விசிறி வாழை

traveller's palm

மரம் மண்ணின் வரம் – 14

வணக்கம் சுட்டிகளே. நீங்கள் தாவரவியல் பூங்காவுக்குச் சென்றிருக்கிறீர்களா? சென்றிருந்தால் விசிறி வாழைமரத்தைக் கட்டாயம் பார்த்திருப்பீர்கள். விசிறி வாழைமரம் இல்லாத தாவரவியல் பூங்காவைக் காண்பது அரிது. விசிறி வாழைமரமும் வாழை மரத்தைப் போலவே இருக்கும். ஆனால் விசிறி போல பக்கவாட்டில் இலைகள் விட்டு பார்வைக்கு மிக அழகாகக் காட்சியளிக்கும். அதனால்தான் அது ‘விசிறி வாழை’ என்று சொல்லப்படுகிறது. விசிறி வாழை அதன் அழகு காரணமாக, அலங்கார மரமாக பல இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Ravenala madagascariensis என்பதாகும். மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்டதால் இப்பெயர் இடப்பட்டுள்ளது.

வாழை, தென்னை, பனை போன்றவற்றை மரம் என்று சொன்னாலும் அவை மரமன்று. ஒருவித்திலைத் தாவரங்களான அவை ‘புல்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. விசிறி வாழையும் புல் இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால் கனமான அடித்தண்டுடன் உயரமாக வளரக்கூடியது. 

இதன் அடித்தண்டு பனை மரத்தைப் போன்று வளையங்களுடனும் உறுதியாகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் ‘palm’ (பனை மரம்) என்றே குறிப்பிடப்படுகிறது. இதன் இலைகள் கிழக்கு மேற்காக வளரும். முற்காலத்தில் தொலைதூரம் செல்லும் பயணிகளுக்கு திசைகாட்டியாக செயல்பட்டதால் ‘பயணிகளின் பனை’ (Traveller’s palm) என்ற பெயரைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

விசிறி வாழை மரம் எட்டு மீட்டருக்கும் அதிகமான உயரம் வளரும். உறுதியான அடித்தண்டும் பக்கவாட்டுக் கிளைகளும் இருப்பதால், காற்று பலமாக வீசினாலும் வாழை போல சாய்ந்துவிடுவதில்லை. இதன் இலைகள் சுமார் ஐந்து மீட்டர் நீளம் வரை இருக்கும். விசிறி வாழையின் இலைகள் அடிமரத்தோடு சேரும் இடத்தில் கிண்ணம் போல குழிவாக இருக்கும். மழை பெய்யும்போது ஒவ்வொரு குழிவிலும் ஒரு லிட்டர் அளவுக்கு மழைநீர் தேங்கி இருக்குமாம். பழைய காலத்தில் கால்நடையாகச் செல்லும் பயணிகளின் தண்ணீர்த் தாகத்துக்கு உடனடித் தீர்வாக இம்மரம் இருந்ததாலும் ‘பயணிகளின் பனை’ என்று சொல்லப்படுகிறது.

விசிறி வாழை மரத்திலிருந்து வாழைப்பழம் கிடைக்காது. இதன் பூக்கள் வாழைப்பூவைப் போலவும் இருக்காது. Bird of paradise எனப்படும் Strelitzia இனத் தாவரத்தின் பூக்களைப் போலவே இருக்கும். இதன் பூக்களில் லெமூர் எனப்படும் விலங்குகள் மூலமாகவே மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. பூக்கள் காயாகும். ஆனால் பழுக்காது. இலவம் காய் போல முற்றி வெடிக்கும். உள்ளே விதைகள் பளீர் நீல நிறத்தில் காணப்படும்.

சுட்டிகளே, அடுத்த முறை விசிறி வாழையை எங்கு பார்த்தாலும் சரியாக அடையாளம் கண்டுகொள்வீர்கள் அல்லவா?  

(படங்கள் உதவி – Pixabay)

Share this: