பறவைகள் பல விதம் – 16
வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நாம் பார்க்கவிருக்கும் பறவை பஞ்சவர்ணக் கிளி. வடமொழியில் ‘பஞ்ச’ என்றால் ‘ஐந்து’ என்று பொருள். ஐந்து வண்ணங்களைக் கொண்ட கிளி என்பதால் இது ‘பஞ்சவர்ணக் கிளி’ அல்லது ‘ஐவண்ணக் கிளி’ என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சவர்ணக் கிளியின் உடலில் சிவப்பு, மஞ்சள், அடர் நீலம், வெளிர் நீலம், ஆரஞ்சு வண்ணங்களில் இறகுகள் காணப்படுகின்றன.
பஞ்சவர்ணக் கிளிகள் ‘மாக்காவ்’ எனப்படும் பெருங்கிளி பிரிவில் ‘ஆரா’ என்னும் பேரினத்தைச் சேர்ந்தவை. மாக்காவ் பிரிவில் சுமார் 19 வகையான பெருங்கிளிகள் இருந்தாலும் பளீரென்ற சிவப்பு நிறத்தால் பலரையும் பெருமளவு வசீகரிப்பவை ‘Scarlet macaw’ எனப்படும் பஞ்சவர்ணக் கிளிகள்தான். இவற்றின் உயிரியல் பெயர் Ara macao என்பதாகும். இவற்றின் உடல் நீளம் எவ்வளவு தெரியுமா? தலை உச்சியிலிருந்து வாலிறகின் நுனி வரை அளந்தால் சுமார் ஒரு மீட்டர் இருக்கும்.
பஞ்சவர்ணக் கிளிகள் பெரும்பாலும் ஜோடியாகவோ அல்லது கூட்டமாகவோ காணப்படும். பழங்கள், விதைகள், கொட்டைகள், பூக்கள், பூந்தேன் போன்றவை இவற்றின் உணவாகும். இனப்பெருக்கக் காலத்தில் புரதச் சத்து அதிகமாக தேவைப்படுவதால் அந்த சமயத்தில் இவை புழு, பூச்சி, நத்தை, வண்டு போன்றவற்றைத் தின்னும். இவற்றின் கடினமான அலகினால் எவ்வளவு கடினமான மேலோட்டையும் உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துத் தின்ன முடியும். மரம் ஏறும்போது அலகையும் இன்னொரு கால் போல பயன்படுத்தி மரம் ஏறும்.
இவை மரப்பொந்துகளிலோ, ஆற்றங்கரையிலுள்ள துவாரங்களிலோ வசிக்கும். இவற்றை எளிதில் பழக்கப்படுத்த முடியும். இவை தாங்கள் கேட்கும் ஒலிகளை மிமிக்ரி செய்யக்கூடியவை. பஞ்சவர்ணக் கிளிகள் ஐம்பது முதல் அறுபது வருடங்கள் வரை உயிர்வாழும்.
பஞ்சவர்ணக் கிளி ஜோடிகள் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாமல் சேர்ந்தே இருக்கும். இவை வருடத்துக்கு ஒரு தடவை இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும். மற்றக் கிளியினத்தைப் போலவே இவற்றுக்கும் கூடு கட்டத் தெரியாது. மரப்பொந்துக்குள் மரச்செதில்களை மென்று துப்பி மெத்துமெத்தென்று ஆக்கி அதில் முட்டையிடும். பெண் கிளி அடைகாக்கும். குஞ்சு பொரிந்த பிறகு தாய் தந்தை இரண்டுமே குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்க்கும். ஒரு வருடம் வரை குஞ்சுகள் பெற்றோரோடு வசிக்கும்.
மாக்காவ் பெருங்கிளிகள் அடிக்கடி குறிப்பிட்ட நிலப்பகுதிக்குக் கூட்டமாகச் சென்று அப்பகுதியில் கிடைக்கும் களிமண்ணை அலகால் சுரண்டி ருசிப்பது வழக்கம். மண்ணிலிருந்து தங்களுக்குத் தேவையான தாது உப்புகளைப் பெறுவதற்காகவே அப்படிச் செய்கின்றன. அதற்கு ஆங்கிலத்தில் ‘clay licking’ என்று பெயர்.
பஞ்சவர்ணக் கிளிகள் அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்டவை. இவற்றின் அழகு காரணமாக தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் செல்லப்பறவைகளாக பெருங்கூண்டுகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன. சில நாடுகளுக்கு சட்டவிரோதமாகவும் கடத்தப்படுகின்றன.
இவ்வளவு அழகிய சிறகுகளை உடைய பெருங்கிளிகளை கூண்டுக்குள் அடைத்து ரசிப்பதை விடவும் வானத்தில் சிறகடித்துப் பறக்கும்போது பார்த்து ரசிப்பதுதான் உண்மையான ஆனந்தம். இல்லையா சுட்டிகளே?
இந்த மாதம் பஞ்சவர்ணக்கிளியைப் பற்றி அறிந்துகொண்டீர்கள். அடுத்த மாதம் வேறொரு அழகிய பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.
(படம் – கீதா)