ஸ்லோத்

ஸ்லோத்

விநோத விலங்குகள் – 8

வணக்கம் சுட்டிகளே. இந்த மாத விநோத விலங்கு என்ன தெரியுமா? தென்னமெரிக்காவைத் தாயகமாய்க் கொண்ட ஸ்லோத் (Sloth)  தான் அது. இவ்விலங்குகள் தோற்றத்தில் மட்டுமல்ல, இயல்பிலும் விநோதமானவை.

ஸ்லோத்துக்கு உலகின் மிக மெதுவாக இயங்கும் விலங்கினம் என்ற பெருமை உண்டு. 200 கிலோ எடையுள்ள பெரிய கடலாமைக்கும் 7 கிலோ எடையுள்ள ஸ்லோத்துக்கும் ஓட்டப்பந்தயம்… இல்லை இல்லை…  நடைப்போட்டி வைத்தால் ஒரு மணி நேரத்தில் 3 மீ. தூரத்தைக் நடந்து ஆமைதான் ஜெயிக்கும். ஸ்லோத் அதைவிடவும் குறைவாக 2 மீ. தூரத்தையே கடந்திருக்கும்.

ஸ்லோத் நடப்பதில்தான் ஸ்லோ, ஆனால் நீந்துவதில் திறமைசாலி. தரையில் நடப்பதை விடவும் மூன்று மடங்கு வேகத்துடன் நீந்தும்.

ஸ்லோத்தின் அசையாத் தன்மை காரணமாக, தமிழில் ‘அசையாக் கரடி’ எனக் குறிப்பிடப்படுகிறது. இது பெரும்பாலான நேரம் அசையாமல் பாறை போல இருப்பதால் பாறையில் பாசி வளர்வது போலவே இவற்றின் ரோமத்திலும் பாசி வளரும். அதுவும் ஒரு வகையில் ஸ்லோத்துக்கு நல்லதுதான். ஏன் தெரியுமா? பாசியுடன் பச்சையாக காட்சியளிப்பதால் இலைகளுக்கு நடுவே இவை இருப்பதே வெளியில் தெரியாது. எதிரிகளின் பார்வையில் படாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். பாசி தானும் வளர்ந்து தன்னை வளரவிடும் ஸ்லோத்தையும் பாதுகாக்கிறது.

ஸ்லோத்தின் உடம்பின் மீதுள்ள ரோமங்களையே தங்கள் இருப்பிடமாக்கி நூற்றுக்கணக்கானப் பூச்சியினங்களும் பூஞ்சையினங்களும் அதற்குள் பாதுகாப்பாக வாழ்ந்து மடிகின்றன என்பதும் ஓர் ஆச்சர்யம்.

மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள மழைக்காடுகளில் இவை காணப்படுகின்றன. நீளமான கைகால்களைப் பார்த்தால் குரங்கு போல் இருந்தாலும் இவை குரங்கு இனம் கிடையாது. முகம் கரடி போல் இருப்பதால் கரடி இனமா என்றால் அதுவும் கிடையாது. இவை எறும்புத்தின்னி குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது விநோதம். இவற்றின் கால் விரல்களின் எண்ணிக்கை அடிப்படையில் இவை மூவிரல் ஸ்லோத் (Bradypus), இருவிரல் ஸ்லோத் (Choloepus) என இரண்டு பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்லோத் வருடத்துக்கு ஒரு குட்டி போடும். ஸ்லோத் குட்டியும் குரங்குக் குட்டியைப் போல அம்மாவின் வயிற்று ரோமத்தைப் பற்றியபடி ஆறு மாதங்களுக்கு அம்மா கூடவே இருக்கும்.

ஸ்லோத்கள் இலை, துளிர், பூ, மொட்டு போன்றவற்றைத் தின்னும். இவற்றின் சீரண வேகம் மிகவும் குறைவு. மற்ற விலங்குகளுக்கு ஒன்றிரண்டு மணி நேரத்தில் செரித்துவிடும் உணவு, ஸ்லோத்துக்கு செரிக்கப் பல நாட்களாகும்.

ஸ்லோத் ஒரு நாளைக்கு 10-15 மணி நேரம் தூங்கும். மரக்கிளைகளைக் கால்களால் பற்றியபடி தலைகீழாகவோ அல்லது கிளையின் மீது படுத்தபடியோ தூங்கிக் கொண்டிருக்கும். வாரத்தில் ஒரே ஒரு தடவை, டாய்லெட் போவதற்காக மட்டுமே தரைக்கு இறங்கி வரும். ஒரு தடவை என்றாலும் ஒரு வாரத்துக்கான அளவை அதாவது அதன் உடல் எடையில் மூன்றில் ஒரு பங்கு அளவிலான கழிவை வெளியேற்றும்.

ஸ்லோத் பற்றிய இன்னொரு சுவாரசியமான விஷயம் சொல்லவா? சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பு யானை அளவிலான ஸ்லோத்கள் பூமியில் வாழ்ந்திருக்கின்றனவாம். அவற்றின் புதைபடிமங்களும் எலும்புக்கூடுகளும் இப்போதும் அருங்காட்சியகங்களில் உள்ளன.

சுட்டிகளே, மழைக்காடுகளின் பல்லுயிர் வளம் பெருக முக்கியப் பங்காற்றும் ஸ்லோத் பற்றி அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்குடன் உங்களைச் சந்திக்கிறேன்.

(படம் உதவி Pixabay)

Share this: