கொழுக்கட்டை மரம்

sterculia

மரம் மண்ணின் வரம் – 19

வணக்கம் சுட்டிகளே. கொழுக்கட்டை மரம் என்றதும் கொழுக்கட்டை காய்க்குமா என்று ஆச்சர்யப்படாதீங்க. இந்த மரத்தின் முற்றிய காய்களைப் பார்த்தால் மோதகம் என்ற கொழுக்கட்டை வடிவத்தில் இருப்பதால் இதற்கு ‘கொழுக்கட்டை மரம்’ ‘மோதகவல்லி’ என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதன் அறிவியல் பெயர் Sterculia foetida என்பதாகும். சாண எருவின் வாடையடிப்பதால் ரோமானிய எருக்கடவுளான Sterquilinus பெயரால் இந்தப் பேரினத்துக்கு Sterculia என்று பெயரிடப்பட்டுள்ளது. foetida என்றாலும் துர்நாற்றம் என்று பொருள்.

கிழக்கு ஆப்பிரிக்கா முதல் வடக்கு ஆஸ்திரேலியா வரையிலான பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மரம் தற்போது உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. இது சுமார் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அடித்தண்டு நெடுநெடுவென்று நேராகவும் பக்கவாட்டில் கிளைகளைப் பரப்பியும் வளரும்.

பூக்கும் பருவத்தில் மரம், இலைகளை முற்றிலுமாய் உதிர்த்துவிடும். மரம் முழுக்கப் பூக்கள் மட்டுமே காட்சியளிக்கும்போது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். பூக்களின் வாடை நமக்குதான் சகிக்கமுடியாதே தவிர, தேனீக்களையும் வண்ணத்துப்பூச்சிகளையும் கவர்ந்திழுக்கும்.

கொழுக்கட்டை மர விதைகள் பாதாம் பருப்புப் போல உண்ணத்தகுந்தவை என்பதால் ஜாவா ஆலிவ், காட்டு பாதாம், இந்திய பாதாம் என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. பூக்கும் காலத்தில் இந்த மரத்திலிருந்து மிகவும் விரும்பத்தகாத வாடை அடிக்கும். அதனால் கசங்கம், பீநாறி மரம், ஸ்கங்க் மரம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் இலைகள் கிட்டத்தட்ட இலவ மரத்தின் இலைகளைப் போன்று இருப்பதால் ‘பேரிலவம்’ என்ற பெயரும் உண்டு.

கொழுக்கட்டை மரத்தின் காய்கள் ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் இருக்கும். பிறகு மஞ்சள், செம்மண் நிறம், அரக்குச் சிவப்பு, பழுப்பு என்று நிறம் மாறும். முற்றி வெடிக்கும் தருவாயில் கரும்பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். உள்ளே விதைகள் கருப்பு நிறத்தில் காணப்படும். பல்வேறு பறவைகள் இவற்றின் விதைகளை விரும்பித் தின்னும்.

இவை அழகுக்காகவும், கம்பீரத் தோற்றத்துக்காகவும் வீடுகளிலும் பூங்காக்களிலும் பெருவளாகங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இம்மரத்தின் பயன்பாடும் மிக அதிகம் என்பதால் வியாபார நோக்கிலும் பெருமளவு வளர்க்கப்படுகின்றன.

கொழுக்கட்டை மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சூர்யகாந்தி எண்ணெயைப் போன்று சமையலுக்குப் பயன்படுகிறது. மருத்துவக்குணம் இருப்பதால் சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது.  இதன் மரப்பட்டை, காயம், வீக்கம் போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பட்டையின் கசாயம், எலும்புருக்கி நோய்க்கு நல்ல மருந்தாகிறது. மேலும் சோப்பு தயாரிப்பிலும் பயோடீசல் தயாரிப்பிலும் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் பட்டைகளிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இசைக்கருவிகள் செய்யவும் மரச்சாமான்கள் செய்யவும் மரம் பயன்படுகிறது. வியட்நாமில் இந்த மரத்தின் சாற்றிலிருந்து ஒருவகைக் குளிர்பானம் தயாரிக்கப்படுகிறது.

சுட்டிகளே, இனி இந்த மரத்தை எங்கு பார்த்தாலும் அதன் காய்களைக் கொண்டு சரியாக அடையாளம் கண்டுகொள்வீர்கள்தானே? அடுத்த மாதம் வேறொரு மரத்தோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(படங்கள் – கீதா)

Share this: