பறவைகள் பலவிதம் – 1 – செக்ரட்டரி பறவை

செக்ரட்டரி_படம்

வணக்கம் சுட்டிகளே!

சூரியக் குடும்பத்தில் நாம் வசிக்கும் இந்த பூமிதான், மனிதர் உட்பட பல்வேறு உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது என்பது உங்க எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இந்தப் பூமியில் அழகான, ஆச்சரியமான, அபூர்வமான பறவைகள் பல உண்டு. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையா? ‘சுட்டி உலக’த்தில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் ‘பறவைகள் பலவிதம்’ தொடர் மூலம் தெரிந்துகொள்ளலாம், வாங்க.

முதலில் நாம் பார்க்கவிருக்கும் பறவை, செக்ரட்டரி பறவை (Secretary bird). இந்தப் பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆப்பிரிக்காவின் சவான்னா புல்வெளிகளில் வசிக்கும் தரைவாழ் பருந்துக்குத்தான் இந்தப் பெயர். தரையில் வாழ்ந்தாலும் வானளாவப் பறப்பதிலும் கில்லாடி. இது இறக்கையை விரித்தால் இரண்டு மீட்டர் நீளம் இருக்கும். ஆனால் பறக்கும் தேவை ஏற்படாததால் பெரும்பாலும் தரையிலேயே திரியும்.

பருந்து இனத்திலேயே மிகவும் உயரமான பருந்து இதுதான். இதன் உயரம் சுமார் ஒன்றரை மீட்டர் இருக்கும். உடல் பருந்தைப்போல இருந்தாலும் கால்கள் கொக்கின் கால்களைப் போல நெடுநெடுவென்று இருக்கும். இது ஒரு நாளைக்கு சுமார் 20 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை நடக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

இதற்கு செக்ரட்டரி பறவை என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? முற்காலத்தில் காரியதரிசிகள் காதோரத்தில் இறகுப்பேனாவை சொருகி வைத்திருந்ததைப் போல இதன் தலை இறகுகள் இருப்பதால் காரியதரிசிப் பறவை என்ற பொருளில் சொல்லப்படுகிறது என்று சிலரும் Sagittarius என்ற இதன் உயிரியல் பெயரை சொல்லத் தெரியாமல் செக்ரட்டரி பறவை ஆக்கிவிட்டார்கள் என்று சிலரும் சொல்கிறார்கள். தமிழில் இது தரைப்பருந்து, நெடுங்கால் பாம்புப் பருந்து, நெடுங்கால் கழுகு என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.

இதன் உயிரியல் பெயரான Sagittarius serpentarius என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? லத்தீன் மொழியில் Sagittarius என்றால் ‘வில்லாளி’ என்றும் serpentarius என்றால் ‘பாம்பு பிடிப்பவர்’ என்றும் அர்த்தம். வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல அதிவேகமாகப் பாய்ந்து பாம்புகளைப் பிடிப்பதால் இப்பெயர். இது உண்மைதான். செக்ரட்டரி பறவைக்குப் பிடித்த இரை பாம்புகள்தான். பாம்புகளைத் தேடித்தேடி இரையாக்கும். விஷமுள்ள பாம்புகளையும் வேட்டையாடுவதால் விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

இவை தரைவாழ் பறவைகள் என்பதால், இவற்றின் வேட்டையும் தரையிலேயே நடைபெறும். முயல், முள்ளம்பன்றி, கீரி, ஆமை, ஓணான், எலி, தரைவாழ் பறவைகள், அவற்றின் முட்டைகள் என கிடைப்பவற்றை எல்லாம் வேட்டையாடித் தின்னும். சில சமயங்களில் மான்குட்டிகளையும் சிறுத்தைக்குட்டிகளையும் கூட வேட்டையாடும். ஆனால் எல்லாமே உயிரோடு இருந்தால்தான் வேட்டையாடும். இறந்த விலங்குகளைத் தொடவே தொடாது.   இவை மற்றப் பருந்து இனங்களைப் போல கால்களால் இரையைக் கவ்வி, அலகால் கிழித்துத் தின்பதில்லை. அலகினால் கவ்வி அப்படியே முழுங்கிவிடுகின்றன.

செக்ரட்டரி பறவைகள் உயரமான மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். குஞ்சுகளுக்கு அப்பா, அம்மா இரண்டுமே இரையூட்டி வளர்க்கும். செக்ரட்டரி பறவை இனத்தின் எண்ணிக்கை, மிகவும் குறைந்து வருவதால்,  இவ்வினத்தை அழிவிலிருந்து பாதுகாக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நன்றி (pc pixabay)

என்ன சுட்டிகளா, செக்ரட்டரி பறவை பற்றி, இப்போது தெரிந்து கொண்டீர்களா? அடுத்த சுவாரசியமான பறவையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றதா? அடுத்த மாதம் சுட்டி உலகம் வரும் வரை காத்திருங்க.

Share this: