ரோட்ரன்னர்

ரோட்ரன்னர்

பறவைகள் பல விதம் – 8

சுட்டிகளே, உங்களில் எத்தனைப் பேர் Looney Tunes-ன்  ரோட்ரன்னர் ஷோ பார்த்திருக்கீங்க? Wile E. Coyote என்னும் நரி எப்போது பார்த்தாலும் ரோட்ரன்னர் (Roadrunner) என்ற பறவையைத் துரத்திக்கொண்டே இருக்கும். அதைப் பிடிப்பதற்கு என்னென்னவோ தந்திரம் பண்ணும். ஆனால் ரோட்ரன்னர் அதனிடம் சிக்காமல் படுவேகமாக ஓடிக்கொண்டே இருக்கும். சும்மாவா ஓடும். அவ்வப்போது ‘மீப் மீப்’ என்று கத்திவிட்டு ஓடும். உண்மையில் அப்படி ஒரு பறவை இருக்கிறதா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆம், உண்மையில் அப்படி ஒரு பறவை இருக்கிறது. ஆனால் கார்ட்டூனில் வருவது போல் வண்ணமயமாக இருக்காது. ‘மீப் மீப்’ என்றும் கத்தாது.

ரோட்ரன்னர் பறவைகளுள் பெரிய ரோட்ரன்னர், சிறிய ரோட்ரன்னர் என்று இரு வகை உண்டு. பெரிய ரோட்ரன்னர் நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் மாநிலப் பறவை என்ற சிறப்பை உடையது.

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ரோட்ரன்னர் பறவை தரையில் வாழும் குயில் இனத்தைச் சேர்ந்தது. அது ஓடும் வேகம் மணிக்கு 43 கி.மீ என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஒரு மனிதனுக்கும் ரோட்ரன்னருக்கும் ஓட்டப்பந்தயம் வைத்தால் ரோட்ரன்னர்தான் ஜெயிக்கும். ஓடுவதற்கு ஏற்றபடி அதன் கால்கள் நீளமாகவும் வலிமையானதாகவும் இருக்கும். ஓடிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று பறக்கவும் முடியும். ஆனால் அதிக உயரம் பறக்கமுடியாது.

பாலைவனப் பறவையான ரோட்ரன்னர் ஒரு அனைத்துண்ணி. கள்ளிச்செடியின் பழங்கள், விதைகள் முதல் புழு, பூச்சி, எலி, பல்லி, தேள் முதல் பாம்பு வரை எதையும் தின்னும். Rattlesnake எனப்படும் கடுமையான விஷமுள்ள பாம்பைக்கூடக் கொன்று தின்னும்.

பாம்பைக் கொல்வதற்கு ரோட்ரன்னர்கள் ஒரு தந்திரம் செய்யும். இரண்டு ரோட்ரன்னர்கள் இணைந்து அந்த வேலையைச் செய்யும். ஒரு பறவை பாம்பின் முன்னால் நின்று தலையைத் தாழ்த்தி சண்டைக்குப் போவது போலப் போகும். பாம்பின் கவனம் முன்னால் இருக்கும் பறவையிடம் இருக்கும்போது மற்றப் பறவை பின்னாலிருந்து அதைத் தாக்கும். மீண்டும் மீண்டும் அதன் தலையைக் கொத்தியோ அல்லது முழு உடலையும் பாறையில் மோதியோ கொன்று தின்னும்.

முட்டையிடும் காலத்தில் ஆண் பறவை கூடு கட்டுவதற்கானப் பொருட்களை சேகரித்துக் கொண்டுவந்து கொடுக்கும். பெண் பறவை அவற்றைக் கொண்டு மரங்களின் தாழ்வான கிளைகளில் கூடு கட்டும். ஒரு ஈட்டுக்கு மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 20 நாட்களில் குஞ்சு பொரிக்கும். தாயும் தந்தையும் இணைந்து குஞ்சுகளுக்கு இரையூட்டி வளர்க்கும்.

அமெரிக்கப் பழங்குடி மக்கள் ரோட்ரன்னர் பறவையை வேகம், துணிச்சல், வலிமை, விடாமுயற்சி போன்றவற்றின் அடையாளமாகப் பார்க்கிறார்கள். ரோட்ரன்னர் பறவையின் இறகுகளை குழந்தையின் தொட்டிலில் கட்டினால் தீய ஆவிகள் குழந்தையை நெருங்காது என்றும் ரோட்ரன்னரைப் பார்ப்பதே நல்ல சகுனம் என்றும் நம்புகிறார்கள்.

சுட்டிகளே, இந்த மாதம் வித்தியாசமான ரோட்ரன்னர் பறவை பற்றி அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(pc.Pixabay)

Share this: