தேவாங்கு

slender-loris

விநோத விலங்குகள் – 9

வணக்கம் சுட்டிகளே. தேவாங்கு என்ற வார்த்தையைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனால் எத்தனைப் பேர் நேரில் பார்த்திருக்கீங்க? முட்டை போன்ற பெரிய உருண்டையான கண்களும் மெலிந்த உடலும் குச்சி போல் ஒல்லியான கால்களும் கொண்ட காட்டு விலங்குதான் தேவாங்கு. இதற்கு வால் இருந்தாலும் அது இருப்பதே வெளியில் தெரியாது.

Primates எனப்படும் ஆதிக்குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குகளுள் தேவாங்கும் ஒன்று. தேவாங்கு இனத்தின் இரண்டு பேரினங்களுள் slow loris எனப்படும் பெரிய தேவாங்குகள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலும் சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் காணப்படுகின்றன. மற்றொரு பேரினத்தைச் சேர்ந்த slender loris எனப்படும் தேவாங்குகள் பற்றிதான் இப்போது பார்க்கவிருக்கிறீர்கள். இவை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுகின்றன. இலங்கையில் காணப்படுபவை செந்தேவாங்குகள் என்றும் தென்னிந்தியாவில் இருப்பவை சாம்பல் தேவாங்குகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தேவாங்குகள் இரவாடிகள். இரவில் மட்டுமே இரை தேடி சுறுசுறுப்பாக இயங்கும். பூச்சிகள், பல்லிகள், நத்தைகள் போன்றவையே இவற்றின் பிரதான உணவு. சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும். வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை அழிப்பதால் விவசாயத்துக்குப் பெரும் நன்மை செய்யும் உயிரினமாக விவசாயிகளால் கருதப்படுகிறது.

தேவாங்கு வருடத்துக்கு ஒரு முறை குட்டி போடும். குட்டி பிறந்ததிலிருந்து சில வாரங்களுக்கு குரங்குகளைப் போலவே தேவாங்கும் குட்டியைத் தூக்கிக் கொண்டே திரியும். தேவாங்குகளின் ஆயுட்காலம் சுமார் 15 வருடங்கள்.  

தேவாங்கிடம் மந்திர சக்தியும் மருத்துவ சக்தியும் இருப்பதாக நம்பப்பட்டு வந்த காரணத்தால் பல காலமாக வேட்டையாடப்பட்டு வருகிறது. தேவாங்கைப் பார்த்தால் குடும்பத்துக்குக் கெடுதல் என்ற மூட நம்பிக்கை காரணமாக கிராம மக்களால் பல கொல்லப்பட்டன. அபூர்வமான செல்லப்பிராணி வளர்ப்புக்காக சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதும் ஒரு காரணம்.  அதனால் இதன் இனம் குறைந்து தற்போது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக இடம்பெற்றுள்ளது.

தேவாங்குகளை அழிவிலிருந்து மீட்டுப் பாதுகாக்க, கிராம மக்களிடையே பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகிலேயே முதல் தேவாங்கு சரணாலயமாக தமிழ்நாட்டில் கடவூர் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசு தரப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதியில் அமைய இருக்கும் சரணாலயம் மூலம் தேவாங்கு வேட்டையைத் தவிர்த்து அவற்றுக்குப் பாதுகாப்பான வாழ்விட வசதியை அளிக்க முடியும். அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கி அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

சுட்டிகளே, தேவாங்கு பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்குடன் உங்களைச் சந்திக்கிறேன்.   

(படம் உதவி – விக்கிபீடியா)

Share this: