மரம் மண்ணின் வரம் – 2 – டிராகன் இரத்தமரம்

Dragon_blood_tree_pic

வணக்கம் சுட்டிகளே!

இந்த மாதம் நாம் பார்க்கவிருப்பது,  Dragon blood tree  எனப்படும் மரத்தைப் பற்றி. பெயர்தான் பயங்கரமாக இருக்கிறது. ஆனால் அழகான, மிகவும் பயனுள்ள மரம் இது. மா, பலா, ஆல் போன்ற மரங்களின் இலையைக் கிள்ளினாலோ, கிளையை ஒடித்தாலோ பால் போன்ற திரவம் வடிவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த மரத்திலிருந்து இரத்தம் வடியும். அதாவது இதன் பால் சிவப்பு நிறத்தில் இரத்தம் போல இருக்கும். அதனால்தான் இதற்கு ‘டிராகன் இரத்த மரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுவிட்டது.

ஒரு வித்திலைத் தாவரமான இது சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரும். ஒவ்வொரு கிளையும் இரண்டிரண்டு கிளைகளாகப் பிரிந்து வளரும். கிளையின் நுனியில் மட்டும் இலைகள் காணப்படும். நன்கு வளர்ந்த மரம் விரிந்த குடை போலத் தோற்றமளிக்கும். இதன் இலை 60 செ.மீ. நீளமும் 3 செ.மீ. அகலமும் கொண்டிருக்கும். இது ஏமன் நாட்டைச் சேர்ந்த சோகோட்ரா தீவைத் தாயகமாகக் கொண்டது. இதற்கு சோகோட்ரா டிராகன் மரம் என்ற பெயரும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் Dracaena cinnabari.  

கிளைகளின் நுனியில் கொத்துக்கொத்தாய்ப் பூ பூக்கும். பச்சை நிறக் காய்கள் கருப்பு நிறத்துக்கு மாறி நன்கு பழுத்தபின் செக்கச்செவேலென்று இருக்கும். ஈச்சம்பழங்களைப் போல கொத்துக்கொத்தாகக் காய்க்கும் அவற்றைப் பறவைகள் விரும்பி உண்ணும். பறவை எச்சத்தின் மூலம் விதைபரவல் எளிதாக நடைபெறுகிறது.

பழங்காலத்தில் ரோமானியர்களும், கிரேக்கர்களும் தங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் சர்வரோக நிவாரணியாக இம்மரப் பிசினைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்போதும் கூட வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அழுத்தமான நிறத்தைப் பெற்றிருப்பதால் சாயத்தொழிலில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. டிராகன் இரத்த மரப் பிசினிலிருந்து வாசனைத் திரவியம் கூட தயாரிக்கப்படுகிறது.  

Share this: