டாபிர்

டாபிர்

விநோத விலங்குகள் – 17

வணக்கம் சுட்டிகளே. சுட்டி உலகத்தின் விநோத விலங்குகள் வரிசையில் இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் விலங்கின் பெயர் டாபிர். இவற்றின் சிறப்பு மூக்குதான். இதன் மூக்கு குட்டித் தும்பிக்கையைப் போன்று சற்று நீளமாக இருக்கும். மூக்கும் மேல் உதடும் ஒன்றாக இருக்கும். இதன் மூக்கு சுவாசிக்க மட்டுமின்றி உணவைப் பற்றி எடுத்து வாய்க்கு அனுப்பவும், நீருக்கடியில் இருக்கும்போது குழாய் போல மூச்சு விடவும் உதவுகிறது.

டாபிரஸ் பேரினத்தில் நான்கு டாபிர் இனங்கள் உள்ளன. அனைத்திலும் மிகப் பெரியது மலேயன் டாபிர்தான். இது ஆசிய டாபிர், இந்திய டாபிர், ஓரியன்டல் டாபிர், கருப்பு வெள்ளை டாபிர் என பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Tapirus indicus என்பதாகும். இது சுமத்ரா, இந்தோனேஷியா, மலேசியா, மியன்மார், தாய்லாந்து ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. மற்ற மூன்று இனங்களும் தென்னமெரிக்க நாடுகளில் காணப்படுகின்றன.

மலேயன் டாபிர் உருவத்தில் கிட்டத்தட்ட பன்றி போலவும் கருப்பு வெள்ளை நிறத்தில் பாண்டா போலவும் இருந்தாலும் குதிரை, கழுதை, வரிக்குதிரை, காண்டாமிருகம் போன்ற ஒற்றைப்படைக் குளம்புகளைக் கொண்ட விலங்கின வரிசையில்தான் இது வகைப்படுத்தப்படுகிறது.

பத்தே பத்து செ.மீ. நீளமுள்ள குட்டி வாலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இதன் உடல் நீளம் சுமார் 1.8 மீ. முதல் 2.5 மீ. வரை இருக்கும். எடை சுமார் ஐநூறு கிலோ இருக்கும். ஆணை விடவும் பெண் டாபிர் உருவத்தில் சற்று பெரியதாக இருக்கும். டாபிர்களுக்கு பார்வைத்திறன் குறைவு. ஆனால் மோப்பசக்தியும் செவித்திறனும் மிக அதிகம். 

டாபிர் ஒரு தாவர உண்ணி. புல், இலை, தழை, தளிர், பூக்கள், பழங்கள், நீர்த்தாவரங்கள் ஆகியவற்றை உண்டு வாழும். இவை ஒரு நாளைக்கு சுமார் 35 கிலோ எடையுள்ள உணவை உண்ணும். மழைக்காடுகளில் வசிக்கும் இவற்றின் மூலம் காட்டில் பல தாவரங்களின் விதைபரவல் நடைபெறுகிறது.  

மலேயன் டாபிர்கள் தனித்தனியாக எல்லை அமைத்து அதில் வசிக்கும். நாய்களைப் போல இவையும் தங்கள் எல்லைப் பகுதியில் உள்ள செடிகளின் மீது சிறுநீர் கழித்து மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கும். ஆபத்து சமயத்தில் வலிமையான கால்களையும் கூர்மையான பற்களையும் கொண்டு எதிரியைத் தாக்கி தன்னைத் தற்காத்துக்கொள்ளும். இவை உச்சஸ்தாயில் கீச்சுக்குரலில் கத்தியும் விசில் போன்று ஒலியெழுப்பியும் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும்.

டாபிர்கள் பொழுதாடிகள். அதாவது அந்தியிலும் விடியற்காலையிலும் இரைதேடும். நள்ளிரவிலும் பகல் வேளையில் தூங்கி ஓய்வெடுக்கும்.

இவை இரண்டு வருடத்துக்கு ஒரு குட்டி போடும். குட்டி கருப்பு நிறத்தில் வெள்ளைக் கோடுகள் மற்றும் தீற்றல்களோடு காணப்படும். எதிரிகளிடமிருந்து தற்காக்கவும் உருமறைப்புக்கும் இந்த நிறம் மிகவும் உதவும். ஆறு மாதங்களுக்குப் பிறகு கருப்பு வெள்ளையாகத் தொடங்கும்.

மலேயன் டாபிர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 30 வருடங்கள். ஆனால் ஜகார்தாவில் சரணாலயத்தில் இருந்த கிங்குட் என்ற மலேயன் டாபிர் 42 வருடங்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 1978-ஆம் ஆண்டு பிறந்த கிங்குட் 1992-ஆம் ஆண்டு சரணாலயத்திற்கு வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு அது தனது 42-வது வயதில் முதுமை காரணமாக இறந்தது.

புதைபடிமங்களைக் கொண்டு இவைஇருபது மில்லியன் வருடங்களுக்கு மேலாக இவை பூமியில் வசிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுட்டிகளே, டாபிர் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கு பற்றி அறிந்துகொள்ளலாம்.

(pc. Pixabay)

Share this: