தூக்கான்

தூக்கான்

பறவைகள் பல விதம் – 20

வணக்கம் சுட்டிகளே! தென்னமெரிக்க நாடுகளைச் சேர்ந்த தூக்கான் பறவைகளின் தனித்துவமே அவற்றின் மிகப்பெரிய மற்றும் வண்ணமயமான அலகுதான். Toucan என்பதை தமிழில் ‘தூக்கான்’ என்று குறிப்பிட்டாலும் ‘பேரலகுப் பறவை’ என்ற அழகிய காரணப்பெயரும் தமிழில் இடப்பட்டுள்ளது. தூக்கான் பறவை இனத்தில் ஐந்து பேரினங்களும் நாற்பது சிற்றினங்களும் உள்ளன.

படத்தில் இருப்பது தோக்கோ தூக்கான். தூக்கான் இனத்திலேயே மிகப் பெரியது இதுதான். இதன் உடல் 60 செ.மீ. நீளமும் அலகு சுமார் 23 செ.மீ. நீளமும் இருக்கும். எடை அரைக்கிலோ முதல் முக்கால் கிலோ வரை இருக்கும். இதற்கு நாக்கும் நீளம். ஆமாம், அலகின் நீளத்துக்கு இணையாக நாக்கின் நீளமும் இருக்கும்.

தூக்கான் பறவையைப் பார்த்ததும், ‘அடேயப்பா! இவ்வளவு பெரிய அலகா? பாவம் பறவை! எப்படிதான் இவ்வளவு பெரிய அலகைத் தூக்கிக்கொண்டு பறக்கிறதோ?’ என்று ஆச்சர்யப்படுவீங்க. உண்மையில் தூக்கானின் அலகு கனமும் கிடையாது. வலிமையானதும் கிடையாது. உறுதியானதும் கிடையாது. கேரட்டின் என்ற வேதிப்பொருளால் ஆன அது மிகவும் இலகுவானது. மென்மையானதும் கூட.

1914-ஆம் ஆண்டு கோஸ்டா ரிகா நாட்டைச் சேர்ந்த கிரேசியா என்ற இடத்தில் இளைஞர்களால் பாதிப்புக்குள்ளான ஒரு தூக்கான் பறவை, பாதி உடைந்த மேல் அலகுடன் மீட்கப்பட்டு வனவிலங்கு பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கும் ‘கிரேசியா’ என்றே பெயரிடப்பட்டது. உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ முடியாத நிலையில் இருந்த கிரேசியாவுக்கு முதன்முதலாக செயற்கை அலகு பொருத்தப்பட்டது. முப்பரிமாண அச்சு வடிவமைப்பு முறையில் அளவெடுத்து செய்யப்பட்ட அலகின் மீதி பொருத்தப்பட்டது. அதன் பிறகு கிரேசியா செயற்கை அலகைக் கொண்டு பழங்கள் தின்றது. தண்ணீர் குடித்தது. ஆறு ஆண்டுகள் பாதுகாப்பகத்தின் பராமரிப்பில் வாழ்ந்த கிரேசியா 2022-ஆம் ஆண்டு இறந்தது. 

தூக்கான் பறவைகளுக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு இருக்கிறது? காரணம் என்ன தெரியுமா, சுட்டிகளே? தூக்கான் பறவைகள் தங்கள் உடலின் வெப்பத்தை அலகு மூலமாகவே பராமரிக்கின்றன. அகச்சிவப்புக் கதிர்வீச்சு ஆராய்ச்சி மூலம் அது கண்டறியப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் இவை தங்கள் அலகுப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் மூலம் அதிகப்படியான உடல் வெப்பத்தை வெளியேற்றுகின்றன. குளிர்காலத்தில் பெரும்பாலான நேரம் தங்கள் அலகுகளை முதுகுப்பக்கம் கொண்டுசென்று இறகுகளுக்குள் புதைத்து வைத்திருக்கும். அதனால் உடல் வெப்பம் வெளியேறாமல் தடுக்கப்படும்.      

தூக்கான் பறவைகள் மழைக்காடுகளை உறைவிடமாகக் கொண்டவை. தூக்கான் பறவைகள் குழுவாக வசிக்கும். ஒரு குழுவில் பத்து முதல் இருபது பறவைகள் வரை இருக்கும். இனப்பெருக்கக்காலத்தில் பெண் தூக்கான் மரப்பொந்துகளில் கூடு அமைத்து முட்டை இடும். ஒரு தடவைக்கு இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும். தூக்கான் பறவையினத்தில் ஆண் பெண் இரண்டும் ஒன்றுபோலவே இருப்பதால் வேறுபாடு அறிவது கடினம்.

தூக்கான்கள் பழ விரும்பிகள் என்றாலும் சின்னச்சின்ன புழு பூச்சிகளையும் தின்னும். இவற்றுக்கு உணவைக் கடித்தோ மென்றோ தின்னத் தெரியாது. அப்படியே விழுங்கும். பழங்களை விழுங்குவதால் அவற்றின் விதைகள் எச்சத்தின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. எனவே மழைக்காடுகளில் விதை பரவலுக்கு தூக்கான்கள் பெரும் பங்காற்றுகின்றன. 

தூக்கான் பறவையின் குரல் கரகரவென்று தவளை கத்துவதைப் போல இருக்கும். சில தூக்கான்கள் நாய் குரைப்பதைப் போன்றும், புலி உருமுவதைப் போன்றும் ஒலியெழுப்பும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 20 வருடங்கள்.

சுட்டிகளே, பேரலகுப் பறவையான தூக்கான் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு புதிய பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.    

(படங்கள் உதவி – Pixabay)

Share this: