பறவைகள் பலவிதம் – 2 -அட்லாண்டிக் பஃபின்(Puffin)

puffin_Pc

வணக்கம் சுட்டிகளே!

சுட்டி உலகத்தின் இந்த மாதப் பறவை எது தெரியுமா? கருப்பு வெள்ளை நிறத்துடன் தூரத்திலிருந்து பார்த்தால் பெங்குயின் போல இருக்கும், வட துருவப் பகுதியைச் சேர்ந்த பஃபின் தான்.

பெங்குயினுக்கும் இதற்கும் பல ஒற்றுமை உண்டு. கடற்பறவையான பஃபினும், பெங்குயினைப் போல, வருடத்துக்கு ஒரே ஒரு முட்டை இடும். இதன் பிரதான உணவும் மீன்தான். பிரமாதமாக நீந்தும். இதற்கும் சவ்வுப் பாதங்கள் உண்டு. பெங்குயினைப் போலவே இவையும் நீரின் ஆழம் வரை மூழ்கிச் சென்று மீன் பிடிக்கும். இவையும் காலனிகளாக வசிக்கும்.

ஆனால் பெங்குயினுக்கும், பஃபினுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. அது பறத்தல். பஃபின்கள் பிரமாதமாகப் பறக்கக்கூடிய பறவைகள். இவை மணிக்கு 88 கி.மீ. வேகத்தில் பறக்கும். அது மட்டுமல்ல, ஒரு நிமிடத்தில் இவை எத்தனை முறை சிறகடிக்கும் தெரியுமா? சுமார் 400 முறை! இன்னொரு வித்தியாசம் பெங்குயின்கள் தென்துருவப் பறவைகள். பஃபின்கள் வடதுருவப் பறவைகள்.

(Thanks – Pc Pixabay)

பஃபின்களுள் அட்லாண்டிக் பஃபின், குடுமி பஃபின், கொம்பு பஃபின் என மூன்று பிரிவுகள் உண்டு. அட்லாண்டிக் பஃபின்தான் மூன்றிலும் சிறியது. அதன் உயிரியல் பெயரான Fratercula arctica என்பதற்கு லத்தீனில் ‘Little brother of North’ என்று அர்த்தம். இவற்றுக்குக் ‘கடல் கிளிகள்’, ‘கடல் கோமாளிகள்’ என்ற செல்லப்பெயர்களும் உண்டு.

வண்ணமயமான அலகுதான் பஃபினின் தனிச்சிறப்பு. இதன் அலகுக்கு தனித்திறமையும் உண்டு. மேல் அலகும், கீழ் அலகும் நேர்க்கோட்டில் பொருந்தாமல் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பொருந்தும் அந்த இடைவெளியில் தான், ஏகப்பட்ட மீன்களை இதனால் வரிசையாகப் பிடித்துவைத்துக்கொள்ள முடிகிறது. அலகில் ஏற்கனவே ஒரு மீன் இருக்கும்போது அடுத்த மீனைப் பிடிக்க அலகைத் திறக்கும்போது, ஏற்கனவே பிடித்த மீன் நழுவிவிடாதா? நழுவாது. ஏனென்றால் பஃபின் தனது சொரசொரப்பான நாக்கால் ஏற்கனவே பிடித்த மீன்களை இறுக்கமாக வாய்க்குள் பிடித்துக் கொள்ளும். ஒரு தடவைக்குக் குறைந்த பட்சம் 10 மீன்கள். அதிகபட்சம் எவ்வளவு தெரியுமா? 62 மீன்களாம். எவ்வளவு ஆச்சர்யம்!

பஃபின் பறவைகளுள் ஆண், பெண் இரண்டுமே ஒரே மாதிரி இருக்கும். பாறை இடுக்கிலோ, அடர்த்தியான புற்களுக்கு நடுவிலோ பொந்து அமைத்து இறகுகளையும் புற்களையும் கொண்டுவந்து கூடு கட்டி, அதில் ஒரு முட்டை இடும். பஃபின்கள் குஞ்சுக்கு இரை கொண்டு வருவதற்காக பல கி.மீ தூரம் பறந்து செல்லும். பஃபின்களால் ஒரு நிமிடம் வரை தண்ணீருக்குள் இருக்கமுடியும். சுமார் 60 மீட்டர் ஆழம் வரை செல்ல முடியும்.  

பஃபின்கள் அவற்றின் இறைச்சிக்காக மனிதர்களால் பெருமளவு வேட்டையாடப் படுகின்றன. காலநிலை மாற்றம், கரையோர ஆக்கிரமிப்பு, அளவுக்கு அதிகமான மீன்பிடிப்பு, கடலில் ஏற்படும் எண்ணெய்க் கசிவு போன்ற காரணங்களாலும் தற்போது இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம்.

பஃபின்கள் பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்களா குழந்தைகளே? அடுத்த சுட்டி உலகத்தில் வேறொரு அதிசயப் பறவை பற்றிப் பார்க்கலாம். அது எந்தப் பறவையாக இருக்கும் என்று யோசித்து வைங்க, பார்க்கலாம். 

நன்றி படங்கள் (Pc Pixabay)   

Share this: