச்சை, சிவப்பு, நீலம், வயலட் என பளீர் நிறங்களில் இருக்கும். படத்தில் காணப்படுவது ‘கினியா டுராக்கோ’.  இது ‘பச்சை டுராக்கோ’ என்றும் சொல்லப்படுவதுண்டு. இதன் இறகின் உள் அடுக்கில் பளீர் சிவப்பு நிற இறகுகள் காணப்படும். சிறகை விரிக்கும்போது மட்டுமே அவற்றை நன்றாகப் பார்க்க முடியும்.    

டுராக்கோ பறவைகளின் விரல் அமைப்பு மிக விநோதமானது. இவற்றின் கால்களில் வழக்கமாக பறவைகளுக்கு இருப்பது போல முதல் மூன்று விரல்கள் முன்னோக்கி இருக்கும். நான்காவது விரல் பின்னோக்கி இருக்கும். ஆனால் அந்த நான்காவது விரலில்தான் இருக்கிறது சிறப்பு. அந்த விரலை டுராக்கோவால் முன்னும் பின்னுமாக அசைக்க முடியும். அதாவது முன் பக்கம் மற்ற விரல்களோடு சேர்த்து வைத்துக்கொள்ளவும் முடியும். பின் பக்கமாகக் கொண்டுசென்று தனியாக வைத்துக்கொள்ளவும் முடியும். அதனால்தான் டுராக்கோவால் எளிதாக நடக்கவும் ஓடவும் கிளைக்குக் கிளை தாவவும் முடிகிறது.

வலிமையான கால்களும் மடிப்பு விசிறி போன்ற வாலிறகும் கொண்ட இப்பறவைகள் பறப்பதை விடவும் ஓடுவதில் சூரர்கள்.

டுராக்கோ பறவைகள் கூட்டமாக வசிக்கும். ஒரு கூட்டத்தில் பத்து முதல் முப்பது பறவைகள் வரை இருக்கும். முட்டையிடும் காலத்தில் ஆண் பெண் இரண்டும் இணைந்து உயரமான மரத்தில் கூடு கட்டும். இரண்டு பறவைகளும் மாறி மாறி முட்டைகளை அடைகாக்கும். குஞ்சுகள் பொரிந்து வந்தவுடன் தாய் தந்தை இரண்டும் சேர்ந்து இரை ஊட்டி வளர்க்கும்.

டுராக்கோ பறவைகளை பழந்தின்னிப் பறவைகள் என்று சொல்லலாம். இவற்றின் உணவில் பெரும்பான்மையான பங்கு வகிப்பவை அத்திப் பழங்களும் பெர்ரி வகையைச் சேர்ந்த பழங்களுமே. பழங்களுடன் இலை, மொட்டு, பூ போன்றவற்றையும் தின்னும். எப்போதாவது புழு பூச்சிகளையும் தின்னும்.

ஆட்காட்டிப் பறவைகளைப் போல ஆபத்தைக் கண்டவுடன் இவை உரத்தக் குரலில் கத்தும். காட்டின் மற்றப் பறவைகளும் விலங்குகளும் ஆபத்திலிருந்து தப்பிக்க அந்த எச்சரிக்கை சத்தம் உதவும்.

காடுகளை அழியாமல் காப்பதில் டுராக்கோ பறவைகளின் பங்கு மிகப் பெரியது. இவை தங்கள் எச்சத்தின் மூலம் விதை பரவலை நிகழ்த்துகின்றன. காட்டிலுள்ள சில மரங்களின் பழங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக இருக்கும். மனிதர்களோ விலங்குகளோ அவற்றை உண்பதில்லை. அப்பழங்களை டுராக்கோ பறவைகள் தின்பதன் மூலம் விதை பரவல் மிக எளிதாக நடைபெறுகிறது.

சுட்டிகளே, டுராக்கோ என்னும் புதிய பறவை பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்கள்? அடுத்த மாதம் வேறொரு பறவை பற்றிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(படங்கள் உதவி – Pixabay)

Share this: