பாகு மரம்

மேப்பிள் மரம்

மரம் மண்ணின் வரம் – 5

வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயரைப் பார்த்தவுடன் சர்க்கரையிலிருந்துதானே பாகு காய்ச்சுவாங்க? மரத்திலிருந்து எப்படி பாகு கிடைக்கும்? என்று யோசிப்பீங்க. மேப்பிள் மரத்திலிருந்து ‘மேப்பிள் சிரப்’ எனப்படும் இனிப்பான பாகு கிடைக்கிறது. தேன், சர்க்கரைப் பாகு போலவே மேப்பிள் சிரப்பும் மிகவும் இனிப்பாக இருக்கும். இது உணவில் பலராலும் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.

மேப்பிள் மர வகை நூற்றுக்கு மேல் இருந்தாலும் சிரப் தயாரிப்பதற்கு குறிப்பிட்ட சில மரங்களே உதவுகின்றன. அவற்றுள் முக்கியமானது Sugar maple எனப்படும் இனிப்பு மேப்பிள் மரம். இதிலிருக்கும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாலேயே இந்தப் பெயர் இடப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் Acer saccharum.

மேப்பிள் சிரப் எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா? ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்திற்கு முன்பு மேப்பிள் மரங்களின் தண்டு, கிளை, வேர் போன்ற பகுதிகளில் மாவுச்சத்து இனிப்பு நீராக சேமிக்கப்பட்டிருக்கும். மேப்பிள் சிரப் தயாரிப்பவர்கள், வசந்த காலத்தில் மேப்பிள் மரத் தண்டுகளில் துளைகள் இட்டு சொட்டுச் சொட்டாக வடியும் இனிப்பு நீரைக் குழாய்கள் மூலம் கொண்டுவந்து மரப் பீப்பாயில் சேகரிக்கிறார்கள். பிறகு அது நன்கு காய்ச்சப்படுகிறது. நீர் முழுவதும் ஆவியான பிறகு கொழகொழப்பான சுவையான மேப்பிள் சிரப் கிடைக்கும்.

சுமார் 40 லிட்டர் இனிப்பு நீரைக் காய்ச்சினால் கிடைக்கும் சிரப்பின் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு லிட்டர் மட்டுமே.

பருவ காலத்துக்கு ஏற்றபடி இலைகள் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் அழகுக்காகவே மேப்பிள் மரங்கள் பூங்காக்களிலும் பெரும் வளாகங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, அரக்கு என இலையுதிர்காலத்தில் மேப்பிள் மர இலைகள் நிறம் மாறுவது அவ்வளவு அழகாக இருக்கும். இலையுதிர்காலத்தின் இறுதியில் மரம் இலைகளை முழுவதுமாக உதிர்த்துவிடும்.

கனடா நாட்டின் தேசியக்கொடியில் இருப்பது மேப்பிள் இலையே. கனடாவின் தேசிய மரமும் மேப்பிள் மரம்தான். இனிப்பு மேப்பிள் மரம் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த நியூயார்க் உள்ளிட்ட சில மாநிலங்களின் மாநில மரமாகவும் உள்ளது. 

மேப்பிள் மரக் கட்டைகள் பேஸ்கட் பால் மட்டை, கூடைப்பந்து தளம் போன்றவற்றைத் தயாரிக்கவும், கிடார், வயலின், பியானோ போன்ற இசைக்கருவிகளின் பாகங்களைத் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

பொதுவாக மேப்பிள் மரங்கள் 200 முதல் 300 வருடங்கள் வரை வாழும். கனடாவிலுள்ள ஓன்டோரியா மாகாணத்தில் உள்ள 500 வயது மேப்பிள் மரம்தான் உலகின் மிகப் பழமையான மேப்பிள் மரமாகும்.

சுட்டிகளே, பாகு மரமான மேப்பிள் மரம் பற்றி இப்போது அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு அரிய மரத்தைப் பற்றிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன். 

(படம் – கீதா)  

Share this: