நடக்கும் மரம்

walking tree

மரம் மண்ணின் வரம் – 4

வணக்கம் சுட்டிகளே! தலைப்பைப் பார்த்தவுடன் என்னது, மரம் நடக்குமா? என்று ஆச்சர்யத்தோடு கேட்பீர்கள். நடப்பது என்றால் நம்மைப் போல நடப்பது அல்ல. மெதுவாக நகர்வது. ஆனால் கால்களைப் போன்ற அதன் வேர்களைப் பார்க்கும்போது நடக்கும் என்று சொன்னால் நம்பாமல் இருக்க முடியாது.

பொதுவாக ஒரு மரத்தின் விதையை ஒரு இடத்தில் ஊன்றினாலோ அல்லது மரக்கன்றை நட்டாலோ அது அதே இடத்தில்தான் வளர்ந்து மரமாகும். மரமான பிறகும் அதே இடத்தில்தான் தொடர்ந்து இருக்கும். மரத்தைக் கொண்டு இடத்தை அடையாளம் காண்பது நமக்கு வழக்கமான ஒன்று. ஆனால் ஒரு மரம் தன்போக்கில் நடந்துகொண்டே இருந்தால் அந்த மரத்தை எப்படி அடையாளமாகக் கொள்வது?   

Socratea exorrhiza என்ற தாவரவியல் பெயர் கொண்ட ‘நடக்கும் மரம்’ பனை வகையைச் சேர்ந்தது. இதன் நகர்வு காரணமாக ‘நடக்கும் மரம்’, ‘நடக்கும் பனை’ என்ற காரணப்பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.

நடக்கும் மரம்
படம்-கீதா மதி

இதன் வேர்கள் மரத்தின் கீழ்ப்பகுதித் தண்டிலிருந்து உருவாவதால் பாதி வேர்களை நம்மால் நன்றாகப் பார்க்க முடியும். மரத்தைச் சுற்றி எல்லாப் பக்கத்திலிருந்தும் சின்னச் சின்னக் கட்டைகளால் முட்டுக்கொடுத்திருப்பது போல வேர்கள் அமைந்திருக்கும். படத்தைப் பார்த்தால் அது உங்களுக்குப் புரியும்.

அமேசான் மழைக்காடுகளில் காணப்படும் இவை தாவரவியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் பல காலமாக ஆச்சர்யத்தில் ஆழ்த்திவந்தன.

போதுமான சூரிய ஒளி கிடைக்காத போது சூரிய ஒளி கிடைக்கும் திசை நோக்கி புதிய வேர்கள் வளர ஆரம்பிக்கும். புதிய வேர்கள் உருவானதும் பழைய வேர்கள் காய்ந்துவிடும். அப்போது மரமும் சற்று நகர்ந்திருக்கும். இந்தப் பனை மரங்களின் வேர்கள் நகர்ந்துசெல்வதாகவே ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் நம்பினர். பிறகுதான் புதிய வேர்களின் மூலம் அவற்றின் நகர்வு இருப்பதை அறிந்தனர். இருப்பினும் இந்த அதிசய மரத்தைக் குறித்த ஆய்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

நடக்கும் மரம் ஒரு நாளைக்கு சுமார் 2 செ.மீ முதல் 3 செ.மீ. வரை நகரக்கூடியது. தினமும் பார்க்கும்போது அதை உணர முடியாது. ஒரு வருடம் கழித்து, அளந்து பார்த்தால் முந்தைய இடத்திலிருந்து நகர்ந்திருப்பதை அறிய முடியும். மரம் ஒரு வருடத்துக்கு சுமார் 20 மீட்டர் தூரம் வரை நகரும்.

சில வருடங்கள் கழித்துப் பார்த்தால் முந்தைய இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் நகர்ந்து இருக்கும். இப்படி சூரிய வெளிச்சத்தையும் நீரையும் தேடி காட்டுக்குள் மரம் நடந்துகொண்டே இருக்கும்.

வாழும் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் பாங்கு மனிதர்கள், விலங்குகள், பறவைகளுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் இருப்பது இதன் மூலம் தெளிவாகிறது அல்லவா?

சுட்டிகளே, நடக்கும் மரம் பற்றி அறிந்துகொண்டீர்களா? வியப்பாயிருக்கிறது அல்லவா? அடுத்த மாதம் வேறொரு அதிசய மரத்தோடு சந்திப்போம்.

(படங்கள் – கீதா)

Share this: