மரம் மண்ணின் வரம் – 10
சுட்டிகளே, மரத்தின் பெயரைக் கேட்டதும் இந்த உலகத்தில் குரங்கு ஏறாத மரமும் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படுவீர்கள். மரத்தின் படத்தைப் பார்த்தாலே உங்களுக்கு உண்மை புரியும். இம்மரத்தின் தண்டுகளில் பெரிய தடிமனான மற்றும் கூர்மையான முட்கள் காணப்படும். அதுவும் சாதாரண முட்கள் இல்லை, விஷ முட்கள். தம்மைப் பாதுகாப்பதற்காக இந்த மரம் வைத்திருக்கும் உத்தியைப் பாருங்க. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? அதனால்தான் இதற்கு ‘Monkey no-climb tree’ என்ற பெயர்.
இம்மரத்தின் அறிவியல் பெயர் Hura crepitans என்பதாகும். வட மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை இம்மரங்கள். இதன் காய் முற்றியதும் வெடிகுண்டைப் போலப் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறும். அதன் மூலம் விதைபரவல் நடைபெறுகிறது.
நொடிக்கு 70 மீ. வேகத்தில் விதைகளை நாலாபக்கமும் சுமார் 100 மீ. தூரத்துக்குச் சிதறடிக்கும் இம்மரத்தை ‘அதிர்வேட்டு மரம் (Dynamite tree) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக இம்மரம் Sandbox tree என்றுதான் குறிப்பிடப்படுகிறது. ஏன் தெரியுமா? முற்காலத்தில் மை தொட்டு எழுதும் பேனாக்களே பயன்பாட்டில் இருந்தன. எழுதிய பிறகு காகிதத்தில் வெகு நேரம் மை ஈரமாக இருக்கும். அதைக் காயவைக்க பிற்காலத்தில் மை உறிஞ்சும் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மையைக் காயவைக்க, தோட்டுக்கணவாய் மீனின் (cuttlefish) எலும்பினால் ஆன நுண்பொடி தூவப்பட்டது. அந்தப் பொடியை வைத்திருக்கும் டப்பாவுக்கு sandbox என்று பெயர். அதற்கும் இந்த மரத்துக்கும் என்ன தொடர்பு?

இந்த மரத்தின் காயானது, உள்ளங்கை அகலத்தில் சிறிய பரங்கிப்பிஞ்சு போல அழகாக இருக்கும். அது முற்றி வெடிப்பதற்கு முன்பே அதைப் பறித்து, அறுத்து, செதுக்கி அலங்காரப் பெட்டி போல் ஆக்கி அதில் நுண்பொடியை வைத்து அந்தக்காலத்தில் பயன்படுத்தினார்களாம். அதனால் இதற்கு sandbox tree என்ற பெயர் நிலைத்துவிட்டது.
இம்மரங்கள் சுமார் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. ஒரே மரத்தில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியாகப் பூக்கும். இலைகள் அரச இலை வடிவத்தில் காணப்படும்.
இம்மரத்தின் பால் விஷமாகவும் மருந்தாகவும் அமெரிக்கப் பழங்குடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் மரத்தின் நச்சுப் பாலை அம்பின் முனைகளில் தடவி மீன் பிடிக்கவும் விலங்குகளை வேட்டையாடவும் பயன்படுத்துகின்றனர். பல்வலி, மூட்டு வலி, தோல் நோய் போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்காவில் கண்ணீர்ப்புகை குண்டுகள் தயாரிக்க இம்மரப்பாலைப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரத்தண்டிலிருந்து சில மரச்சாமான்களும் காயிலிருந்து அலங்காரப் பொருட்களும் உருவாக்கப்படுகின்றன.
மரத்தைத் தொட்டால் மட்டுமல்ல, அருகில் போனாலே ஆபத்து என்பதால் உலகின் மிக ஆபத்தான மரங்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இதுவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
சுட்டிகளே, உலகின் ஆபத்தான மரம் ஒன்றைப் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு அரிய மரத்தைப் பற்றிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.
(படங்கள் உதவி – விக்கிபீடியா)