ஸ்கேட்டிங் விளையாட்டு மேலை நாடுகளில் சர்வ சாதாரணமான ஒன்று. இன்னும் நடக்கவே ஆரம்பிக்காத குட்டிக் குழந்தைகள் முதல் வளர்ந்த கல்லூரி மாணவர்கள் வரை ஸ்கேட் போர்டில் சர்ரென்று சறுக்கிக் கொண்டு செல்வதைப் பார்க்க முடியும். உடலை முன்னும் பின்னும் வளைத்து பேலன்ஸ் செய்வதும், ஸ்கேட்டிங் பலகையோடு எம்பிச் சுழன்று சாகசங்கள் காட்டுவதும் அடிக்கடி காணக்கிடைக்கும் காட்சி.
இந்தியாவிலும் ஸ்கேட்டிங் விளையாட்டு அறிமுகமாகி இருந்தாலும் வசதி படைத்த பெருநகரங்களில் பணக்காரக் குழந்தைகளின் விலையுயர்ந்த பொழுது போக்காகவும் விளையாட்டாகவும் உள்ள ஸ்கேட்டிங், கிராமப்புறக் குழந்தைகளுக்கு எந்த அளவுக்குப் பரிச்சயம்? ஸ்கேட்டிங் என்ற வார்த்தையைக் கூட அக்குழந்தைகள் கேள்விப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் ராஜஸ்தானிலுள்ள கெம்பூர் என்ற அடிப்படை வசதிகளற்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த, பொருளாதாரத்திலும், சாதியிலும் பின்னடைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு ஸ்கேட்டிங் விளையாட்டின் மேல் ஆசையும் ஈடுபாடும் வந்தால் என்னாகும் நிலைமை?
இந்தச் சிறுமியின் நிலைமையில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய கிராமப்புறப் பெண் குழந்தைகளின் எதார்த்த நிலையைப் பேசும் கதைக்களம் தான் ஸ்கேட்டர் கேர்ள் திரைப்படம்.
ப்ரேர்னா (PRERNA) தான் அந்த ஸ்கேட்டர் கேர்ள். அவளுக்கு ஒரு துறுதுறு தம்பி அங்குஷ். கதை முழுவதும் இழையோடும் அக்காவுக்கும் தம்பிக்குமான பாசப் பிணைப்பு வெகு அழகு. ஆரம்பக் காட்சியே அக்கா தன் தம்பியை அவனே தயாரித்த பேரிங் வண்டி என்னும் இழுபலகையில் உட்காரவைத்து இழுத்துக் கொண்டு வந்து பள்ளியில் விடுவதுதான்.
ப்ரேர்னா வீட்டுவேலைகள் செய்கிறாள். துணி துவைக்கிறாள். அம்மாவோடு கூலி வேலைக்குச் செல்கிறாள். அப்பாவுக்கு உதவியாக கடலை வியாபாரம் செய்கிறாள். ஆனால் பள்ளிக்கூடத்துக்கு மட்டும் போகவில்லை. காரணம் அவளிடம் சீருடை இல்லை, புத்தகங்கள் இல்லை. அதனால், பள்ளிக்குப் போனாலும் அங்கே கேலிக்குரியவளாகிறாள்.
தன் தந்தையின் பிறந்த ஊரான கெம்பூர் கிராமத்துக்கு வந்திருக்கும் லண்டனைச் சேர்ந்த ஜெசிகாவை சந்தித்த பிறகு தான் ப்ரேர்னாவின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
கிராமங்களில் இன்றும் நிலவும் சாதீயப் பாகுபாடுகளும் பெண்ணியப் பாகுபாடுகளும் படத்தில் பல இடங்களில் காட்டப்படுகின்றன. ப்ரேர்னாவை ஸ்கேட் போர்டுடன் பார்க்கும் அவள் அப்பா, “ஆண் பிள்ளைகள் விளையாட்டெல்லாம் உனக்கு எதற்கு, சமைக்கப் போ” என்கிறார்.
பள்ளியில் “கீழ்சாதிப் பிள்ளைகளுடன் பழகாதே” என்று மகனைக் கண்டிக்கிறார் தலைமையாசிரியர். அதே சமயம், இந்த சாதீயப் பாகுபாடுகளையும் ஆண் பெண் பேதங்களையும் கடந்து பழகும் இளம் தலைமுறையினர் மீதான எதிர்கால நம்பிக்கையும் படத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.
ப்ரேர்னாவின் தம்பி உருவாக்கிய பேரிங் வண்டி, கிட்டத்தட்ட ஸ்கேட் போர்ட் போலவே இருப்பதைப் பார்த்து வியக்கும் ஜெசிகாவும், அவள் நண்பரும் அந்தக் கிராமத்துக் குழந்தைகளுக்கு ஸ்கேட் போர்டை அறிமுகப்படுத்துகின்றனர். ஸ்கேட் போர்டுகளையும் பரிசளிக்கின்றனர். ஆனால் ஸ்கேட்டிங் தளம்?
பிள்ளைகள் தெருக்களில், வீதிகளில், சந்து பொந்துகளில் எல்லாம் ஸ்கேட்டிங் செய்து ஊருக்குள் பெரும் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். விபத்துகள் மற்றும் சச்சரவுகளால் கிராமம் மற்றும் குழந்தைகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் பயிற்சி பெறுவதற்கென்று தனியாக ஒரு ஸ்கேட் பார்க் இருந்தால், நன்றாக இருக்குமே என்று நினைக்கும் ஜெசிகா அதற்கான முயற்சியில் இறங்குகிறார்.
பலப் பல போராட்டங்களுக்குப் பிறகு ராஜஸ்தான் மகாராணியின் உதவியோடு கெம்பூரில் ஒரு ஸ்கேட் பார்க் உருவாக்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு முறையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ப்ரேர்னாவின் கடின உழைப்பும் ஸ்கேட்டிங் மீதான அவள் காதலும் அவளை தனித்து அடையாளங்காட்டுகின்றன.
சாதிக்கத் துடிக்கிறாள் அவள். சாதனைக்குத் தடையாக நிற்கிறார் அவள் அப்பா. அடுத்த வாரம் அகில இந்திய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி என்ற நிலையில் அவளுடைய ஸ்கேட் போர்டையும் எரித்துவிடுகிறார். பெண் பிள்ளைகள் சமைக்கவும் வீட்டுவேலைகள் செய்யவும், திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றெடுக்கவுமே என்பதில் உறுதியாக இருக்கும் அவர், ப்ரேர்னாவுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். சாம்பியன்ஷிப்-க்கான போட்டி நடைபெறும் அன்று தான் ப்ரேர்னாவுக்குத் திருமணம். கனவுப்பாதையா, எதார்த்தத்தின் பாதையா என இருதலைக் கொள்ளியாகத் தவிக்கும் ப்ரேர்னா, துணிந்து ஒரு முடிவெடுக்கிறாள். அதில் சாதிக்கிறாள்.
சாம்பியன் என்பவர் போட்டியில் வெற்றி பெற்றவர் மட்டுமல்ல, கடினமான இடையூறுகளை மனத் துணிவோடு கடந்துவந்து சாதிப்பவரும் தான் என்று சொல்லும் மகாராணி, ப்ரேர்னாவின் துணிவைப் பாராட்டி தன் கையால் அவளுக்குப் பதக்கம் அணிவிக்கிறார். அப்போது அவளைத் தேடி அங்கு வந்திருக்கும் ப்ரேர்னாவின் பெற்றோருக்கு மட்டுமல்ல, பார்க்கும் நமக்கும் கண்கள் கலங்குகின்றன.
குழந்தைகளுக்கு முக்கியமாகப் பெண் குழந்தைகளுக்கு அவர்களுடைய கனவுகளை மெய்ப்பிக்கும் முயற்சியில், எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கும் மனத்திடம் உண்டு என்பதையும், வாய்ப்பு கிடைத்தால் எந்தக் குழந்தையும் சாதனையின் உச்சம் தொடும் என்பதையும் வலியுறுத்தும் மிக அழகான திரைப்படம் ஸ்கேட்டர் கேர்ள்.
சோகையான உடலுடனும், செம்பட்டை தலைமுடியுடனும் கிராமப்புற ஏழைச் சிறுமி ப்ரேர்னாவாக நடித்திருக்கும் சிறுமி ரேச்செல் சஞ்சிதா குப்தாவுக்கு (RACHEL SANCHITA GUPTA) இதுதான் முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. அவ்வளவு நேர்த்தியான நடிப்பு.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ள மஞ்சரி மகிஜானிக்கு (MANJARI MAKIJANY) இது முதல் முழுநீளத் திரைப்படம். இதற்கு முன்பு அவர் இயக்கிய இரு குறும்படங்களும் அகில உலக அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. இந்தத் திரைப்படத்துக்காக எட்டே வாரத்தில் கெம்பூரில் சர்வதேசத் தரத்தில் Desert Dolphin என்ற ஸ்கேட் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் முதல் ஸ்கேட் பார்க் என்பதோடு இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கேட்பார்க் என்ற பெருமையும் உடைய அது, தற்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் ஸ்கேட் போர்டிங் பயிற்சி செய்வதற்கான பொதுக்களமாக திறந்துவிடப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற அகில உலக ஸ்கேட் போர்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே பெண் போட்டியாளரான, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண் ஆஷா கான்டின் (ASHA GOND) வாழ்க்கை அனுபவத்தைத் தழுவி, இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் காணக் கிடைக்கிறது.