ஸ்கங்க்

skunk

விநோத விலங்குகள் – 5

வணக்கம் சுட்டிகளே. சுட்டி உலகத்தின் இந்த மாத விநோத விலங்கு என்ன தெரியுமா? தமிழில் முடை வளிமா என்று சொல்லப்படும் Skunk தான். இது Mephitis பேரினத்தைச் சார்ந்தது.

நீங்கள் Looney Tunes  கார்ட்டூன் பிரியர்களாக இருந்தால் பெப்பி லெப்யூ (Pepé Le Pew) என்ற ஸ்கங்க்கைக் கட்டாயம் தெரிந்திருக்கும். அது எப்போதும் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும். ஆனால் கோபமோ, பயமோ வந்தால் சட்டென்று வாலைத் தூக்கிக்கொண்டு, துர்நாற்றம் அடிக்கும் திரவத்தைப் பீச்சும். அதற்குப் பயந்து எந்த விலங்குமே அதோடு நட்பாக இருக்க விரும்பாது.

சரி, ஸ்கங்க் ஏன் துர்நாற்றம் மிகுந்த திரவத்தைப் பீச்சியடிக்கிறது? எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதம்தான் அது. ஸ்கங்க் தன் எதிரியை எப்போதும் நேருக்கு நேராக எதிர்கொள்ளாது.  முதலில் பின்பக்கமாகத் திரும்பி, பின்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு தலைகீழாக நிற்கும். அது எதிரிக்குக் கொடுக்கும் முதல் எச்சரிக்கை.

பிறகு பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, இடமும் வலமுமாக மாறி மாறி அசையும். டான்ஸ் ஆடுகிறது என்று நினைத்துவிடக்கூடாது. அதுதான் இரண்டாவது எச்சரிக்கை. அடுத்து ஸ்ப்ரேதான் என்பதைத் தெரிந்துகொண்டு எதிரி ஓடிவிட்டால் எதிரிக்கு நல்லது. ஸ்கங்க்குக்கும் ஸ்ப்ரே மிச்சமாகும்.

எச்சரித்த பிறகும் எதிரி நகரவில்லை என்றால் அடுத்து ஸ்ப்ரேதான். உடலை வளைத்து வாலைத் தூக்கி எதிரியை நோக்கி துர்வாடை மிகுந்த எண்ணெய் போன்ற கொழகொழப்பான திரவத்தை ஸ்ப்ரே செய்யும். அதுவும் எதிரியின் கண்களைக் குறிவைத்தே ஸ்ப்ரே செய்யும்.

சரியாக இலக்கை நோக்கி 3 மீட்டர் தூரம் வரையிலும், இலக்கின்றி 6 மீட்டர் தூரம் வரையிலும் ஸ்ப்ரே செய்யக்கூடியது ஸ்கங்க்.

துர்நாற்றம் எப்படி இருக்கும் தெரியுமா? அழுகிய பிண வாடையைக் காட்டிலும் மிக மோசமாக, எவராலும் தாங்க இயலாத அளவுக்கு அருவருப்பாக இருக்கும். வாந்தியும் குமட்டலும் உண்டாக்கும். அது மட்டுமல்ல, மிளகாய்த்தூளைக் கண்ணில் தூவியது போல அது உண்டாக்கும் எரிச்சலும் தாங்க முடியாததாக இருக்கும். சில மணிநேரத்துக்கு கண்ணே தெரியாது. என்ன செய்வதென்று தெரியாமல் எதிரி தவிக்கும்போது, ஸ்கங்க் தப்பித்து ஓடிவிடும்.

பல நாட்கள் ஆனாலும் ஸ்கங்க்கின் துர்நாற்றம் போகவே போகாது. அதன் பிறகு ஸ்கங்க்கின் கருப்பு வெள்ளை நிறத்தைத் தூரத்தில் கண்டாலே முன் அனுபவம் காரணமாக பல விலங்குகளும் பறவைகளும் எச்சரிக்கையாய் இருக்கும். மனிதர்கள்? சொல்லவே வேண்டாம், காற்றுக் காலத்தில் நான்கைந்து கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தால் கூட மனிதர்களால் அந்தத் துர்நாற்றத்தை உணர முடியுமாம்.

அப்படியென்றால் ஸ்கங்க்குக்கு எதிரியே கிடையாதா? இருக்கின்றன. நரி, ஓநாய், மலைச்சிங்கம் போன்ற கொன்றுண்ணிகள் ஸ்கங்க் ஸ்ப்ரே செய்வதற்குள்ளாகவே தாக்கிக் கொன்றுவிடும்.

ஸ்கங்க் ஒரு அனைத்துண்ணி. பல்லி, எலி, தவளை, மீன் முதல் புழு, பூச்சிகள் வரை தின்னும். இலை, புல், பழம், விதை, காளான், கிழங்கு என தாவர உணவையும் தின்னும். இவற்றுக்குள் எல்லைப் பிரச்சனை கிடையாது. ஒரே வளைக்குள் பத்துப் பன்னிரண்டு ஸ்கங்க் சேர்ந்து வாழும்.

என்ன சுட்டிகளே, விநோத விலங்குகள் வரிசையில் இந்த மாதம் ஸ்கங்க் பற்றி அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்குடன் உங்களைச் சந்திக்கிறேன்.   

(படம் உதவி – Pixabay)

Share this: