மேண்ட்ரில்

Mandrill_cover

விநோத விலங்குகள் – 4

சுட்டிகளே, உங்களில் எத்தனைப் பேர் The Lion King படம் பார்த்தீங்க? அதில் ராஜகுருவாக வரும் ரஃபிகி என்ற குரங்கை நினைவிருக்கிறதா? ஆலீவ் பச்சை நிற உடல், வெண்மஞ்சள் முடி மற்றும் தாடி, பளீர் சிவப்பு மூக்கு, நீல நிறக் கன்னங்கள், மஞ்சள் நிறக் கண்கள், ஊதா நிறப் பின்பக்கம் – இப்படியான தோற்றத்தோடு காணப்பட்டது அக்குரங்கு. உண்மையிலேயே இப்படி ஒரு குரங்கு இருக்கிறதா அல்லது கார்ட்டூன் படத்துக்காக கற்பனையாக உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் பலருக்கும் வந்திருக்கும்.

சொன்னால் நம்ப மாட்டீங்க. உண்மையிலேயே அந்தக் குரங்கு இருக்கிறது. மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் மேண்ட்ரில் (Mandrill) எனப்படும் குரங்குதான் அது. சில முதிர்ந்த குரங்குகளின் முகத்தில் நீலநிறம் வெளிறி வெள்ளை நிறத்தில் காணப்படும். தூரத்திலிருந்து பார்க்கும்போது நாமம் போட்டிருப்பதைப் போல இருக்கும். 

மேண்ட்ரிலுக்கு குடுமிக் குரங்கு, ரிப்பன் மூக்கு குரங்கு என்ற காரணப்பெயர்களும் உண்டு. குரங்கு இனத்திலேயே வண்ணமயமானது மட்டுமல்ல, மிகப்பெரியதும் ஆண் மேண்ட்ரில்தான். பெண் மேண்ட்ரில் அதில் பாதி அளவுதான் இருக்கும். இவை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை ஒரு குட்டி போடும்.

கொரில்லாதானே குரங்குகளில் பெரியது? மேண்ட்ரில் எப்படிப் பெரியதாகும்? என்று கேட்பீர்கள். Ape எனப்படும் வாலில்லாக் குரங்கு இனத்தில் பெரியது கொரில்லா. Monkey எனப்படும் குரங்கு இனத்துள் பெரியது மேண்ட்ரில். மேண்ட்ரிலுக்கு வால் இருந்தாலும் மற்றக் குரங்குகளைப் போல நீளமாக இருக்காது. பத்து செ.மீ. அளவில் மிகவும் குட்டியாக இருக்கும்.

மேண்ட்ரில்கள் பெரும்பாலும் மரங்கள் அடர்ந்த மழைக்காடுகளில் வாழும். சில சவான்னா புல்வெளியிலும் வாழும். மேண்ட்ரில் ஒரு அனைத்துண்ணி. இலைகள், பழங்கள், கிழங்குகள், காளான்கள் இவற்றோடு புழு பூச்சிகள், தவளைகள், பாம்பு, பல்லி, பறவை முட்டைகள் என எது கிடைத்தாலும் தின்னும். இவற்றுக்கு 5 செ.மீ. நீளமான, கூர்மையான கோரைப்பற்கள் உண்டு. ஆனால் வாயை ஆ…வென்று பெரிதாகத் திறந்தால் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும்.

மேண்ட்ரில்கள் கூட்டமாக வாழும். கூட்டம் என்றால் பெருங்கூட்டம். ஐநூறு முதல் எண்ணூறு வரை கூட இருக்கும். ஒரு கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தலைமைக் குரங்குகள் இருக்கும். ஆனால் தற்போது அவை வாழுமிடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது.

மேண்ட்ரில்களுக்கு நடப்பது மிகவும் பிடிக்கும். தலைமைக் குரங்குகள் கூட்டத்தை அழைத்துக்கொண்டு தங்கள் எல்லைக்குள் உலா வரும்.

தூங்கும்போது மட்டும் மேண்ட்ரில்கள் மரத்தில்தான் தூங்கும். தினமும் ஒரே மரத்தில் தூங்குவது அவற்றுக்குப் பிடிக்காது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மரத்தைத் தேர்ந்தெடுத்து அதில் தூங்கும்.

கிரேக்கப் புராணத்தில் மனிதத் தலையும் விலங்கின் உடலும் கொண்ட ஸ்பிங்ஸ் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த மேண்ட்ரிலும் அதுபோல் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் இதன் உயிரியல் பெயர் Mandrillus sphinx என இடப்பட்டுவிட்டது.

சுட்டிகளே, இப்போது மேண்ட்ரில் பற்றித் தெரிந்துகொண்டீர்களா? இனி இதை எங்கே பார்த்தாலும் சரியாக அடையாளம் கண்டுகொள்வீங்க, இல்லையா?

(படங்கள் உதவி – Pixabay)

Share this: