தைல மரம்

Eucalyptus trees

மரம் மண்ணின் வரம் – 6

வணக்கம் சுட்டிகளே. எல்லாரும் நல்லா இருக்கீங்களா? மழை நேரத்தில் உங்களில் பலருக்கும் அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். அதற்கு அம்மா என்ன செய்வாங்க? விக்ஸ் தடவி விடுவாங்க. வீட்டில் பெரியவங்களுக்குத் தலைவலி, மூட்டுவலி வந்தால் என்ன செய்வாங்க? தைலம் தேய்ப்பாங்க. இந்த மருந்துகளில் எல்லாம் முக்கியமான மூலப் பொருளாக என்ன இருக்கிறது தெரியுமா? யூகலிப்டஸ் எண்ணெய்.

யூகலிப்டஸ் எண்ணெய் எதிலிருந்து கிடைக்கிறது என்று சொல்லாமலேயே யூகித்திருப்பீங்க. ஆமாம், யூகலிப்டஸ் மரத்திலிருந்துதான் கிடைக்கிறது. ஒரு யூகலிப்டஸ் இலையைக் கசக்கி மோந்து பார்த்தாலே அந்த வாசத்தை நம்மால் உணர முடியும். தைலம் தயாரிக்கப் பயன்படுவதால் இம்மரம் தமிழில் ‘தைல மரம்’ என்று சொல்லப்படுகிறது. யூகலிப்டஸ் எண்ணெயை ‘நீலகிரித் தைலம்‘ என்றும் சொல்வாங்க. ஏன் தெரியுமா? நீலகிரியில் உள்ள யூகலிப்டஸ் மரங்களிலிருந்து அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவதால்தான் அது ‘நீலகிரித் தைலம்’ என்ற பெயர் பெற்றுள்ளது.   

யூகலிப்டஸ் மரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா. அங்கு அவை ‘பிசின் மரம்’ என்ற பொருளில் gum tree என்று சொல்லப்படுகின்றன.

யூகலிப்டஸ் மர வகையில் சுமார் 900-க்கு மேற்பட்டவை உள்ளன.

யூகலிப்டஸ் மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரும் வல்லமை உடையவை. யூகலிப்டஸ் இலைகளில் உள்ள எண்ணெய் எளிதில் தீப்பற்றக்கூடியது. அதனால் யூகலிப்டஸ் காடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டால் தீயை அணைப்பதோ கட்டுப்படுத்துவதோ மிகவும் கடினம்.

யூகலிப்டஸ் இலைகளைப் பெருமளவில் அறுவடை செய்து அவற்றைக் கொதிக்கவைத்துக் கிடைக்கும் நீராவியை வடிகட்டி யூகலிப்டஸ் எண்ணெய் பெறப்படுகிறது. சுமார் 80 கிலோ இலையைக் கொதிக்கவைத்தால் ஒரு லிட்டர் எண்ணெய்தான் கிடைக்கும்.

யூகலிப்டஸ் எண்ணெய் கிருமிநாசினியாகவும், பூச்சிக்கடி, தோல்நோய் போன்றவற்றுக்கும், சளி, மூக்கடைப்பு போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. காகித உற்பத்தியிலும் யூகலிப்டஸ் மரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. 

ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வகுடி மக்களிடையே இம்மரங்கள் மிகவும் பிரசித்தம். யூகலிப்டஸ் மரத்தண்டிலிருந்துதான் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி இசைக்கருவியாகிய டிஜிரிடு தயாரிக்கப்படுகிறது.

யூகலிப்டஸ் மர வகையுள் ஒன்றான swamp gum (Eucalyptus regnans) மரம்தான் உலகிலேயே மிக உயரமான பூக்கும் தாவரம் என்ற சிறப்பைப் பெற்றது. இதன் அதிகபட்ச உயரம் 100 மீ. ஆகும்.

பொதுவாக யூகலிப்டஸ் மரங்கள் பட்டை உரிக்கும் மரங்கள். மரத்தின் பட்டை உரிந்த பிறகு மரம் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். சில மரங்களை இரவில் பார்த்தால் பேய் மாதிரி இருக்கிறது என்று அந்த வகை மரங்களுக்கு ghost gum (Eucalyptus pauciflora) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரெயின்போ யூகலிப்டஸ் மரம் (Pc-Pixabay)

ஒரு குறிப்பிட்ட வகை யூகலிப்டஸ் மரத்தின் பட்டைகள் ஒரே நேரத்தில் உரியாமல் திட்டுத்திட்டாக ஆங்காங்கே உரியும். பட்டை உரிய உரிய இளம் பச்சை, கரும்பச்சை, நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு, இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள் என வானவில்லின் அத்தனை வண்ணங்களுடன் ஓவியம் போல அழகாகக் காட்சியளிக்கும். அதற்கு ‘ரெயின்போ யூகலிப்டஸ் மரம்’ (Eucalyptus deglupta) என்று பெயரிடப்பட்டுள்ளது.

சுட்டிகளே, யூகலிப்டஸ் மரங்களைப் பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த வாரம் வேறொரு அரிய மரத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.

Share this: