புது வெள்ளம்

Pudhuvellam_pic

டாக்டர் அகிலாண்ட பாரதி

(கொரோனாவினால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, மோசமாகப் பாதிக்கப்பட்டது; இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமானது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், அரசுப்பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் ‘பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ பற்றியும், ‘வீதி தோறும் வகுப்பறை’ என்ற பெயரில், அக்குழந்தைகளுக்காக உழைக்கும் தன்னார்வலர்கள் பற்றியும், டாக்டர் அகிலாண்ட பாரதி எழுதியுள்ள கட்டுரையிது. வருங்கால தமிழ்ச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும், வாசிக்க வேண்டிய முக்கிய கட்டுரை).

(ஆசிரியர், சுட்டி உலகம்)

akila_padam_pic

Dr.Akilanda Bharathi.S

இசக்கியம்மாள் எங்கள் அரசு மருத்துவமனையின் நீண்ட நாள் நோயாளி. தீவிரமான ஆஸ்துமா தொந்தரவு காரணமாக மாதத்தில் இருபது நாட்கள் மருத்துவமனையில் இருப்பார். பத்து நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பார். அவருக்கு துணையாக அவருடைய 12 வயது பேத்தி சத்யா மட்டுமே இருப்பாள். சத்யாவிற்கு அம்மா கிடையாது. அப்பா ஊர் ஊராக போய் மைக் செட் கட்டுபவர். அவர் வீட்டிற்கு எப்போதாவது தான் வருவார். வரும் நேரம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டுப் போய்விடுவார். எந்த விதக் கவனிப்பும் ஆறுதலும் கிடையாது, சத்யாவுக்கு.

பாட்டியுடன் மருத்துவமனைக்கு வந்து தங்குவது, மருத்துவமனை வளாகத்திலேயே சுற்றுவது என்றிருந்த சத்யாவிற்குப் படிப்பு மீதான பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. அவ்வப்போது எடுத்த விடுமுறைகள் நீண்டதாக மாற, ஒரு கட்டத்தில் பள்ளியை விட்டு நின்று விட்டாள்.

இந்த முறை இருபது நாட்களையும் தாண்டியது, இசக்கியம்மாள் மருத்துவமனை வாசம். செவிலியர் ஒருவர், “இந்த அம்மா வீட்டுக்கே போக மாட்டேங்குது மேடம். அந்த பொண்ணு படிப்பையும் பாழாக்குது” என்று சொல்ல சத்யாவை கூப்பிட்டு, “உனக்கு எத்தனை வயது, என்ன படிக்கிறாய், கடைசியாக எப்பொழுது பள்ளிக்குச் சென்றாய், மறுபடியும் போனால் என்ன?” என்று கேட்டதற்கு, “தெரியல, ஞாபகம் இல்ல, புடிக்கல” என்று எதிர்மறையாகவே பதில் சொன்னாள் சத்யா. அவளுக்கு வயது 12 என்று சொன்னாலும், தோற்றத்தில் ஏழு வயதுடையவள் போலவே இருந்தாள். இரத்த சோகை, விட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாடு எல்லாம் இருந்தது.

“சரி; சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டபோது, “அரசு மருத்துவமனையில் கொடுக்கும் உணவை, இரண்டு பேரும் பங்கிட்டுச் சாப்பிடுவோம்” என்றவள், “இதோ இன்னைக்கு இந்த அக்கா சாப்பாடு வாங்கித் தந்தாங்க” என்று அருகில் இருந்த ஒரு நோயாளியின் உறவினரைக் காட்டினாள். “நேத்து நாங்க வாங்கித் தந்தோம்மா. பாவமாக இருக்கு” என்றார் இன்னொருவர். இத்தனைக்கும் இசக்கியம்மாள் கைவசம் கொஞ்சம் பணம் வைத்திருக்கிறார். “மாதாமாதம் வட்டிப் பணமும் முதியோர் உதவித்தொகையும் வருகிறது” என்றுதான் சொன்னார்.

இசக்கியம்மாளிடம் இதுபற்றிக் கேட்டால், “நான் பள்ளிக்கூடத்துக்குப் போக சொல்றேன், இவ போக மாட்டேங்குறா” என்பதும், “இல்ல.. ஆச்சி தான் என்னை ஆஸ்பத்திரியில், துணைக்கு இருக்கக் கூட்டிட்டு வருது, எனக்கும் அப்படியே படிக்கப் பிடிக்கல” என்று சத்யாவும், மாறி மாறிப் புகார் பட்டியல் வாசித்தனர்.

‘நிச்சயமாக சத்யாவுக்கு பள்ளிக்கூடம், நண்பர்கள், ஆசிரியர்கள் என்ற பாதுகாப்பான வட்டம், உடனடித் தேவை’ என்பதை நான் உணர்ந்தேன். இன்னும் சில நாட்கள் அவள் இந்த உலகின் கோரமான முகத்தைப் பார்க்கக்கூடும். தேதி, மாதம், கடைசியாகப் பள்ளிக்குப் போன காலகட்டம் எதையுமே, அவளுக்கு சொல்லத் தெரியவில்லை.

அவள் படிக்கும் பள்ளியில் ஆசிரியர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு அவளது பெயர் உள்ளிட்ட விபரங்களைச் சொன்னேன். “நாங்களும் பலமுறை சொல்லிப் பார்த்தோம், பலனில்லை, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மூலமாக அவளைத் தொடர்பு கொள்கிறோம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக இப்படி பல மாணவர்களை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர்” என்றார்.

சில மாதங்களுக்கு முன்பாகச் சமூகப் பொறுப்புணர்வு மிக்க அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், என்னைப் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்புக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார். முனைவர் வசந்தி தேவி அவர்களின் வழிகாட்டுதலில், தோழர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் அயராத உழைப்பில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த இயக்கம் செயல்படுகிறது என்றறிந்து நானும் கலந்து கொண்டேன். ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் அதில் இருந்தனர். அந்த இயக்கத்தின் நோக்கத்தைத் தெரிந்து கொண்டபோது, மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

காமராஜர், எம்ஜிஆர் போன்றவர்கள் வளர்த்தெடுத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளால், தமிழ்ச் சமூகம் அடைந்திருக்கும் வளர்ச்சி வார்த்தைகள் விவரிக்க முடியாத ஒன்று. நமது அண்டை மாநிலங்களில் பயணம் செல்லும் போது, வெகு எளிதாக அங்குள்ளோருக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை, நிறைய பார்க்க முடியும்.

கல்வியை முழுவதும் இலவசமாக்கி, கடைக்கோடி கிராமங்கள், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்திலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை நிறுவிப் பல்லாண்டு காலமாகத் தமிழக அரசு பெரும் சாதனையை செய்திருக்கிறது. நம் மாநிலத்தின் இலவச மதிய உணவு திட்டம், புத்தகங்கள், பள்ளிப் பைகள், மிதிவண்டிகள் வழங்கும் திட்டங்களே பிற மாநிலங்களுக்கும் முன்னோடி என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று சமூகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் பலர், அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தாம்.

கொஞ்சம் கொஞ்சமாக அரசுப் பள்ளிகள் பல களையிழந்து வருவதையும், அதில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்பட வேண்டியதையும் உணர்ந்து, இந்த இயக்கம் செயல்பட இருப்பதாக, அந்தக் கூட்டத்தில் அறிந்தேன். அதுவும் பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின் இடைநிற்றல் அதிகமாகி வருகிறது. இந்த லேசான தொய்வு இன்னும் நீடித்தால், இது இன்னும் பல மாணவர்கள் இடைநிற்கக் காரணமாக அமைந்து விடும். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததைக் காரணம் காட்டிப் பல பள்ளிகள் மூடப்படும் அபாயமும், தனியார் பள்ளிகள் பெருகி, இன்னுமின்னும் கல்வியை வியாபாரமாக ஆக்கும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. ஏற்கெனவே கார்ப்பரேட்டுகள் எந்த வாய்ப்பையும் விட்டு வைக்காமல், அரசின் வசமிருக்கும் கல்வி, சுகாதாரம் என்று அனைத்தையும் கைப்பற்றவே துடிக்கின்றனர்.

கொரோனா காலத்தில்  பிள்ளைகள் பள்ளிக்கு வராத சூழலில், கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தாம் இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்கள். அவர்களில் பலர் இந்தப் பள்ளிப் பாதுகாப்பு இயக்கத்தில் ஈடுபாட்டுடன் இணைந்து இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ச்சியாக அவர்கள் இந்த சில மாதங்களில் செய்து வரும் பணிகளைக் கவனித்து வருகிறேன். தினந்தோறும் தங்கள் வீட்டிலோ, பொது இடத்திலோ, வெட்ட வெளியில், வெறும் தரையில் கூட, மாலை நேரங்களில் இந்தத் தன்னார்வலர்கள் வீதி வகுப்புக்களை நடத்துகிறார்கள்.

கல்வி மட்டும் என்றில்லாமல், கதை சொல்லல், சிறிய நாடகங்களை நிகழ்த்துதல் என்று பலவற்றைச் செய்து தங்கள் அனுபவங்களை whatsapp குழுக்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கின்றனர். சில சமயம் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பலர், அருமையாக கதை சொல்வதும், அதை அந்தத் தெருவில் வசிக்கும் பெரியவர்கள் சுற்றி நின்று கேட்கும் காணொளிகளும் ரசிக்கத்தக்கவையாக இருக்கின்றன. சிறிய குழந்தை கதையை வாசிக்க, அதைப் பற்றிய தங்கள் கருத்தை பெரியவர்கள் சொல்வது, கவிதையாக இருக்கின்றது.

இந்தச் சூழலில் பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் வருங்கால திட்டங்கள் குறித்த விளக்க உரையையும், அண்மையில் வாசிக்க நேர்ந்தது. அதில் கடந்த சில மாதங்களில் மட்டும், நேரிலும், இணையம் வாயிலாகவும் அவர்கள் நடத்தி இருக்கும் கூட்டங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கும். 60 வயது தாண்டிய முதியவர்கள் பலர், வீட்டில் ஓய்வெடுத்தபடி இருக்க அதே வயதில் இருந்தாலும், மனதால் இளைஞராக இருக்கும் தோழர் ஜெ.கிருஷ்ண மூர்த்தி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, குழுக்களை அந்தந்த மாவட்டத்திற்கான தன்னார்வலர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க அவர் வந்து உரை நிகழ்த்தியது, ஆச்சரியம் அளித்தது.

இன்னும் பழங்குடியின மக்களுக்காக போராடும் குழுவினர், ஒவ்வொரு ஊரிலும் அரசுப் பள்ளியின் மேல் பாசம் வைத்திருக்கும் ஊர்த் தலைவர்கள், பெற்றோர், பொதுமக்கள் அனைவரையும், இந்த இயக்கம் உள்ளடக்கி இயங்குகிறது. இவர்களது களப்பணிகளை ஆய்வறிக்கையாகத் தொகுத்து அரசுக்கும், அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் வந்து சென்ற உலக வாசிப்பு தினத்தில் அநேகமாக அனைத்து வீதி வகுப்பறைகளிலும் வாசிப்பு நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. வீதி வகுப்பறைகள் நடக்கும் ஒவ்வொரு இடத்திற்கும், ‘வலசை’ போன்ற பல அமைப்புகள் புத்தகங்களைப் பரிசாக வழங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு வீதி வகுப்பறையும், ஒரு வீதி நூலகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்கால திட்டமும், இவர்களிடம் இருக்கிறது.

இயல்பில் ஒரு கதைசொல்லியான நான், இந்த வாசிப்பு மற்றும் கதை சொல்லும் இயக்கத்தைக் கல்வியில் மிக முக்கியமானதொரு முன்னெடுப்பாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு மையத்திலும் கதை சொல்லும் குழந்தைக்கு ‘கதை ராஜா/ கதை ராணி’ என்ற பட்டம் அளிக்கப்பட்டு, அங்கே கிரீடம் சூட்டிய புகைப்படங்களில் குழந்தைகள் முகத்தில் வரும் பெருமிதம் என்னையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. ஒரு குழந்தை சொல்லும் கதையை கிட்டத்தட்ட 200 மையங்களில் உள்ள குழந்தைகள் கேட்பதற்கு தொழில்நுட்பம் உதவி செய்கிறது.

கடந்த மாதத்தில் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக, எங்கள் பகுதியில் நடந்த ஊர்களுடைய ‘ஊர் கூடும் மையங்களின்’ திறப்பு விழாக்களை பற்றி படித்த போது, அதில் கலந்து கொள்ள முடியவில்லை என்று எனக்கு வருத்தமாக இருந்தது. ஒரு கிராமத்தில் ‘நம் பள்ளி, நம் பெருமை!’ என்று ஒரு வாட்ஸ் அப் குழுமத்தை ஆரம்பித்து, அதில் முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் இணைந்து இருக்கின்றனர். பள்ளியைப் பற்றிய உரையாடல் ஊர் முழுவதும் துவங்கியிருக்கிறது என்கிறார், அந்த மையத்தின் பொறுப்பாளர்.

எப்பொழுதும் சண்டையும் சச்சரவாக இருக்கும் ஒரு கிராமத்தில் தொடங்கப்பட்ட ஒரு மையத்தில் பெண்கள் கூடை முடிந்து கொண்டும், பூக் கட்டிக் கொண்டும், தங்கள் ஊரில் கல்வியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி உரையாடினர் என்று செய்தியை படித்த போது, நிஜமாகவே கண்கள் கலங்கின. ஒரு தன்னார்வலர் தன் வீட்டில் வைத்து வாரந்தோறும் கூடுகைகளை நடத்துகிறாராம், அந்தத் தன்னார்வலரின் தாய் வந்தவர்கள் அனைவருக்கும், சுண்டலும் கடுங்காப்பியும் போட்டுத் தருகிறாராம். முன்னாள் மாணவர் ஒருவர் தண்ணீர் குவளைகள் தருவதாகவும், பலர் அவ்வப்போது மாணவர்களுக்கு சத்துள்ள சிற்றுண்டிகளைத் தருவதாகவும், உறுதி தந்திருக்கிறார் களாம். சிறுமியாக அப்படியான ஒரு மையத்தில், கற்பனையில் என்னை நானே நிறுத்திப் பார்த்தேன்.

சரி; நம் சத்யா என்னவானாள்? விஷயத்தைச் சொல்லி ஒரு மாதமாயிற்றே?” என்று நம் ஆசிரியரிடம் கேட்டேன். “இன்னும் ஸ்கூலுக்குப் போக மாட்டேங்குறா. ஆனா நாலு தடவை வீதி வகுப்பறைக்குப் போயிருக்கா. மத்தவங்க கதை சொல்றதைக் கேட்டிருக்கா, அடுத்த தடவை கதை சொல்றியான்னு கேட்டதுக்கு, சரின்னு சொன்னாளாம். கவலைப்படாதீங்க மேடம்! இந்த ஜூன் 1ஆம் தேதி ஸ்கூலுக்குப் போக வச்சுடுவோம்!” என்றார் அந்த ஆசிரியர்.

சிறு துளிகள் சேர்ந்துதானே பெருவெள்ளமாகும். இந்தப் பெருவெள்ளம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்குக்கு நடுவே வரும் பல தடைக் கற்களை உடைத்துக் கொண்டு, புத்துணர்வுடன் பாயட்டும்!

(தொடரும்)

(Dr.அகிலாண்ட பாரதி அவர்கள், 16/05/2023 தேதியிட்ட ‘கண்மணி’ இதழில் எழுதிய கட்டுரை. இந்த முக்கியமான கட்டுரை பரவலாகப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக, அவரது அனுமதியுடன், இங்கு வெளியிட்டுள்ளோம்)

Share this:

2 thoughts on “புது வெள்ளம்

    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் இசை!

Comments are closed.