ராக்கூன்

raccoon

விநோத விலங்குகள் – 15

வணக்கம் சுட்டிகளே. ராக்கூன் என்ற விலங்கு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பிரபலமான விலங்கு ராக்கூன். ராக்கூன்களை மையமாக வைத்து எண்ணற்ற கார்ட்டூன்களும் திரைப்படங்களும் வீடியோ விளையாட்டுகளும் வந்துள்ளன. ராக்கூனின் அறிவியல் பெயர் Procyon lotor.  ராக்கூன்கள் மிகவும் புத்திக்கூர்மை உள்ளவை. இவை செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன.  

நம்முடைய கதைகளில் நரி இடம்பெறுவது போல, அமெரிக்கப் பழங்குடிக் கதைகளில் இவை சூழ்ச்சியும் தந்திரமும் மிகுந்தவையாகக் குறிப்பிடப்படுகின்றன.

ராக்கூன்களின் முகத்தைப் பார்த்தால் அதன் கண்களை கருப்பு ரிப்பனால் கட்டியிருப்பது போலத் தோன்றுகிறது அல்லவா? அது ஏன் தெரியுமா? ராக்கூன்கள் இரவாடிகள். எனவே அவை இரவுநேரத்தில்தான் இரைதேடி வெளியில் வரும். அப்போது விளக்கு வெளிச்சத்தால் கண்கள் கூசாமல் தெளிவாகப் பார்ப்பதற்காக இயற்கை அளித்த கொடைதான் அவற்றின் கண்களைச் சுற்றியுள்ள அந்தக் கருப்புப் பட்டை.

பார்வைத்திறன், செவித்திறன், மோப்பத்திறன் என ஒவ்வொரு விலங்குக்கும் இரை தேடுவதற்கு தனித்துவமான திறமை இருக்கும். சில விலங்குகள் மீசையின் தொடுதிறனைக் கொண்டு இரைதேடும். ராக்கூன்கள் வித்தியாசமாக பாதங்களின் உணர்திறனைக் கொண்டு இரையைக் கண்டறிகின்றன. நாம் கையால் தொட்டுப் பார்த்து உணர்வதைப் போல இவை தம் முன் பாதங்களால் தொட்டுப் பார்த்து இரையின் தன்மையை அறிகின்றன. இவற்றின் மோப்பசக்தியும் அபாரமானது.     

ராக்கூனின் ஒவ்வொரு காலிலும் ஐந்து விரல்கள் இருக்கும். அதன் விரல்கள் நீளமாக மனித விரல்களைப் போலவே இருக்கும். அதனால் பொருட்களைப் பிடிப்பது, மரத்தில் ஏறுவது, மண்ணைத் தோண்டுவது, குப்பைத்தொட்டிகளைக் கிளறுவது போன்ற செயல்களை மிகவும் எளிதாகச் செய்யமுடியும். ராக்கூனால் எந்த வகையான டப்பா, பாட்டில் போன்றவற்றின் மூடிகளையும், எவ்வளவு இறுக்கமாக மூடியிருந்தாலும் எளிதாகத் திறக்க முடியும் என்பது ஆச்சர்யம்.

ராக்கூன்கள் தரைக்குள் வளை அமைத்தும் மரப்பொந்துகளிலும், பாறை இடுக்குகளிலும் வசிக்கின்றன. ஆண் ராக்கூன்கள் தனித் தனியாக வசிக்கும். பெண் ராக்கூன்கள் கூட்டமாக வசிக்கும். குட்டி போடும் சமயத்தில் மட்டும் தனியாகச் சென்றுவிடும். ஒரு வருடத்துக்கு ராக்கூன் மூன்று முதல் ஏழு குட்டிகள் வரை போடும். ராக்கூன் குட்டியை ஆங்கிலத்தில் ‘kit’ என்று குறிப்பிடுகின்றனர். ஆண் பெண் பன்றிகளைக் குறிக்கும் Boar, Sow என்ற சொற்களே ஆண் பெண் ராக்கூன்களையும் குறிக்கின்றன. குட்டிகள் ஒரு வருடம் வரை தாயுடன் இருக்கும்.

ராக்கூன்களிடம் இருக்கும் இன்னொரு ஆச்சர்யம், ஒரு பகுதியில் வசிக்கும் ராக்கூன்கள் எல்லாமே ஒரே இடத்தைத்தான் கழிவறையாகப் பயன்படுத்தும் என்பதுதான்.

ராக்கூன்கள் விதவிதமான சத்தங்களை எழுப்பும். இவை இருநூறுக்கும் மேற்பட்ட ஒலிகளை எழுப்பும் என்பது மற்றொரு ஆச்சர்யமான தகவல். 

ராக்கூன் ஒரு அனைத்துண்ணி. பழம், விதை, கொட்டை, பூச்சி, பறவை, முட்டை, மீன், நண்டு, இறால் என எதையும் தின்னும். நகரங்களை ஒட்டிய பகுதிகளில் குப்பைத்தொட்டியைக் கிளறி அதில் கிடைப்பவற்றை உண்ணும்.

ராக்கூன்கள் ஆரம்பத்தில் காடுகளில் மட்டுமே வசித்தன. காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் பெருகிய பிறகு இவை குடியிருப்புப் பகுதிகளில் வசிக்க ஆரம்பித்துவிட்டன.

தற்காலத்தில் ராக்கூன்கள் அவற்றின் ரோமத்துக்காகப் பெருமளவு வேட்டையாடப்படுகின்றன. சில இடங்களில் விஷம் வைத்துக் கொல்லப்படுகின்றன.  

ராக்கூன்களின் ஆயுட்காலம் சுமார் ஐந்து வருடங்கள். ஆனால் காப்பகங்களில் சில இருபது வருடங்கள் வரை வாழக்கூடியவை.

சுட்டிகளே, ராக்கூன் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(படங்கள் உதவி – Pixabay)

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *