வணக்கம் சுட்டிகளே, மரத்தின் பெயரைக் கேட்டு, இதென்னடா புது மரம் என்று ஆச்சர்யப்படுறீங்களா? ஆச்சர்யப்படாதீங்க. நமக்குத் தெரிந்த நாகலிங்க மரம்தான் இது. நாகலிங்க மரத்தின் காய்கள் பார்ப்பதற்கு பீரங்கிக் குண்டுகளைப் போல இருப்பதால் ஆங்கிலத்தில் ‘Cannon ball tree’ எனப்படுகிறது. நாகலிங்க மரத்தின் பூக்கள், பாம்பு படமெடுத்து சிவலிங்கத்துக்கு குடைபிடித்திருப்பதைப் போல் இருப்பதால் ‘நாகலிங்க மரம்’ என்று தமிழில் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் இந்துக் கோவில்களிலும் இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் புத்தக் கோவில்களிலும் இம்மரங்களைக் காணலாம். இவற்றின் தாயகம் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள். நாகலிங்க மரத்தின் அறிவியல் பெயர் Couroupita guianensis.
நாகலிங்க மரம் சுமார் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மற்ற மரங்களைப் போல இதில் கிளைகளில் பூ பூக்காது. மரத்தின் தண்டிலிருந்து நீண்டு வளரும் மெல்லிய காம்புகளில் சடைசடையாகப் பூக்கள் பூக்கும். பூக்களின் இதழ்கள் வெளிப்புறம் மஞ்சள் நிறமாகவும் உட்புறம் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.
மிகுந்த நறுமணம் கொண்ட இம்மரத்தின் பூக்களில் தேன் கிடையாது என்பது ஆச்சர்யம்.

பூக்கள் காயாவதற்கு ஒன்றரை வருட காலம் தேவைப்படும். அதற்குப் பிறகும் ஒரு வருடத்துக்கு மேல் காய்கள் மரத்திலேயே இருக்கும். பெரிய பெரிய இரும்புக் குண்டுகளைப் போல மரத்தின் தண்டிலிருந்து கொத்துக் கொத்தாகக் காய்களும் பழங்களும் காய்த்துத் தொங்குவதைப் பார்த்திருப்பீங்க.
நன்கு முற்றியவுடன் பழம் தானாகவே கீழே விழும். பழம் சதைப்பற்றுடன் இருந்தாலும் துர்நாற்றம் வீசுவதால் நம்மால் சாப்பிட முடியாது. விலங்குகளும் பறவைகளும் பழத்தைத் தின்பதன் மூலம் விதை பரவல் நடைபெறுகிறது.
பழத்தின் ஓடு கொட்டாங்குச்சி போல மிகக் கடினமாக இருக்கும். பழத்தின் ஓட்டினை தென்னமெரிக்க மக்கள் கிண்ணம் போலப் பயன்படுத்துகிறார்களாம்.
உயரமான மரத்திலிருந்து அவ்வளவு பெரிய பழம் கீழே விழும்போது ‘டமால்’ என்ற சத்தத்தோடு வெடித்து சிதறும். ‘பீரங்கிக் குண்டு மரம்’ என்ற பெயர் எவ்வளவு பொருத்தம் பாருங்க.
சுட்டிகளே, காய்களோடு இருக்கும் நாகலிங்க மரத்துக்கு அருகில் போகாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சரியா? அடுத்த மாதம் வேறொரு மரம் பற்றித் தெரிந்துகொள்ளலாம், அதுவரை காத்திருங்க.
(படங்கள் – ஞா.கலையரசி & கீதா)