குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுத்தாருங்கள்

photo of hand with soil and seedlings

Nature inspires creativity in a child by demanding visualization and the full use of the senses. In nature, a child finds freedom, fantasy and privacy. A place distant from the adult world, a separate peace.

Richard Louv

குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுத்தாருங்கள் என்றவுடன்  ஏன் கற்றுத்தரவேண்டும் என்ற கேள்வி முதலில் எழக்கூடும். அதற்கு விடையாக குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி, சிந்தனைத்திறன், படைப்பாக்கம், கற்பனை வளம், கண்டுபிடிக்கும் ஆற்றல், துரித செயல்பாடு, சூழல் விழிப்புணர்வு, ஆர்வத் தூண்டல்கள், தேடல்கள், தெளிவுகள், உற்சாகம், உடற்பயிற்சி, உணர்வு வெளிப்பாடு, விளையாட்டு என எண்ணற்றக் காரணங்களைப் பட்டியலிடலாம்.

குழந்தைகளின் குழந்தைமை பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய பெருந்தொற்று அபாயக் காலகட்டத்தில் இயற்கையுடனான அவர்கள் பந்தம் இன்றியமையாததாகிறது. இறுக்கம் நிலவும் இச்சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஒரு இலகுத்தன்மையைக் கொண்டுவரவும், சூழலை எதிர்கொள்ளும் மனத்திட்பத்தை உருவாக்கவும் நாம் வாழும் இப்பூமி பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும் இயற்கையின்பால் அவர்களது கவனத்தைத் திருப்புவதோடு அதனுடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்த நாம் நம்மாலான வழிகளில் எல்லாம் உதவுதல் வேண்டும். கூடுமானவரை குழந்தைகளை நான்கு சுவர்களுக்குள் முடங்க விடாமல் வெளியுலகுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். திறந்தவெளிகளில் விளையாடப் பழக்கவேண்டும். எந்தெந்த வழிகளில் எல்லாம் இயற்கையோடு அவர்களைப் பிணைக்க இயலுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் செயல்படவேண்டும்.   

இயற்கை என்றால் என்ன? மனிதனால் உருவாக்கப்படாத எதுவும் இயற்கைதான். வீடு, பள்ளி, சுற்றம், சமூகம் என ஒவ்வொரு வட்டத்திலும் குழந்தைகளுக்கும் இயற்கைக்கும் இடையிலான பந்தம் நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நாம் வாழும் இந்தப் பூமியோடு எந்தவகையிலாவது அவர்கள் பிணைக்கப்பட்டிருத்தல் அவசியம்.

அமெரிக்காவைச் சேர்ந்த இயற்கைசார் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான Richard Louv தன்னுடைய Last Child in the Woods என்னும் நூலில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இயற்கை பற்றாக்குறை குறைபாடு (Nature deficit disorder) பற்றிக் குறிப்பிடுகிறார். இயற்கைக்கும் குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்நூலில் சத்து பற்றாக்குறை போலவே இயற்கை பற்றாக்குறையும் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்கிறார். அதீத பருமன், கவனக் குறைபாடு, மன அழுத்தம், பதற்ற நிலை, குணவியல்புக் கோளாறு,  போன்று பல வகையிலும் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் பொதுப்பிரச்சனை இயற்கை பற்றாக்குறை குறைபாடே என்றும் இது ஒட்டுமொத்த எதிர்காலத் தலைமுறையின் ஆரோக்கியச் சீர்கேடு மட்டுமல்ல, அவர்கள் வாழவிருக்கும் எதிர்கால பூமியின் ஆரோக்கியச் சீர்கேடும் கூட என்றும் கவலை தெரிவிக்கிறார். இயற்கை பற்றாக்குறை குறைபாட்டுக்கு முக்கியக் காரணங்களாக அவர் குறிப்பிடுபவை என்னென்ன தெரியுமா? முதலாவது பெற்றோரின் பயம். இரண்டாவது தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ், மொபைல் ஃபோன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் வசீகரிப்பு. ஒரு சராசரி அமெரிக்கக் குழந்தை ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மின்னணு ஊடகங்களோடு செலவழிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் அளிக்கிறார். 

பெற்றோரின் பயம் பற்றி சொல்லவே வேண்டாம். அங்கே ஓடாதே, இங்கே ஓடாதே, அதைத் தொடாதே, இதைத் தொடாதே, பேசாதே, கத்தாதே, வாயை மூடு, ஆடாதே, குதிக்காதே, ஒரே இடத்தில் உட்காரு, மண்ணில் புரளாதே, மழையில் நனையாதே என்று குழந்தைகளை ரோபோக்கள் போலக் கட்டுப்படுத்தி வளர்க்கும் கலையில் வல்லவர்கள் நாம். கேட்டால் உடம்புக்கு வந்துவிடும் என்போம் அல்லது அதுதான் ஒழுக்கம் என்போம். பள்ளியில் சேர்த்த முதல் நாளிலிருந்தே குழந்தைகளை கை கட்டி வாய்மேல் விரல் வைத்து உட்காரப் பழக்கும் அவல மரபல்லவா நமது?

உண்மையில் குழந்தைகளை அவர்களுடைய இயல்புடனும் இயற்கையுடனும் தன்னிச்சையாய் இயங்கவிடாத இத்தகையக் கட்டுப்பாடுகள் எல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட மற்றும் சமுதாயம் சார்ந்த வளர்ச்சிக்கு நாம் போடும் முட்டுக்கட்டைகள் என்கின்றன ஆய்வுகள்.

இயற்கையை ஆராதித்து, இயற்கையை மதித்து, இயற்கையை ரசித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருந்த நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை விட்டு விலகி கடந்த முப்பது ஆண்டுகளில் அதனிடமிருந்து பெருந்தொலைவு வந்துவிட்ட உண்மையை அறிந்திருக்கிறோமா? உலகளவில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் சூழல் சீர்கேடு காரணமாக விழிப்புணர்வு பெறத் தொடங்கியிருக்கும் நாம் தற்போது மெல்ல மெல்ல இயற்கையின் அருமை உணரத் தலைப்பட்டிருக்கிறோம். அடுத்தடுத்த சந்ததிக்கும் அதைக் கொண்டு சேர்க்கும் கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறதல்லவா? அதற்கான வழிமுறைகள் என்னென்னவென்று பார்ப்போமா?

ஐம்புலன்களின் மூலமும் இயற்கையை அறிந்துணரும் வாய்ப்புகளை குழந்தைகளுக்கு உருவாக்கித்தர வேண்டியது பெற்றோரது முதல் கடமை. அதற்கு முதலில் நீங்கள் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அடம்பிடிக்கும் குழந்தையின் கையில் மொபைலைத் திணித்துவிட்டு ‘அப்பாடா கொஞ்ச நேரத்துக்கு தொல்லை இல்லை’ என்பது போல பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பெற்றோராக இருத்தல் கூடாது.

  • குழந்தைகளை இப்பூமியோடு நேரடித் தொடர்பில் ஈடுபடுத்துங்கள். எந்நேரமும் செருப்பு அல்லது ஷூ அணிந்த கால்களோடு குழந்தைகளைப் பழக்காமல் கல், மண், புல், சேறு, கடற்கரை மணல் என்று பல தளங்களிலும் வெற்றுக்கால்களால் நடக்கச் செய்யுங்கள். மணல், களிமண், சேறு போன்றவற்றை குழந்தைகள் தப்பித் தவறித் தொட்டுவிட்டால் பதறி வசைபாடாமல், கொஞ்ச நேரமாவது அவற்றின் ஸ்பரிசத்தை அவர்கள் அனுபவிக்க விடுங்கள்.
  • வீடு வரையச் சொன்னால் கூடவே மரத்தையும் வரையும் குழந்தையிடம் சிறு பறவையின் எச்சத்தின் மூலம் ஒரு காடு உருவாகும் கதையைச் சொல்லி வியப்பில் ஆழ்த்துங்கள்.
  • குழந்தைகளை அந்தந்த வயதுக்கேற்றபடி தோட்ட வேலைகளில் ஈடுபடுத்துங்கள். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லுங்கள். ஊன்றிய விதையிலிருந்து முளைவிட்டு தளிர்விட்டு செடி வளர்வதைக் காட்டுங்கள். கண்முன்னே ஒரு செடி வளரும் அதிசயத்தைப் பார்த்து குதூகலிக்கும் குழந்தைக்கு மரங்களின் அருமை புரியும். வளர்ந்து பெரியவர்களான பிறகு மரங்களில் பெயர்களை செதுக்கி சேதப்படுத்தும் எண்ணம் வராது.
  • அடுக்குமாடிக் குடியிருப்பில் தோட்டத்துக்கு எங்கே போவது என்கிறீர்களா? ஒரு முட்டை ஓடும் கொஞ்சம் பஞ்சும் பிஞ்சுக் கைப்பிடிக்குள் அடங்கும் கடுகு, வெந்தயம் போன்ற அஞ்சறைப்பெட்டி சாமான்களும் போதுமே, முளைகட்டிய பயிர் வளர்ப்புக்கு. தானே வளர்த்து தானே அறுவடை செய்தலின் ஆனந்தத்தை குழந்தைகள் அறியச் செய்யுங்கள்.
  • படங்களுடன் கூடிய, வாசிக்கத் தூண்டும் வகையிலான இயற்கை சார்ந்த புத்தகங்களைப் பரிசளியுங்கள். ஆவணப்புத்தகம் அல்லது பதிவேடுகளை பரிசளித்து இயற்கை குறித்த அவர்களுடைய ஆய்வுகளை அதில் ஆவணப்படுத்த உதவுங்கள்.  
  • ஆசிரியர்கள், ஏட்டுக் கல்வியோடு, இயற்கைசார் கல்வியை போதித்தும் செயல்முறைப் பயிற்சிகள் அளித்தும் குழந்தைகளுக்கு இயற்கை மீதான ஆர்வத்தைத் தூண்டுங்கள். அவர்களுடைய தேடல்களுக்கு உதவுங்கள்.
  • சுற்றுப்புறத்தில் உள்ள மரம், செடி, கொடிகளின் பெயர்களை குழந்தைகளுக்கு அறியத் தாருங்கள். எந்தெந்த தாவரங்கள் எந்தெந்த உயிரினங்களுக்கு உணவாகின்றன, உறைவிடமளிக்கின்றன என்று கண்டறிந்து குறிப்பெழுதச் சொல்லுங்கள். 
  • காணும் பூக்களை எல்லாம் அவற்றின் வண்ணம் மற்றும் வடிவம் வாரியாக வகைப்படுத்தச் சொல்லுங்கள். மாறுபட்ட வடிவ இலைகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆவணப்படுத்தச் சொல்லுங்கள்.
  • ஒரு நாளில் நாம் காணும் சிற்றுயிரிகள் உள்ளிட்ட பல்லுயிரிகள் எத்தனை எத்தனை என்று கண்டறிந்து பதியச் சொல்லுங்கள்.
  • உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள பறவை இனங்களின் கணக்கெடுப்பை குழந்தைகள் மூலமாகவே நிகழ்த்தலாம். பறவைகளின் ஒலி, கூடு, சிறகு இவற்றைக் கொண்டு பறவைகளை அடையாளங்காணப் பழக்குங்கள். 
  • சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு பறவைகள் கூர்நோக்கலை (bird watching) பொழுதுபோக்காக அறிமுகப்படுத்துங்கள். அன்றாடம் நாம் காணும் பறவைகளின் இயல்புகள், நடவடிக்கைகள், உணவுப்பழக்கம், உறைவிடம், கூடு கட்டும் முறை, குஞ்சு பொரித்து வளர்க்கும் முறை போன்றவற்றைக் கூர்நோக்கிப் பதிவாக்கக் கற்றுத்தாருங்கள். கூண்டுப் பறவையை விடவும் வான்வெளியில் சிறகடித்துப் பறக்கும் பறவையின் அழகையும் சுதந்திரத்தையும் அதன் வாழ்வுரிமையையும் ரசிக்கக் கற்றுக்கொடுங்கள்.
  • புகைப்படம் எடுத்தல் ஒரு அருமையான பொழுதுபோக்கு. அதிலும் இயற்கையைப் புகைப்படம் எடுத்தல் மிக அற்புதமானப் பொழுதுபோக்கு. குழந்தைகள் தாங்கள் கண்டு ரசிக்கும் காட்சிகளை எழுத்தால் ஆவணப்படுத்துவதையும் ஓவியமாய் வரைவதையும், புகைப்படம் எடுப்பதையும் ஊக்கத்துடன் உற்சாகப்படுத்துங்கள்.
  • குழந்தைகளைக் கூட்டி, அவர்களோடு இயற்கை சார்ந்த வாழ்வியல் குறித்து கலந்துரையாடுங்கள். குழந்தைகளை ஒன்றிணைத்து அவர்களைக் கொண்டே கதைகள், பாடல்கள், நாடகங்கள், விடுகதைகள், பழமொழிகள் என ஏதேனுமொரு வடிவில் நிகழ்ச்சிகள் நடத்தி, இயற்கையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருங்கள்.
  • குழந்தைகளுக்கு பூவரச இலை பீப்பீ, தென்னை ஓலை ராக்கெட், பனை ஓலை காற்றாடி, காகித மடிப்பு உருவங்கள், களிமண் பொம்மைகள், கூழாங்கல் ஓவியங்கள் என செய்யக் கற்றுத்தந்து செயல்முறைப் பயிற்சிகளையும் விளையாட்டுகளையும் ஒருசேர அறிமுகப்படுத்துங்கள். இவற்றையெல்லாம் வகுப்பறையில் மட்டுமல்ல, வீட்டிலும் கூட செய்யலாம்.
  • அரிசியும் உப்பும் கடையிலிருந்து கிடைப்பதாய் அறிந்திருக்கும் குழந்தைக்கு அவை விளைவிக்கப்படும் களத்தையும் அளத்தையும் காட்டுங்கள். நடவு முதல் அறுவடை வரை விவசாயி படும் அத்தனைப் பாடுகளையும் அவர்கள் அறியச் செய்து விவசாயத்தின் மீதான அவர்களது மதிப்பை உயர்த்துங்கள்.
  • இந்தக் கோவிட் சூழல் மாறட்டும். பிறிதொரு சமயம் வாய்ப்புக் கிடைக்கும்போது கிராமப்புறங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று, நகரக் குழந்தைகள் காண்பதற்கு வாய்ப்பில்லாத கிணறு, வயல், கண்மாய், பயிர், விறகடுப்பு, ஆடு, மாடு, கோழி, குதிரை, கழுதை, பஞ்சாரம், தொழுவம், மாட்டுவண்டி, குதிரை வண்டி, வைக்கோல் போர், குதிர், பத்தாயம், முற்றம், திண்ணை, இரவாணம், ஓட்டுவீடு, கூரை வீடு போன்றவற்றோடு அந்த எளிமையான வாழ்வியல் முறையையும் காட்டி வாருங்கள்.
  • மாதத்தில் ஒருநாளையாவது தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள் இல்லாத, இயற்கை உணவு நாளாக அறிவியுங்கள். கரண்டி, முட்கரண்டி தவிர்த்து விரல்களால் உணவை எடுத்துண்ண குழந்தைகளைப் பழக்குங்கள்.
  • சிக்கனமும் மறுசுழற்சியும் கூட இயற்கையை நேசிக்கும் வழிமுறைகளுள் அடக்கமே. பணம் காசு விஷயத்தில் மட்டுமல்ல, நாம் புழங்கும் தண்ணீர், காகிதம், மின்சாரம் என ஒவ்வொன்றிலும் சிக்கனத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுங்கள். தேவைக்கு மேல் பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனப்பாங்கினை மாற்றுங்கள். அத்தனைக்கும் முன்மாதிரியாக முதலில் உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ளுங்கள்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, “பூமி மனிதனுக்கானது மட்டுமே!” என்ற தவறான சிந்தனைப்போக்கு எந்த வயதில் முளைவிட்டாலும் முளையிலேயே கிள்ளி எறியச் செய்யுங்கள்.

பல்லுயிரும் பகிர்ந்து வாழும் இந்த பூமியின் நலனில் நம் பங்கு என்னவென்று நாம் உணர்ந்து இயற்கையை நேசிக்க குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே கற்றுத்தருவோம். வளமான எதிர்காலத்தை நம் வருங்கால சந்ததிக்கும் நாம் வாழும் இந்த பூமிக்கும் உறுதிப்படுத்துவோம்.

&&&

Share this: