‘மரம் மண்ணின் வரம்’ – 1 – பாட்டில் மரம்

Bottle_tree_pic

வணக்கம் சுட்டிகளா!

‘மரம் மண்ணின் வரம்’ என்ற இத்தொடரில், உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் அரிய வகை மரங்களைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். முதலாவதாக வருகிறது, Bottle tree  என்ற பாட்டில் மரம்.

பெயரைக் கேட்டதும், மரத்தில் பாட்டில் காய்க்குமா என்றுதானே கேட்கிறீர்கள்? பாட்டில் காய்க்காது தான். பிறகு ஏன் இந்தப் பெயர்? இந்த மரத்தண்டு பாட்டில் வடிவத்தில் இருப்பதாலும், பாட்டிலில் தண்ணீர் பிடித்து வைப்பது போல இந்த மரமும் கிடைக்கும் தண்ணீரையெல்லாம் சேமித்து வைத்துக்கொள்வதாலும், பாட்டில் மரம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. மரத்தின் தண்டுகள் சுமார் 4 மீட்டர் குறுக்களவுடன் பீப்பாய் போல உருண்டு திரண்டு இருப்பதால், Barrel tree என்ற பெயரும் இதற்கு உண்டு. இம்மரத்தின் தாவரவியல் பெயர் Brachychiton rupestris.

பாட்டில் மரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா. இது சக்குலன்ட் எனப்படும் சதைப்பற்றுள்ள தாவர வகையைச் சேர்ந்தது. கிட்டத்தட்ட 20 மீட்டர் உயரம் வளரக்கூடியது. எக்கச்சக்கமான கிளைகளுடன் ஆலமரம் போல பரந்து விரிந்து வளரக்கூடிய மரம் என்பதால் பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படுவதில்லை.

(Pic- Geetha Mathi)

ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்கள் வறட்சிக்காலங்களில் இந்த மரத்தண்டில் துளைகள் போட்டு அதிலிருந்து வடியும் நீரைக் குடிநீராகவும், விதைகள், வேர்கள், மரத்தண்டின் சதைப்பற்றான பகுதி போன்றவற்றை உணவாகவும் பயன்படுத்தி இருக்கின்றனர். பாட்டில் மரத்தண்டிலிருந்து கிடைக்கும் நாரை, மீன்பிடி வலைகள் பின்னவும் கயிறு திரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். இப்போதும் கடுமையான வறட்சிக்காலங்களில் ஆஸ்திரேலிய விவசாயிகள் இம்மரத்தை வெட்டித் துண்டுகளாக்கி கால்நடைகளுக்கு உணவளிக்கின்றனராம்.

என்ன குழந்தைகளே! பாட்டில் மரத்தைப் பார்த்தும், அது பற்றிய தகவல்களை அறிந்தும், ஆச்சரியமாக இருக்கிறதா? இதே போன்று வேறொரு அரிய வகை மரத்தைப் பற்றி, அடுத்த சுட்டி உலகத்தில் தெரிந்துகொள்ளலாம். தயாரா இருங்க.

Share this: