சுட்டிகளே, உலகின் மிக உயரமான பறவை எது என்று கேட்டால் நெருப்புக்கோழி (Ostrich) என்று உடனே சொல்லிடுவீங்க. பறக்க இயலாத பறவைகளுள் மிகப் பெரியதும் அதுதான். இரண்டாவது பறவையான ஈமு (Emu) பற்றியும் ஓரளவு அறிந்திருப்பீங்க. பறக்க இயலாத பறவைகளின் வரிசையில் மூன்றாவதாக உள்ள காசோவரி (Cassowary) பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போறீங்க. உயரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் உடல் எடையில் காசோவரிக்குதான் இரண்டாவது இடம்.
காசோவரி ஆஸ்திரேலியாவின் மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் பறவை. விலங்குகளைப் போல இதன் தலையில் கொம்பு இருக்கும். ஆச்சர்யமாக இருக்கிறதா? மழைக்காட்டில் உள்ள வெகு உயரமான மரங்களிலிருந்து கீழே விழும் பழங்களால் இதன் தலைக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க இயற்கை தந்துள்ள பாதுகாப்புக் கவசம்தான் அது.
காசோவரி பறவை கூடு கட்டாது. அம்மா பறவை தரையில் இலை தழைகளைக் குவித்து அதில் நான்கைந்து முட்டைகளை இடும். பிறகு அந்த முட்டைகளை அப்பா பறவையின் பொறுப்பில் விட்டுவிட்டு அது போய்விடும். அப்பா பறவை சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் சுமார் இரண்டு மாதங்கள் முட்டைகளைக் கண்ணும் கருத்துமாக அடைகாக்கும். குஞ்சுகள் பொரிந்த பிறகு ஒன்பது மாதங்களுக்கு அவற்றைத் தன்னோடு வைத்துப் பாதுகாத்து வளர்க்கும். எங்கே உணவு கிடைக்கும், எங்கே தண்ணீர் கிடைக்கும், ஆபத்து நேரத்தில் எப்படி தற்காத்துக் கொள்வது போன்றவற்றைக் குஞ்சுகளுக்குக் கற்றுக் கொடுக்கும்.

காசோவரி பறக்க இயலாத பறவை என்றாலும் நன்றாக நீந்தும். மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் ஓடும். மேலும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்றவற்றிலும் வெகு திறமைசாலி.
காசோவரி பறவைகள் மரங்களிலிருந்து உதிர்ந்துகிடக்கும் பழங்களையும் புழு பூச்சிகளையும் சாப்பிடும். சாப்பிடும் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அல்ல, அப்படியே விழுங்கிவிடும். வாழைப்பழம், ஆப்பிள், ப்ளம் போன்ற பெரிய பழங்களைக் கூட ஒரே வாயில் லபக்கென்று விழுங்கிவிடும். இவற்றின் எச்சத்தின் மூலம் விதை பரவல் நடைபெற்று காடுகள் தழைப்பதால் காசோவரிகள் ‘மழைக்காடுகளின் தோட்டக்காரர்கள்’ என்று பெருமையாகக் குறிப்பிடப்படுகின்றன.
காசோவரிகள் பொதுவாக யாரையும் தாக்காது. ஆனால் ஆபத்து வருவதாக உணர்ந்தால் எகிறிப் பறந்து தன் வலிமையான கால்களால் ஓங்கி ஒரு உதை விடும். மூன்று அங்குல நீளமுள்ள கூரான விரல்கள் கத்தி போல எதிரியைத் தாக்கிக் கொன்றுவிடும். அதனாலேயே ‘உலகின் மிக ஆபத்தான பறவை’ என்ற பெயரை இது பெற்றுள்ளது.
சுட்டிகளே, இன்று புதிதாக காசோவரி என்னும் பறவை பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவை பற்றிப் பார்க்கலாமா?
(படங்கள் – கீதா)