நிக்கோபார் புறா

நிக்கோபார் புறா

பறவைகள் பல விதம் – 17

வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நீங்கள் அறிந்துகொள்ளப் போகும் பறவையின் பெயர் நிக்கோபார் புறா. புறா குடும்பத்தின் கொலம்பிடே பேரினத்தைச் சேர்ந்த ஒரே ஒரு இனம் நிக்கோபார் புறா இனம்தான்.  நிக்கோபார் தீவுகளில் பெருமளவு காணப்படுவதால் இப்பெயர் பெற்றுள்ளது. நிக்கோபார் தீவுகளில் மட்டுமல்லாது அந்தமான், இந்தோனேஷியத் தீவுகள், மலேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பப்புவா நியூகினி, வியட்நாம் என தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியத் தீவுகள் பலவற்றிலும் இப்புறாக்கள் காணப்படுகின்றன.

நிக்கோபார் புறாக்களின் உடல் இறகுகள் கருஞ்சாம்பல் நிறத்தில் இருந்தாலும் கழுத்து மற்றும் முதுகுப் புற இறகுகள் மினுமினுக்கும் பச்சை, மஞ்சள், வயலட், நீல நிறங்களில் காணப்படும். இவற்றின் கழுத்தைச் சுற்றி பிடரி மயிர் போன்ற நீளமான பளபளப்பான இறகுகள் காணப்படும். அதன் காரணமாகவே உலகின் மிக அழகிய பறவைகளின் பட்டியலில் முதல் பத்து இடத்துக்குள் நிக்கோபார் புறாவும் இடம்பெற்றுள்ளது.

நிக்கோபார் புறாக்கள் தீவுப் பறவைகள் என்ற போதும் ஒரே தீவில் வசிப்பதில்லை. அவை கூட்டம் கூட்டமாக தீவு விட்டுத் தீவு சுற்றிக்கொண்டே இருக்கும். மற்றப் புறாக்களைப் போலவே இந்தப் புறாக்களும் தரையிலிருந்து இறக்கைகளை அசைத்துப் பறக்கத் தொடங்கும்போது விசில் சத்தம் எழும்.

நிக்கோபார் புறாக்கள் தலையிலிருந்து வாலிறகின் நுனி வரை சுமார் 40 செ.மீ. இருக்கும். இவற்றின் வாலிறகு குட்டையாகவும் வெள்ளை வெளேர் என்றும்  இருக்கும். விடியற்காலையிலும் மாலையிலும் கூட்டமாக கடலுக்கு மேலே பறக்கும்போது, முன்னால் பறக்கும் பறவைகளின் வெள்ளை நிற வால்கள் விமானங்களின் வால்விளக்குகளைப் போல வழிகாட்டும். இருட்டிலும், பனி மூட்டத்திலும், மற்றப் பறவைகள் திசைமாறிப் பறந்துவிடாமல் ஒரே பாதையில் பறந்துசெல்ல வாலின் வெள்ளை நிறம் உதவுகிறது.   

நிக்கோபார் புறாக்கள் தானியங்கள், பழங்கள், மொட்டுகள் போன்ற தாவர உணவையே உட்கொள்ளும். மிக அரிதாகவே பூச்சிகளைத் தின்னும்.

நிக்கோபார் புறாக்கள் ஒரு தடவை ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் பிரியாது. இவை இனப்பெருக்கக்காலத்தில் தாழ்வான மரக்கிளைகளில், காய்ந்த சுள்ளிகளைக் கொண்டு ஒழுங்கற்ற கூட்டைக் கட்டும். நிக்கோபார் புறா ஒரு ஈட்டுக்கு ஒரே ஒரு முட்டைதான் இடும். முட்டையை ஆண் பெண் இரண்டுமே மாறி மாறி அடைகாக்கும். சுமார் 17 நாட்களுக்குப் பிறகு குஞ்சு பொரிந்து வரும். அம்மா புறாவும் அப்பா புறாவும் குஞ்சுக்கு மூன்று மாத காலம் வரை தொண்டைப் பால் ஊட்டி வளர்க்கும். தொண்டைப் பால் பற்றி ஏற்கனவே மரகதப்புறா பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். நினைவிருக்கிறதா, சுட்டிகளே?

இரைப்பைக் கற்களுக்காகவும், இறைச்சிக்காகவும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் நிக்கோபார் புறாக்கள் பெருமளவு வேட்டையாடப்படுகின்றன. இரைப்பைக் கற்களா? அப்படியென்றால் என்ன என்று கேட்கிறீர்களா?

உணவை அரைத்து விழுங்குவதற்கு ஏற்ப பற்கள் இல்லாத சில பறவைகளும் விலங்குகளும் அவற்றின் உணவோடு சின்ன சின்னக் கற்களையும் சேர்த்தே விழுங்கும். பற்களின் வேலையை உணவுக்குழாயில் உள்ள கற்கள் செய்துவிடும். கரடுமுரடாய் விழுங்கப்பட்டக் கற்கள் நாளடைவில் கூர் மழுங்கி அழகிய கூழாங்கற்களைப் போல் ஆகிவிடும். இந்தக் கற்களுக்கு அலங்கார நகைத் தயாரிப்பில் மதிப்பு அதிகம்.

வேட்டை மற்றும் கள்ளக்கடத்தல் காரணமாக இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தற்போது காடுகளில் வசிக்கும் நிக்கோபார் புறாக்களின் எண்ணிக்கை ஆயிரம் மட்டுமே என்பதால் இவ்வினம், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுட்டிகளே, நிக்கோபார் புறாவைப் பற்றி இப்போது அறிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு புதிய பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(pc – Pixabay)

Share this: