விநோத விலங்குகள் – 14
வணக்கம் சுட்டிகளே. இந்த மாத விநோத விலங்கு துருவக்கரடி. டென்மார்க், நார்வே, ரஷ்யா, அலாஸ்கா, கனடா ஆகிய நாடுகளின் வட துருவ வளையப் பகுதியில் இவை வசிக்கின்றன. உறையவைக்கும் பனி மூடிய ஆர்ட்டிக் துருவப்பகுதியில் வசிப்பதால் இவை துருவக்கரடி, பனிக்கரடி என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றன. துருவக்கரடியின் உயிரியல் பெயர் Ursus maritimus.
துருவக்கரடியும் கரடி இனத்தைச் சேர்ந்ததுதான். ஆண் துருவக்கரடியின் உடல் 2.8 மீட்டர் நீளம் இருக்கும். எடை சுமார் 800 கிலோ இருக்கும். உலகத்திலுள்ள அனைத்து ஊனுண்ணிகளிலும் மிகப் பெரியது எது என்று கேட்டால் சிங்கம், புலி என்று சொல்வீர்கள். ஆனால் எல்லாவற்றை விடவும் பெரியது துருவக்கரடிதான். 200 கிலோ எடையுள்ள சிங்கத்தை விடவும், 300 கிலோ எடையுள்ள புலியை விடவும் 800 கிலோ எடையுள்ள துருவக்கரடிதானே பெரியது.
இதுவரை பதிவானவற்றுள் மிக அதிக எடை கொண்ட துருவக்கரடி எது தெரியுமா? 1960-ஆம் ஆண்டு வடக்கு அலாஸ்காவில் சுடப்பட்ட ஒரு துருவக்கரடிதான். அதன் எடை 1,002 கிலோ என்றால் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா, சுட்டிகளே?
சாதா கரடியும் கிட்டத்தட்ட துருவக்கரடியின் எடைக்கு சமமாக இருக்கும் என்றாலும் அது முழுக்க முழுக்க ஊனுண்ணி கிடையாது. புல், பழம், கிழங்கு, தேன், மீன், பறவை, விலங்கு, இறந்த விலங்குகளின் உடல் என அனைத்தையும் உண்ணும் அனைத்துண்ணி வகையைச் சேர்ந்தது. ஊனுண்ணி என்பதால் துருவக்கரடியின் கோரைப் பற்கள் சாதா கரடியின் கோரைப் பற்களை விடவும் பெரியதாகவும் கூராகவும் இருக்கும்.
துருவக்கரடியின் பிரதான இரை சீல்களும் மீன்களும் ஆகும். துருவக்கரடிகளின் மோப்பசக்தி மிகத் துல்லியமானது. ஒன்றரை கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தாலும் சீலை தன் மோப்பசக்தியால் எளிதில் கண்டுபிடித்துவிடும். உறைபனிக்குள் ஒரு மீட்டர் ஆழத்தில் எந்த உயிரினம் இருந்தாலும் அதையும் துருவக்கரடியால் கண்டறிந்துவிட இயலும். இவற்றின் கண்பார்வையும் செவிப்புலனும் கூட துல்லியமானவை.
துருவக்கரடி, சீல்களை மட்டுமல்லாது தன்னை விட மிகப்பெரிய, 2000 கிலோ எடையுள்ள வால்ரஸைக் கூட வேட்டையாடும். வெள்ளைத் திமிங்கலம், தந்தமூக்குத் திமிங்கலம் போன்றவற்றையும் வேட்டையாடும்.
துருவக்கரடிகளின் வலிமையான கால்கள் நிலத்தில் வெகு தொலைவு நடப்பதற்கும் அதிக நேரம் தண்ணீரில் நீந்துவதற்கும் ஏதுவாக உள்ளன. துருவக்கரடிகளால் நாட்கணக்கிலும் பல கிலோ மீட்டர் தூரமும் தொடர்ச்சியாக நீந்த முடியும்.

உறைபனி பெய்யும் குளிர்காலம் முழுவதும் பெண் துருவக்கரடிகள் தரைக்குள் ஆழமாக வளை போல பள்ளம் தோண்டி அதற்குள் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் போட்டு வளர்க்கும். அந்த மூன்று மாத காலமும் தாய்க்கரடி உணவு ஏதும் உண்ணாமல் உள்ளேயே இருக்கும். குளிர்காலம் முடிந்து பனி உருக ஆரம்பிக்கும் வேளையில் குட்டிகளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்து இரைதேடும். குட்டிகள் சுமார் 30 மாதங்கள் வரை தாயோடு இருக்கும். துருவக்கரடிகளின் ஆயுட்காலம் சுமார் 30 வருடங்கள்.
காலநிலை மாற்றத்தாலும் உலக வெப்பமயமாதலாலும் வட துருவப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால் துருவக்கரடிகளின் வாழ்விடங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டுவருகிறது எனவும் தற்போது அவற்றின் எண்ணிக்கை 25,000 – 30,000 என்ற அளவிலேயே இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுட்டிகளே, துருவக்கரடிகள் என்னும் பனிக்கரடிகள் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்குடன் உங்களைச் சந்திக்கிறேன்.
(படங்கள் உதவி – Pixabay)